தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பத்துப்பாட்டில் பாதி - ஆற்றுப்படை

4.4 பத்துப்பாட்டில் பாதி - ஆற்றுப்படை

    இனிய நண்பர்களே! புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் சிறு
பாடல்களாக அமைந்துள்ள ஆற்றுப்படை என்னும் துறை, தன்
சிறப்பின் காரணத்தால் நெடும்பாடலாகப் பாடப்படுவதாக ஆனது.
சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில், பாதி இடத்தை அது
பிடித்துக் கொண்டது. ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படையாக
அமைந்துள்ளன. அவற்றைப் பற்றி இனி வரும் பாடப்
பகுதியில் பார்க்கலாமா?
4.4.1 திருமுருகாற்றுப்படை
    துன்பம் நீங்கி வாழ்வதே இன்பம். பொருள்செல்வம்
இருந்தால்தான் இந்த     உலகில் இன்பமாக வாழலாம்.
இதைப்போல் இறப்புக்குப் பின் உள்ள மறுமை உலக
வாழ்க்கைக்கு அருள்செல்வம்     வேண்டும். பொருள்
செல்வத்தை அடைவதற்கு ஒரு வள்ளலிடம் செல்வதற்கு
வழி சொல்லுபவை, நாம் முன்பு கண்ட     ஆற்றுப்படைப்
பாடல்களும், பத்துப்பாட்டின் மற்ற நான்கு ஆற்றுப்படை
இலக்கியங்களும்! அருள் செல்வத்தை அடைவதற்காக, உலகை
எல்லாம் படைத்து, அளித்து, காக்கும் வள்ளல் ஆகிய
இறைவனிடம் செல்வதற்கு வழி கூறுவது திருமுருகாற்றுப்படை.
இதற்கு முருகு, புலவர் ஆற்றுப்படை     என்ற வேறு
பெயர்களும் உள்ளன.

     317 அடிகள் கொண்ட இப்பாட்டை இயற்றியவர் மதுரைத்
தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவரான நக்கீரர் ஆவார்.

     பொருளை எவரிடத்தில் இருந்தும் எந்த வழியிலும் பெற
முடியும். ஆனால் அருள் உள்ளம் என்பது கடவுளால் மட்டுமே
அருளப்படுவது. அதைப் பெறுவதே மறுமை வாழ்வுக்குச்
சிறந்தது என்னும் உயர்ந்த நோக்கத்துடன், முருகனிடமிருந்து
அருளைப் பெற்ற ஓர் அரும்புலவன் மற்றவனுக்கு அதைப் பெற
வழி சொல்வதாக, ஆற்றுப்படையாக     நக்கீரர் இந்நூலை
இயற்றியுள்ளார்.

  • முதல் உவமை; முதன்மை உவமை
  •     உலக உயிர்கள் எல்லாம் மகிழ்ந்து வாழக் கடவுள் புரியும்
    அருட்செயல்களை உணர்ந்து பார்க்கும் உள்ளம்தான், பிறர்
    நலனுக்காக வாழும் அருள் உள்ளமாய் ஆகும். அந்த
    இறையருளை உணர்த்துவதே இந்த நூலின் முதன்மை நோக்கம்
    ஆகும்.

         தன் ஊர்தியாகிய தோகை மயில் மீது சிவந்த ஒளிமிக்க
    மேனியுடன் தோன்றும் முருகனின் தோற்றத்துக்கு, உலகம்
    எல்லாம் மகிழக் காலையில் நீலக்கடல் அலைகளின் மீது எழும்
    செங்கதிரோனின் தோற்றத்தை உவமையாகக் கூறி, நூலைத்
    தொடங்குகிறார் நக்கீரர்,

         உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
    பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு... (1-2)

    (உவப்ப = மகிழ; வலன்ஏர்பு = வலப்பக்கமாகச் சுற்றி; திரிதரும் =
    வலம்வரும்)

        இந்த உவமை, முருகனின் அழகிய தோற்றப் பொலிவை
    மட்டும் சுட்டவில்லை. இருளை அழித்தல், ஒளிவழங்கி உலகைக்
    காட்டுதல், வெப்பம் என்னும் உயிர்ச்சத்தை உலக உயிர்களுக்கு
    எல்லாம் ஊட்டுதல் ஆகிய பயன்பாடுகளையும் உணர்த்துகிறது.
    வெளிப்படையான இவற்றை மட்டும் அன்றி, உள்ளார்ந்த
    பயன்பாடு தரும் பண்புகளையும் சுட்டுகிறது. தீமைகளைச் சுட்டு
    எரித்தல், நன்மைகளின் பால் செலுத்தும் ஞான ஒளிதருதல்
    ஆகியவற்றைக் குறிப்பாக உணர்த்துகிறது.

    ஆன்மிக ஆற்றுப்படையாக அமைந்துள்ள இந்நூல் ஆறுமுகன்
    ஆகிய முருகன் காட்சி தரும் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று
    அருள் பெற வழிகாட்டுகிறது; ஆறுபகுதிகளாக அமைந்துள்ளது.

  • மந்தியும் அறியாத மரம் அடர்ந்த காடு
  •     முதல் பகுதி முருகனின் திரு உருவச் சிறப்பைக் கூறுகிறது;
    அவன் அணியும் மாலைச் சிறப்புகளை வருணிக்கிறது; ஆடல்
    பாடல் முதலியவற்றால் அவனைத் தெய்வ மகளிர் வாழ்த்துவதைக்
    கூறுகிறது; சூரபதுமனை அழித்த முருகனின் வீரத்தைப் பேசுகிறது;.
    மதுரை நகரின் பெருமையையும் திருப்பரங்குன்றத்தின் இயற்கை
    வளத்தையும் சொல்கிறது.

         வண்டுகளால் எச்சில் படாத காந்தள் மலர்களால் ஆன
    கண்ணியைத் தலையில் சூடிய முருகனின் தோற்றத்தை,

         மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
    சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
    பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்

    (அடுக்கம் = பக்கமலைகள்; சுரும்பு = வண்டு; மூசா = ஊதாத;
    கண்ணி தலை= மாலை; மிலைந்த = சூடிய)

    என வருணிக்கிறார் நக்கீரர்.

    பக்க மலையில் உள்ள காடு குரங்குகள் கூட அறியாத
    மரங்கள் கொண்டது என்று அதன் அடர்த்தியை உணர்த்துகிறார்.
    குரங்குகள் கூட ஏறி அறியாத உயரமான மரங்கள் கொண்ட காடு
    என்று அதன் வளத்தையும் ஒரே அடியில் உணர்த்துகிறார் நக்கீரர்.
    அந்த அடர்ந்த காடு இப்போது இல்லை. மனிதர்கள் நாம்
    அழித்துவிட்டோம்.


  • செந்தூர் சென்றால் செல்வம் பெறலாம்
  •     இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் என்றும் செந்தில்
    என்றும் இன்று வழங்கும் திருச்சீர் அலைவாய் காட்டப்படுகிறது.
    அங்கு எழுந்தருளி அன்பர்க்கு அருள் வழங்கும் முருகனின்
    சிறப்புகளை நக்கீரர் பாடுகிறார். முருகனின் பிணிமுகம் என்னும்
    யானை ஊர்தி பாடப்படுகிறது. ஆறுமுகங்களின் செயல்களும்
    பன்னிரு கைகள் ஆற்றும் பணிகளும் கூறப்படுகின்றன.

        “ஒருமுகம் உலகைச் சூழ்ந்துள்ள இருளைப் போக்கப் பல
    கதிர்களை வீசி ஒளி தருகிறது. ஒருமுகம், அன்பர்கள் புகழ
    மகிழ்ந்து வரம் தருகிறது. ஒருமுகம், விதிகளின்படி
    மந்திரத்தைக் குறைகள் வராதபடி கூர்ந்து கவனிக்கிறது. ஒருமுகம்,
    மற்ற வேதங்களிலும் நூல்களிலும் உள்ள பொருள்களை ஆராய்ந்து,
    முனிவரைக் காக்கும் வகையில் திசைகளையெல்லாம் நிலவைப்
    போல வெளிச்சப்படுத்துகிறது. ஒருமுகம், அசுரர் முதலிய
    தீயவர்களை அழித்துக் களவேள்வி செய்கிறது. ஒருமுகம், கொடி
    போன்ற இடையைக் கொண்ட குறமகள் ஆகிய வள்ளியுடன்
    சிரித்து மகிழ்ந்திருக்கிறது” என்று ஆறு முகங்களின் அருள்
    தோற்றத்தைவருணிக்கிறார் நக்கீரர். இதைப் போலவே, பன்னிரு
    கைகளும் புரியும் திருச் செயல்களும் சிறப்பாகக் கூறப்படுகின்றன.
    சென்று அவனைக் கண்டு நல்லருள் ஆகிய செல்வம் பெறலாம்
    என்பது சொல்லப்படுகிறது.
  • பழனி சென்றாலும் பார்க்கலாம்
  •     திரு ஆவினன் குடி என்னும் பழனி மலையில்
    எழுந்தருளும் முருகனின் அழகுத் தோற்றம் காட்டப்படுகிறது.
    முனிவர், தேவர் மற்றும் உருத்திரர், திருமால்     முதலிய
    தெய்வங்களும் முருகனை வழிபடுகின்றனர். பிரணவம் என்னும்
    மந்திரம் தெரியாததால் முருகனால் சிறையில் அடைக்கப்பட்டான்
    பிரமன். அவனை, விடுவிக்குமாறு இவர்களெல்லாம் வந்து
    வழிபடுவதாக நக்கீரர் பாடுகிறார்.

  • ஏரகம், திருத்தணிகை மற்றும் குன்றுதோறாடல்
  •     மூன்று தீ வளர்த்து அந்தணர்கள் வழிபடும் திரு ஏரகம்
    சென்றாலும் முருகன் அருள் கிடைக்கும் எனப் பாடுகிறார்.
    திருத்தணிகை முதலிய குன்றுதோறும் அழகிய மகளிருடன்
    கைகோத்து ஆடல் கோலத்துடன்அமைந்த தோற்றப் பொலிவைக்
    கண்டு மகிழச் சொல்கிறார்.

  • பழமுதிர் சோலை சென்று பணிந்து வேண்டுக
  • அடுத்ததாகப் பழமுதிர்ச் சோலை சென்று முருகனைக் கண்டு
    அருள் பெறலாம் என்று முடிக்கிறார் நக்கீரர். தினை அரிசியைப்
    பரப்பி வைத்து ஆட்டுக் கிடாயை அறுத்துப் பலி செய்யும்
    ஒவ்வோர் இடத்திலும் வந்து வேற்றுமை பாராமல் அடியவர்க்கு
    அருள் செய்வான் முருகன் என்று பாடுகிறார். இறைவனின்
    எங்கும் நிறைந்த தன்மை இவ்வாறு காட்டப்படுகிறது.

    முருகனைக் கண்டவுடன், வழிபடும்     முறை என்ன
    என்பதையும் சொல்லித் தருகிறார் நக்கீரர். முருகனின் பிறப்பு
    முதல் தொடங்கி அவனது சிறப்புகள் எல்லாம் இப்பகுதியில்
    ஒவ்வொன்றாக உணர்ச்சி மிக்க தமிழ்நடையில் உரைக்கப்
    பெறுகின்றன. “ இவை அனைத்தையும் உணர்ந்து, பாடி அவன்
    அடி பணிந்தால் உன் மீது அன்பு கூர்ந்து இனிய மொழிகள் பல
    கூறிப் பெறுவதற்கு அரிய பரிசில்கள் தருவான்” என்கிறார்.

              ... விளிவு இன்று
    இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து
    ஒருநீ ஆகித் தோன்ற விழுமிய
    பெறல்அரும் பரிசில் நல்கும்... (292 - 95)

    (விளிவு இன்று = அழிவு இன்றி;     முந்நீர் = கடல்;
    வளைஇய
    = சூழப்பட்ட; விழுமிய = மிக உயர்ந்த;
    பெறல் அரும்
    = பெறுவதற்கு அருமையான)

        “இருண்ட கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் நீ ஒருவன்
    மட்டுமே வீடுபேறு அளிப்பதற்கு     உரியவனாக
    ஆகிவிட்டதைப் போல், அழிவின்றித் தோன்றும்படி, மிக
    உயர்ந்த, பெறுவதற்கு அரிய பரிசிலை உனக்குத் தருவான்”
    என்பது இவ்வடிகளின் பொருள். கூர்ந்து சிந்தித்தால் அந்தப்
    பரிசில் அறிவின் தெளிவாகிய மெய்ஞ்ஞானம் என்பதை
    உணரலாம். அதைப் பெற்றால் நீயும் வீடுபேறு அடையும்
    தகுதி பெறுவாய்; உலகில் உள்ள மற்றவர்களுக்கும் அதைப்
    பெற வழிகாட்டுவாய் என்ற நுட்பமான உட்பொருளுடன்
    நக்கீரர் பாடுகிறார்.

        நல்ல இலக்கியம் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய
    நான்கு உறுதிப் பொருளும் தரும் வகையில் அமைய வேண்டும்
    என்னும் தமிழ் இலக்கியக் கோட்பாட்டை அறிவீர்கள் அல்லவா?
    மற்ற இலக்கியங்கள் எல்லாம் அறம், பொருள், இன்பம் பற்றிக்
    கூறி அவ்வழி நடந்து வீடு பெறும் வழியைக் குறிப்பாக உணர்த்தும்:
    வீடு பெறுவதை மட்டுமே நோக்கமாக, இலக்கியப் பொருளாக
    வைத்து முதன் முதலில் பாடிய பெருமைக்கு நக்கீரர் உரியவர்
    ஆகிறார். அருள் பெற வழி கூறும் ஆற்றுப்படை பாடியதால்
    அவர் இந்தச் சிறப்பை அடைகிறார்.

    4.4.2 பொருநராற்றுப்படை
        பொருநர் என்ற சொல் இரு பொருள் தரும். போர்
    வீரர்களையும் கிணை, தடாரி முதலிய பறைகளை முழக்கிப் பாடி
    ஆடும் கலைஞர்களையும் குறிக்கும். பாடும் பொருநர் ஏர்க்களம்
    பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர்

    எனப் பலவகையினர். இப்பாட்டில் இடம் பெறுபவர்கள் தடாரிப்
    பறை கொட்டிப் போர்க்களம் பாடும் பொருநர் ஆவர்.

    சோழன் கரிகால் பெருவளத்தானிடம் பரிசில் பெற்றுத்
    திரும்பும் பொருநன், பெறாதவனுக்கு வழி கூறி அனுப்புவதாக
    அமைந்த     இப்பாட்டு     248     அடிகளை உடையது.
    இதனை இயற்றியவர் முடத்தாமக் கண்ணியார்.

  • பொருநரும் விறலியும்
  •     பொருநர் விழாக்களில் கூடித் தங்கள் இசைத்திறனைக்
    காட்டுவர் . ஊர்விட்டு ஊர் செல்வர். போர் நடந்து முடிந்த
    களங்களுக்குச் சென்று வென்றவரைச் சிறப்பித்துப் பாடுவர்.
    அவர்களுடன் செல்லும் விறலி முடி முதல் அடிவரை சிறந்த
    அழகு பொருந்தப் பெற்றவள் ஆவாள். வள்ளல்களைப்
    பாடிப் பரிசிலாகத் தேர், யானை முதலியவற்றைப் பெறுவர்
    பொருநர் பொன்னால் ஆகிய தாமரைப் பூவைப் பெறுவர்.
    விறலியர் பொன்னரி மாலைகள் பெறுவர்.

  • வள்ளல் வளவனின் பெருமைகள்
  •     சோழன் கரிகால் பெருவளத்தான் திருமாவளவன் என்றும்
    சிறப்பிக்கப் பட்டவன். உருவப்     பஃறேர் இளஞ்சேட்
    சென்னியின்
    புதல்வன் தாய் வயிற்றிலே இருந்து அரச உரிமை
    பெற்றுப் பிறந்தவன். இவன் மனைவி நாங்கூர் வேண்மாள். இவன்
    மிக இளம்வயதிலேயே வெண்ணிப் பறந்தலை     என்னும்
    இடத்தில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய
    மன்னனையும் வென்றான்.

        எளியவரையும் நட்புடன் விரும்பி, விருந்தோம்பும் பண்பாளன்.
    பாணர் முதலிய கலைஞர்கள் பல நாட்கள் தங்கியிருந்துவிட்டு
    ஒருநாள் தயங்கித் தயங்கி ‘எங்கள் ஊருக்குப் போகிறோம்’
    என்று சொன்னாலும், சினம் கொள்வதுபோல் நோக்கி வருந்துவான்.
    இசைக் கலைஞரின் ஏழிசைக்குத் தக்க மதிப்புத் தரும் வகையில்
    ஏழடி அவர்கள் பின்னால் நடந்து சென்று வழி அனுப்பி
    வைப்பான். யானைக் கூட்டத்தையும் பொன் பொருளையும்
    கணக்கின்றி வழங்குவான். இவனது நல்லாட்சியில் நாடு வளம்
    மிகுந்து செழித்தது. காவிரி ஆறு பெருகி வந்து நாட்டை வளம்
    பெறச்செய்தது.

  • நூலின் அமைப்பு
  •     ஆற்றுப்படுத்தும் பொருநன் வழியில் கண்ட பொருநனை
    அவன் சிறப்பைக் கூறி அழைக்கிறான். அவனது பாலை
    யாழின் தோற்றத்தை வருணிக்கிறான். விறலியின் மேனி அழகை
    முடி முதல் அடிவரை வருணிக்கிறான். தான் கரிகால் வளவனைக்
    காணச் சென்ற போது அவன் விருந்தோம்பிய சிறப்புகளை
    எடுத்துரைக்கிறான். உண்ட உணவின் வகைகளைச் சுவைபடச்
    சொல்கிறான். பல நாள் இருந்து ஒருநாள் பிரிந்து போகிறோம்
    என்று கூறியதற்கு அவ்வள்ளல் வருந்தியதைச் சொல்கிறான்.
    அவன் கொடுத்த பரிசில்களை விரித்துரைக்கிறான். ‘நீ சென்றால்
    இன்ன பரிசில்கள் பெறுவாய்’ என்று சொல்கிறான். சோழனது
    நாட்டின் நால்வகை நிலத்தின் வளங்களை எடுத்துச் சொல்கிறான்.
    அவன் நாட்டு மக்கள் வாழும் இனிய வாழ்வைக் கூறுகிறான்.
    மன்னனின் வீரத்தையும் ஆளும் செங்கோல் திறத்தையும்
    புகழ்கிறான். கரிகாலனின் சோழ நாட்டை வாழ்த்துகிறான்.

        
  • பண் மீட்டும் யாழ் மணப் பெண்போலத் தோன்றும்.
  • புலவர் முடத்தாமக் கண்ணியாரின் கவிதைத் திறம் பாடல்
    முழுக்கச் சிறப்பாக விளங்குகிறது.

         பாலை யாழைப் பற்றிய வருணனை மிகச் சிறப்பாக உள்ளது.
    அந்த யாழின் முழுத்தோற்றம் “திருமணம் செய்த புதுப்பெண்ணை
    நீராட்டியது போல் இருக்கிறது” என்று கூறும் உவமை அழகானது:

         மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன காட்சி (20)

  • பசிதீர்ந்தது, பல்லும் தேய்ந்தது
  • கரிகாலனின் விருந்தோம்பல் சிறப்பைப் பொருநன் கூறும்
    பகுதிகள் இனிய சொல்விருந்தாக அமைந்துள்ளன.

        சென்ற நாள்தொட்டுப் பகலும் இரவும் மூச்சுக் காற்றுக்குக் கூட
    உள்ளே இடம் இன்றிக் கொழுப்புடைய கறியையே உண்டனர்.
    அதனால் பொருநனுக்கும் அவன் கூட்டத்தார்க்கும் பற்கள்
    தேய்ந்து போயினவாம். இதைப் புலவர் அழகான உவமை கொண்டு
    விளக்குகிறார்:

        பல்லே கொல்லை உழுகொழு ஏய்ப்ப
        எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி ..
                     (117-118)


    (கொல்லை = நிலம்; உழுகொழு = உழுகின்ற ஏர்முனைக் கொழு;
    எல்லை = பகல்; ஊன் = கறி, மாமிசம்)

    “நிலத்தை உழுது உழுது தேய்ந்து போன ஏர் முனைக் கொழுவைப்
    போல ஊன் தின்று, தின்று பற்கள் தேய்ந்து போயின” என்கிறார்.

  • பழைய ஆடையும் புதிய ஆடையும்
  •     பொருநன் அணிந்திருந்த பழைய ஆடையில் “ஈரும் பேனும்
    இருந்து அரசாள்கின்றன. அது, வேர்வையில் நனைந்து அழுக்கில்
    திரண்டு, கிழிசல்களை மீண்டும் மீண்டும் தைத்ததால் வேறு நூல்
    நுழைந்த கந்தலாகி விட்டது. அதனால் துணி நெய்தது போல்
    இல்லை, தைத்தே செய்ததுபோல் இருக்கிறது”.

        இந்தப் பழந்துணியை நீக்கி விட்டு உடுத்துக்கொள்ளக்
    கரிகாலன் கொடுத்த ஆடை எப்படி இருந்தது தெரியுமா?

    நூல் இழை ஓடிய வழி எது என்று கண்பார்வை கூட நுழைந்து
    கண்டுபிடிக்க முடியாதாம். அவ்வளவு நுண்மை ! பூ வேலைப்பாடு
    கனிந்து இருக்கிறதாம். பாம்பு உரித்த தோல்போல் மென்மையாய்
    உள்ளதாம்.

        நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து
        அரவுரி அன்ன அறுவை நல்கி... (82-83)


    (அரவுரி = பாம்பு உரித்த தோல்; அறுவை = ஆடை)
    • திணை மயக்கம்
        நிலப்பரப்பைப் பற்றிய வெறும் வருணனையாக இல்லாமல்,
    குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு வகை
    நிலங்களும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்து அறிய முடியாதவாறு
    கலந்திருக்கின்றன என்று புலவர் பாடுகிறார். இது ‘திணை மயக்கம்’
    எனப்படும். மயக்கம் என்றால் கலப்பது என்று பொருள்.
    பொருநராற்றுப் படையின் தனிச் சிறப்பு வாய்ந்த பகுதியாக இது
    அமைந்துள்ளது.

    எந்தப் பொருளுக்காகவும் வேறு ஒரு நாட்டை எதிர்பார்க்கத்
    தேவை அற்ற தன்னிறைவு கொண்ட நாட்டைத் தம் மன்னன்
    ஆள்கின்றான் என்பதை வலியுறுத்தப் புலவர்கள் திணைமயக்கம்
    பாடுவார்கள். இந்த நாடு தன் அளவில் ஒரு தனி உலகமாகவே
    உள்ளது என்பதையும், பரப்பில் பெரியது என்பதையும் இது
    குறிப்பால் உணர்த்துகிறது. மழைவளம் இல்லாமல் போனால்தான்
    பாலை நிலம் தோன்றும். எங்கள் மன்னனின் நல்லாட்சி
    காரணமாக மழைவளம் குறைவதே இல்லை அதனால் அவனது
    நிலம் வளம் மிகுந்து உள்ளது என்பதையும் இது குறிப்பாக
    உணர்த்துகிறது.

        புலவர்கள் இந்த நிலங்களைப் பாடும் பொழுது இவற்றில்
    வாழும் மக்களைப் பற்றியும் பாடுகின்றனர். இதனால் தனி ஒரு
    வள்ளலைப் புகழும் பாட்டாக அமையாமல் அவனது
    குடிமக்களையும் புகழுவதாகப் பாட்டு அமைந்துவிடுகிறது.
    பிற்காலத்தில் குடிமக்களை முன் நிறுத்திக் காப்பியங்கள்
    தோன்ற இது வழி வகுப்பதாகவும் அமைந்துள்ளது.

        பொருநராற்றுப் படையில் நான்கு வகை நில மக்களைப்
    பற்றியும் சிறப்பாகப் பேசப்படுகிறது.

        மருத நிலத்தில் பெடை மயில்கள் அழைத்துக் கொண்டே
    இருக்கின்றன. ஆண் மயில்களோ பூக்களில் பாடும் வண்டுகளின்
    இசை கேட்டு நெய்தல் நிலத்துக்கு வந்து ஆடுகின்றன.

        களமர்கள் (உழவர்கள்) கரும்பை அரைக்கும் ஓசை,
    நெல்லை அரிக்கும் ஓசை இவற்றைக் கேட்டுச் சலிப்பு ஏற்பட்டால்
    நாரைகள், பகன்றை முதலிய மருத நில மரங்களை விட்டு
    நீங்கி, தோன்றி, காயா, முல்லை மலர்கள் பூத்த முல்லை
    நிலம் தேடிச் செல்லுகின்றன. அதுவும் வெறுத்தால், உடனே
    நெய்தல் நிலக் கடற்பகுதிக்கு வந்து இறால் மீனை உண்டு
    பூத்த புன்னை மரக் கிளையில் கூட்டில் தங்குகின்றன. அங்கு
    அலை ஓசை தொல்லை செய்தால் மருத நிலத்தின் பனை
    மரத்தின் மடலில் கூடு கட்டுகின்றனவாம்.

        மக்களும் இதைப் போன்றே, மருத நிலத்துக் களமரின்
    இசையில் சலிப்பு ஏற்பட்டால் முல்லை படர்ந்த காட்டு நிலத்துக்குச்
    சென்று அந்த நிலத்தைப் பாராட்டுவார்களாம். அந்த இடத்து
    வாழ்க்கையில் சலிப்பு வந்தால் உடனே மருதநிலத்துக்குப் போய்
    அந்த நில ஒழுக்கத்தைப் புகழ்வார்களாம். கடற்கரைப்
    பாக்கத்தில் வாழும் மீனவர்கள் அந்த வாழ்க்கையில் சலிப்பு
    வந்தால் உடனே அருகில் இருக்கும் மலை நிலத்துக்குச்
    சென்று குறிஞ்சியைப் புகழ்ந்து பாடுவார்களாம்.

        குறிஞ்சி நிலத்து மக்கள் அங்கு விளையும் பொருள்களான
    தேனையும் கிழங்கையும் மீனவரிடம் கொடுத்து, மாற்றாக மீன்
    நெய்யையும் மதுவையும் பெறுவார்களாம். இனிய கரும்பையும்
    அவலையும் விற்கும் மருத நிலத்து மக்கள் அவற்றுக்கு ஈடாகக்
    குறிஞ்சி மக்களிடமிருந்து     மான்கறியையும், கள்ளையும்
    பெறுவார்களாம். குறிஞ்சிப் பண்ணை நெய்தல் நிலப் பரதவராகிய
    மீனவர் பாடுவார்களாம். மலைக் குறவர்கள் நெய்தல் பூ மாலையைச்
    சூடுவார்களாம். முல்லையாகிய காட்டுநில மக்கள் மருதப்
    பண்ணைப் பாடுவார்களாம். காட்டுக் கோழி வயலில் நெல்
    கதிரை மேயுமாம். மருத நில வீட்டுக்கோழி மலையில் விளையும்
    தினைக் கதிரைக் கொத்துமாம். மலையில் உள்ள மந்திகள் நெய்தல்
    நில உப்பங்கழியில் மூழ்கி விளையாடுமாம். கழியில் இருக்கும்
    நாரைகள் அஞ்சிப் பறந்து போய் மலை மீது அமருமாம்.

        பொதுவாக எப்போது மக்கள் ஒரு நாட்டை விட்டு நீங்கி
    இடம் பெயர்வார்கள்? அந்த நாட்டில் வளம் குன்றிப் பஞ்சம்
    ஏற்பட்டால் தான் அதைவிட்டு நீங்கி வேறு இடம் செல்வார்கள்.
    ஆனால் இந்த நாட்டில் வறட்சியோ பஞ்சமோ ஏற்படுவதே
    இல்லை. அதனால் இங்குள்ள மக்கள் இடம் பெயர்வது அந்த
    இடத்தின் இன்ப வாழ்க்கையில் சலிப்பு ஏற்படும் போது
    மட்டும்தான் என்று புலவர் பாடுகிறார். கரிகால் வளவனின் நாடு
    எந்தக் காலத்திலும் வளம் குறையாதது என நயமாக
    உணர்த்துகிறார். பசியும் பிணியும் இருந்தால் தானே மக்களுக்குள்
    பகையும் வெறுப்பும் இருக்கும்? இங்குப் பலவகை நில
    மக்களிடையிலும் ஒற்றுமை நிலவியது என்று உணர்த்துகிறார்
    அல்லவா?
  • கல்லும் உருகும், வில்லும் வேலும் நழுவும்
  •     பொருநர் பாலை யாழை மீட்டிப் பாலைப் பண் பாடுவர்.
    அது துயரச் சுவை நிரம்பிய இசை. கல்லையும் உருக்கும்
    அந்த இசையின் ஆற்றலைப் பொருநராற்றுப்படை அருமையாகக்
    கூறுகிறது.

        ஆறலை கள்வர் படைவிட அருளின்
        மாறுதலைப் பெயர்க்கும் மறுஇன் பாலை
                     (21- 22)


    வழிப்பறி செய்யும் கள்வர்கள் வழியில் நடந்து செல்பவரைக்
    கொல்வதற்காகக் கையில் வில், வேல் முதலிய கொலைக் கருவிகள்
    வைத்திருப்பர். பாலைப் பண்ணைக் கேட்டால், அவர்களின்
    மனம் உருகி, இக்கொலைக் கருவிகள் கையிலிருந்து தாமாக
    நழுவிக் கீழே விழுந்து விடுமாம். அருளுக்கு மாறுபாடான கொலை
    வெறியும் அவர்கள் நெஞ்சை விட்டுக் கழன்று ஓடி விடுமாம்.
    கல்மனம் கொண்ட கொலையாளிகள் நிலையே இப்படி என்றால்,
    கொடையாளிகளான வள்ளல்களின் அருள் உள்ளம் இசையால்
    எவ்வளவு கனிந்திருக்கும்!

    4.4.3 சிறுபாணாற்றுப்படை
    ஒய்மாநாட்டின் மன்னன் நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு
    நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் பாடிய பாட்டு இது. சீறியாழ்
    என்னும் செங்கோட்டு யாழை இசைக்கும் யாழ்ப்பாணன் சிறுபாணன்
    எனப்படுவான். சிறுபாணனை நல்லியக்கோடனிடம் செல்லும்படி
    ஆற்றுப் படுத்துவதால் 269 அடி கொண்ட இப்பாட்டுச்
    சிறுபாணாற்றுப்படை எனப் பெயர் பெற்றது.
    • நல்லியக்கோடனின் நல்லியல்புகள்

    வீரம் மிக்க ஓவியர் குடியில் பிறந்தவன் நல்லியக்கோடன்.
    திண்டிவனம்
    என்னும் பெயருடன் இப்போது இருக்கும் நகரை
    உள்ளடக்கிய கிடங்கில் என்ற நகரமாகிய, மாவிலங்கை,
    எயிற்பட்டினம்
    , ஆமூர், வேலூர் என்னும் நகரங்ள்
    இவனுடையவையாக இருந்தன.

        இயம் என்ற சொல் இசைக்கருவி என்ற பொருள் கொண்டது.
    தன் பெயரிலேயே இச்சொல்லைக் கொண்ட இவ்வள்ளல் இசைக்
    கலைஞர்களுக்குப் பொருளை வாரித் தந்து அவர்களையும்
    கலைகளையும் வாழ வைத்திருக்கிறான். இவன் காலத்தில்
    இவனுக்கு ஒப்பான கொடையாளிகள் எவரும் இல்லை.

        இவனது பெரிய கோட்டை வாசல் இசைக் கலைஞர்கள்,
    புலவர்கள்,அருமறை அந்தணர் ஆகியோர் எளிதில் சென்று வரும்
    வண்ணம் எப்போதும் விரியத் திறந்திருக்கும். ஆனால் பகைவர்
    எவரும் நுழைய முடியாது. இது, தெய்வங்கள் இருக்கும் மேருமலை
    ஒரு கண்ணை விழித்துப் பார்ப்பது போன்ற தோற்றம் தருவதாக
    இந்நூல் பாடுகிறது.

        இவன், உயர் பண்புகள் அனைத்தும் கொண்டவனாக
    இருந்திருக்கிறான். செய்ந்நன்றி அறிதல், சிற்றினம் சேராமை, இனிய
    முகமலர்ச்சியுடன் எப்போதும் இருத்தல் இவனது சிறப்புகள். சிறந்த
    அறிவுடையோர் மட்டுமே இவனைச் சுற்றி இருப்பார்கள். அந்த
    உயர்ந்தோர் புகழும் செயல்களை மட்டுமே செய்வான். தன்னைப்
    பணிந்தவர்கள் மீது மாறாத அன்பு கொண்டவன். கொடிய சினம்
    இல்லாதவன். ஆண்மை மிக்க பகைவர் கூட்டத்தில் புகுந்து அதைச்
    சிதைக்கும் வீரமும் ஆற்றலும் மிக்கவன். தன் படை தளரும்
    இடத்தில் தான் சென்று அதைத் தாங்கும் உறுதி மிக்கவன்.
    வாள் வீரர்கள் புகழும் வலிமை மிக்கவன். எண்ணியதை அப்படியே
    நிறைவேற்றும் திண்மை உடையவன், தான் காதலிக்கும் மகளிரால்
    விரும்பப்படுபவன். அவர்கள் வசம் ஆகிவிடாமல் அவர்களை
    அன்பால் ஆதரிப்பவன். தன்னைப்போல் அறிவுடையவர்கள் நடுவே
    அறிவால் உயர்ந்து விளங்குபவன். அறிவில்லாதவர் இடம் எனில்
    தானும் அறியாமை உடையவன் போல் நடந்து கொள்பவன். சிறந்த
    மன்னனுக்குத் திருக்குறள் வகுக்கும் எல்லாத் தகுதிகளையும்
    கொண்டு விளங்கியவன்.

        கலைஞர்களின் திறன் அறிந்து பரிசில் வழங்கும்
    தன்மையாகிய ‘வரிசை அறிதலில்’ வல்லவன்.     திறமை
    இல்லாதவர்க்கும் ‘இல்லை’ என்று சொல்லாமல் ஈகை செய்யும்
    பண்பாளன்.

        பிடிக்கணம் சிதறும் பெயல்மழைத் தடக்கைப்
         பல்லியக் கோடியர் புரவலன் ........... (124-125)


    “பெண் யானைக் கூட்டத்தைப் பரிசிலாக மழைத்துளிகள் போல்
    சிதறி வழங்கும் பெரிய கையை     உடையவன். பல
    இசைக்கருவிகளையும் இசைக்கும் கலைஞர்களின் புரவலன்” என்று
    இந்நூல் இவனைப் பாராட்டுகிறது. “யானைகளை மழைத் துளிகள்
    போல் சிதறும் கை” என்னும் அழகிய கற்பனை வியப்புத்
    தருகிறது அல்லவா?

    பல அறிஞர், கலைஞர் சூழ்ந்திருக்க நடுவில் இவன் பல
    விண்மீன்களுக்கு நடுவே பால்நிலவு போல வீற்றிருக்கிறானாம்.

        இவ்வாறு நல்லியக்கோடனின் நல்ல இயல்புகளை நல்லூர்
    நத்தத்தனார் பாடுகிறார்.

  • நூல் அமைப்பு
  •     பாணர்கள் சந்திக்கும் சூழல், விறலியின் முடி முதல்
    அடிவரையான வருணனை,     இவற்றை அடுத்து வள்ளல்
    நல்லியக்கோடன் தரும் பரிசு மூவேந்தரின் தலைநகர்களைக்
    காட்டிலும் செழுமையானது என்று கூறுகிறான் பாணன்.
    கடையெழு வள்ளல்களின் பெருமை கூறி அவர்கள் ஏழு பேர்
    சேர்ந்து தாங்கிய ஈகையென்னும் பாரத்தை இவன் ஒருவனே
    தாங்கி இழுத்துச் செல்கிறான் என்று சொல்லப்படுகிறது. இந்த
    வள்ளலிடம் செல்வதற்கு முன்பு தான் இருந்த வறுமை நிலையை
    உருக்கமாகச் சொல்கிறான். வள்ளலிடம் செல்லும் வழியில் அவன்
    நாட்டின் நால்வகை நிலங்களிலும் உள்ள அவனது குடிமக்களின்
    விருந்தோம்பல் சிறப்பும் சொல்லப்படுகிறது. நல்லியக்கோடனை
    அடைந்தவுடன் அவன் தரும் வரவேற்பு, விருந்தோம்பல், பரிசில்
    இவை பற்றிக் கூறுகிறான். அவனது புகழையும் பெருமையையும்
    கூறி முடிக்கிறான்.
    • கவிதை நலம்

        பாட்டின் தொடக்கமே அழகு மிக்க உருவகங்கள் கொண்ட இயற்கை வருணனையுடன் அமைந்துள்ளது.

        மூங்கில் ஆகிய தோள்களை உடைய நிலம் ஆகிய
    பெண்ணின் மார்பகங்களான மலைகளுக்கு இடையே தவழும்
    முத்து மாலையாகக் கான்யாறு (காட்டாறு) காட்டப்படுகிறது. மழை
    வெள்ளத்தால் அந்த ஆறு பெருகி ஓடிய போது படிந்த கருமணல்,
    நிலம் என்னும் பெண்ணின் விரிந்த கூந்தலாக உருவகப்படுத்தப்
    படுகிறது. வெள்ளத்தால் உடைந்த கரையில் இருக்கும் சோலையில்
    பூத்த மரக்கொம்பிலிருந்து குயில்கள் குடைந்து உதிர்த்த வாடிய
    புதுப் பூக்கள் அக்கூந்தலில் பூச்சூட்டியது போல உள்ளன.

  • பொருநராற்றுப்படையில் உள்ளது போலவே
  •     விறலியின் அழகு தலைமுதல் கால்வரை வருணிக்கப்படுகிறது.
    ஒன்றன் இறுதிச் சொல் அடுத்ததன் தொடக்கமாக அமையத்
    தொடுக்கும் ‘அந்தாதி’ என்னும் தொடை பற்றி அறிந்திருப்பீர்கள் அல்லவா? அந்த வகைச் செய்யுள் அழகோடு இந்த வருணனை பாடப்பட்டுள்ளது இந்நூலின் தனிச்சிறப்பு ஆகும்.

        நடைத் துயரத்தாலும், வெய்யிலில் காய்ந்த கூர்மையான
    கல்முனைகளாலும் விறலியின் மெல்லிய சிறு காலடிகளில்
    கொப்புளங்கள் தோன்றி உள்ளன. இந்தச் சிறிய காலடி,
    ‘ஓடி இளைத்து வருந்தும் நாயின் நாக்குப் போல்’ இருப்பதாக நத்தத்தனார் உவமிக்கிறார். அளவால் சிறியது, சிவந்த நிறம்
    கொண்டது, வேர்வை சொட்டுவது, கொப்புளங்கள் கொண்டது
    ஆகிய இந்த இயல்புகளின் ஒற்றுமையாலும், வடிவ ஒப்புமையாலும்
    இந்த அரிய உவமை சிறப்பும் பொருத்தமும் உடையதாக
    அமைந்துள்ளது.

        சாஅய்
        உயங்குநாய் நாவின் நல்எழில் அசைஇ
        வயங்குஇழை உலறிய அடி...     (16-18)


    (சாஅய் = பொலிவை இழந்து; உயங்கு நாய் = வருந்தும் நாய்; வயங்குஇழை = ஒளிவீசும் நகை (சிலம்பு); உலறிய = வற்றிப்போன, நீங்கிய)

        நாய் ஒரு குறிக்கோள் இல்லாமல் அங்கும் இங்கும் ஓடும்.
    பின் ஓரிடத்தில் இருந்து இளைக்கும். இந்தப் பாணனும்
    குழுவினரும் தங்களை ஆதரிக்கும் சிறந்த வள்ளலைத் தேடி
    நாடெங்கும் வீணாக அலைந்து திரிந்து, களைத்து இங்கே அமர்ந்திருக்கின்றனர் என்பதையும் இந்த உவமை குறிப்பாக
    உணர்த்துகிறது. நகைகள் உலறிய என்னும் சொல்லாட்சியைப்
    பாருங்கள். இதற்கு, உலர்ந்து போன, வற்றிப்போன என்று
    பொருள். சிலம்பு முதலிய நகைகளை இவர்கள் உடம்பிலிருந்து
    வறுமை வற்றிப்போகச் செய்துவிட்டதாம். பசித்தீயை அடக்க
    விற்று உண்டுவிட்டார்களோ?

        நால்வகை நில வளத்தையும் மற்ற நூல்களில் பாடுவதுபோல்
    திணை மயக்கமாகப் பாடவில்லை. நத்தத்தனார் புதுமையாகப்
    பாடுகிறார். இது அழகிய நில வருணனையாக அமையாமல், அந்நில மக்கள் தம் அழகிய பண்புகளின் வருணனையாகவே இருக்கிறது. ‘நல்லியக்கோடனின் நாட்டினுள் அடி எடுத்து வைத்தாலே போதும்
    நம் வறுமை நீங்கிவிடும், அவனது குடிமக்களும் விருந்தோம்பும்
    பண்பு மிக்க வள்ளல்களாக உள்ளனர், என்று உணர்த்தும் வகையில் பாட்டு அமைந்து உள்ளது. அந்தந்த நிலமக்களின் சிறப்பான
    உணவு வகைகளையும் பற்றித் தெரிவிக்கிறது.
    • வறுமை பற்றிய செழுமையான வரிகள்
        நல்லியக்கோடனைக் காண்பதற்கு முன்னால் சிறுபாணனின்
    குடும்பம் இருந்த நிலை கூறப்படுகிறது. அவன் வீட்டுச் சமையல் அறையில் பாத்திரங்களின் ஓசை கேட்கவில்லை. குட்டி போட்ட
    நாய் ஒன்றின் அவலமான முனகல் கேட்கிறது. பசி கொண்ட,
    இன்னும் கண் திறக்காத மிக இளமையான குட்டிகள் அவை.
    தனக்கும் உணவு இல்லாததால் பால் சுரக்காத தாயின் முலைக்
    காம்புகளைக் குட்டிகள் சுவைக்கின்றன. இதனால் வலி தாங்க
    முடியாமல் அந்தத் தாய் நாய் ஒலி எழுப்புகிறது.

        கூரையின் மூங்கில் கழிகள் இற்று விழுந்துவிட்டன. சுவர்களில்
    கறையான் புற்றெடுத்துக் காளான் பூத்திருக்கிறது. உண்பதற்கு எந்த
    உணவுப் பொருளும் இல்லை. பாணனின் மனைவி குப்பையில்
    வளர்ந்து கிடக்கும் இழிந்த கீரையான குப்பைக்கீரையைப் பறித்து
    வருகிறாள். அவள் இடை மிக மெலிந்து நுண்மையாய் இருக்கிறது.
    அழகினால் அல்ல; பசியினால் ! கீரைக்குச் சுவை ஊட்ட உப்புக்
    கூட இல்லை. உப்பின்றி அதை வேக வைத்துத் தன் பெரிய
    கூட்டத்துடன் உண்கிறான் பாணன். இங்கே, ஓர் இழிவான நிலை
    தனக்கு நேர்ந்ததை நினைத்து வருந்துகிறான்.

        உணவு உண்ணும் பொழுது தங்கள் வீட்டின் கதவுகளை
    விரியத் திறந்து வைத்து, “சேர்ந்து உண்ண யாராவது
    வருகிறீர்களா?” என்று அழைத்த பிறகு உண்ணுவதே அன்றைய
    நாள் தமிழரின் வாழ்வியல் நடைமுறையாக இருந்தது. கதவை
    அடைத்துத் தாமே உண்பது இழிவு என்று கருதப்பட்டது. அந்த
    இழிசெயலைத் தான் செய்ய நேர்ந்ததே என்று பாணன்
    வருந்துகிறான். இவன் கதவை அடைத்து உப்பின்றி வெந்த
    கீரையை உண்டதற்குக் காரணம் யாரும் பங்குக்கு வந்துவிடக்
    கூடாதே என்பது அல்ல. ‘வாழ்வில் வறுமையை அடைவது
    எல்லார்க்கும் இயல்பானதுதான் என்பதை உணராத அறிவற்ற
    மக்கள் பலர் உள்ளனர். அவர்கள் இழிவாகப் பேசிப்
    புறங்கூறுவார்களே, அதற்கு நாணம் கொண்டுதான்’ என்று
    சொல்கிறான் பாணன்.

    மடவோர் காட்சி நாணிக் கடைஅடைத்து
    இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஉடன் மிசையும்... (138-39)


    (மடவோர் = அறிவற்றோர்; கடை = கதவு; இரும்பேர் ஒக்கல் = மிகப் பெரும் சுற்றம்; உடன்மிசையும் = சேர்ந்து உண்ணும்)

        அந்த வறுமை எல்லாம் போய் ஒழியும்படி பொருளை வாரிக் கொடுத்தான் வள்ளல் நல்லியக்கோடன் என்று வாழ்த்துகிறான்.
    • மேலும் சில சிறந்த உவமைகள்

    யாழின் வருணனை இப்பாட்டிலும் சிறப்பாக அமைந்துள்ளது. மிகச் சிறந்த உவமைகள் கூறியுள்ளார் நத்தத்தனார்.

    நறுமணம் மிக்க காய்ந்த பெரிய மரத்தைக் கடல்அலைகள்
    கரையில் ஒதுக்கி இருக்கின்றன. அந்த மரம் ‘ஒட்டகம்
    உறங்குவது போல்' கிடக்கிறதாம்.

    மூங்கிலை உடைத்துப் பிளந்தால் உள்ளே ஒருவகை
    வெண்ணிறத்தோல் இருக்கும். அதைப் போன்ற மெல்லிய,
    தூய்மையான வழவழப்பான வெள்ளை ஆடைகளை
    நல்லியக்கோடன் பாணர்க்கு வழங்குவானாம்.

    இந்நூலின் பல சிறப்புகளில் ஒன்று: கடையெழு வள்ளல்கள்
    பற்றிய முழுமையான வரலாற்றுச் செய்தி     சுருக்கமாக
    இந்நூலில்தான் கூறப்பட்டுள்ளது.
    4.4.4 பெரும்பாணாற்றுப்படை

    பேரியாழ் இசைக்கும்     பாணன் பெரும்பாணன்
    எனப்பட்டான். பெரும்பாணனை ஆற்றுப்படுத்துவதால் இந்நூல்
    பெரும்பாணாற்றுப்படை என்று பெயர் பெற்றது. இது 500 அடிகள்
    கொண்டது, பெரியது. இதுவும் பெயருக்குக் காரணமாய் இருக்கலாம்.
    பாடப்படும் வள்ளல் தொண்டைமான் இளந்திரையன், பாடிய
    புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். பத்துப்பாட்டில் உள்ள
    பட்டினப்பாலை என்னும் இன்னொரு பாட்டையும் இயற்றியவர்
    இவர்.

    • ஆளுமைச் சிறப்பு
        அந்நாளில் சேர, சோழ, பாண்டிய நாடுகளைத் தவிர,
    அவற்றைச் சுற்றிப் பல சிறு நிலப்பரப்புகள் இருந்தன. இந்தக்
    குறுநிலங்களின் மன்னர்கள் வேளிர் என்று குறிப்பிடப்பட்டனர்.
    இவற்றுள் தொண்டை நாடு பெரிய நிலப் பரப்பை உடையது.
    தொண்டை மண்டலம் எனப்பட்டது. அந்நாட்டு மன்னர்கள்
    தொண்டைமான் என்னும் சிறப்புப்     பெயர்     பெற்றனர்.
    இளந்திரையன் அந்த மரபில் வந்தவன். நல்லாட்சித் திறனும்,
    மிக்க வீரமும் கொண்ட இவன் சிறந்த புலவனாகவும்
    திகழ்ந்திருக்கிறான். நற்றிணையில்     மூன்று     பாடல்களும்
    புறநானூற்றில்
    ஒரு பாடலும் இவனால் பாடப் பெற்றவை.

        இவனது பெருமைகளை இந்நூல் பேசுகிறது. துரியோதனனையும்
    அவனது பெரும்படையையும் அழித்த ஐவராகிய பாண்டவரைப்
    போலத் தன் பகைவர்களையும் அவர்தம் துணைவர்களையும்
    அழித்தவன். இவனது தலைநகர் காஞ்சிபுரம். தன்னைத் தஞ்சம்
    என்று பணிந்தவர்களைப் பாதுகாப்பவன். எதிர்ப்பவர் நாட்டில்
    உள்ள ஊர்ப் பொது மன்றங்களை மக்கள் நடமாட்டம் இல்லாத
    பாழ் மண்டபங்கள் ஆகும்படி அழிக்கும் ஆற்றல் கொண்டவன். காஞ்சியில புறாக்கள் தங்கும் உயர்ந்த மாடங்கள் கொண்ட
    அரண்மனையில் அரியணையில் இருந்து அரசாட்சி செய்பவன்.
    அக்காட்சி கீழைக் கடலில் கதிரவன் எழும் காட்சி போல்
    இருக்கிறது. மூவேந்தரும் கடலில் விளையும் சங்கு போன்றவர்கள் என்றால் இளந்திரையன் சங்குகளில் மிக உயர்ந்த வலம்புரிச்
    சங்கு போன்றவன். குழந்தையாகக் கடல் அலைகளால் கரையில்
    ஒதுக்கப்பட்டுத் திரையன் என்று பெயர் பெற்றுப் பின் சோழனால்
    அரசன் ஆனவன் என்ற வரலாறும் இந்த நூலில் சுட்டப்படுகிறது.
    • ஆட்சிச் சிறப்பு
        வெற்றி வீரர்கள் பலர் நல்ல     ஆட்சி வழங்கும்
    ஆட்சியாளர்களாகச்     சிறப்புப்     பெற்றதில்லை. ஆனால்,
    இளந்திரையன் ஆட்சி புரிவதில் திறமை வாய்ந்தவனாக
    விளங்கியிருக்கிறான். இவனது பாதுகாப்பு மிக்க அகன்ற பெரிய
    நாட்டில் ஆறலைகள்வர் எனப்படும் வழிப்பறித் திருடர்கள்
    இல்லை. இடியும் கூட ஓசை எழுப்பி எவருக்கும் அச்சம்
    உண்டாக்காது, பாம்புகளும் மக்களைக் கடித்ததில்லை. புலி போன்ற
    காட்டு விலங்குகளும் யாருக்கும் துன்பம் செய்வதில்லை. ‘அதனால்
    இளைத்த போது காட்டில் அச்சம் இன்றி இளைப்பாறி, தங்கிப்
    போக விருப்பம் இருந்தால் தங்கிச் செல்வாயாக’ என்று பாணன்
    கூறுகிறான்.

    அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக்
    கைப்பொருள் வௌவும் களவுஏர் வாழ்க்கைக்
    கொடியோர் இன்று அவன் கடியுடை வியன்புலம்
    உருமும் உரறாது அரவும் தப்பா
    காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டாங்கு
    அசைவுழி அசைஇ நசைவுழித் தங்கிச்
    சென்மோ இரவல...
             (39-40)

    (அத்தம் = காட்டுவழி; வௌவும் = பறிக்கும்; கடி = காவல்; வியன்புலம் = அகன்ற நாடு; உருமு = இடி; உரறாது = முழங்காது; அரவு = பாம்பு; உறுகண் = துன்பம்; வேட்டாங்கு = விரும்பியபடி; அசைவுழி = இளைத்தபோது; நசைவுழி = விரும்பிய போது; சென்மோ = போவாயாக)

    எந்த அச்சமும் இன்றி எந்நேரமும் விரும்பியபடி பயணம்
    செய்யலாம் என்கிறான்.

    மிகச் சிறந்த செங்கோல் மன்னர்கள் ஆளும் நாடு
    இவ்வாறுதான் இருக்கும் என்பதை, சிலப்பதிகாரம் இதே
    கருத்துகளை எடுத்துரைப்பதைக் கொண்டு நாம் தெளியலாம்.
    • அழகிய வருணனை
    சிறந்த வருணனைகளையும் உவமைகளையும் இந்நூலில் காணலாம். எடுத்துக்காட்டாக,

    முயல்; இது சொல்லால் வரைந்த ஒரு கோட்டு ஓவியம்
    போல அழகாக வருணிக்கப்படுகிறது.

        முள்அரைத் தாமரைப் புல்இதழ் புரையும்
        நெடுஞ்செவிக் குறுமுயல்... (114-15)


    “தாமரைப்பூவின் இதழைப்போன்ற நீண்டசெவியை உடையகுட்டை முயல்”
    அரிய செய்திகள்
        வேதம் ஓதும் பார்ப்பனர் இல்லங்களில் வளர்க்கும் கிளியும்
    வேதம் ஓதும் என்ற செய்தி கூறப்படுகிறது மற்ற நில மக்கள்
    தங்கள் சிறப்பு உணவைத் தந்து பாணனை விருந்தோம்புவது போல்,
    அந்தணர் வீடுகளில் பருப்புச் சோறும் பால் சோறும் வழங்குவர்
    என்ற செய்தி தரப்படுகிறது. மாவடு ஊறுகாய் பற்றிய தகவலும் சொல்லப்படுகிறது.
    • பொலியும் பொலி
        வளமான வயலில் விளைந்த நெல்லை மேல் காற்றில்
    தூற்றிக் களத்தில் குவியலாக இட்டு வைத்துள்ளனர். இது பொலி எனப்படும். இந்தப் பொலியின் பொலிவை விளக்க அழகான
    உவமை கூறுகிறார் புலவர். உயரம், நிறம், மதிப்பு இவற்றால்
    இந்தப் பொலி வடக்கே உள்ள பொன்மலை ஆகிய மேரு மலை
    போல் காட்சி அளிக்கிறதாம் (240 - 41)
    • இளந்திரையனின் கொடைச் சிறப்பு
        “இளந்திரையனின் தலைநகர் காஞ்சி, பல வகைப் பறவைகளும்
    வந்து கூடி உண்ணும் பழுத்த பெரிய பலா மரம் போன்றது. உலகில் உள்ள நகரங்களில் மிகச் சிறந்தது. அங்கு இருந்து அரசாளும்
    அவனைக் கண்டு வாழ்த்தி உன் பேரியாழை இசைத்துப் பாடினால்,
    அவன் பாலின் ஆவியைப் போன்ற மெல்லிய ஆடையை உனக்குத்
    தருவான். நிலவைப் போன்ற பெரிய வெள்ளித் தட்டைச் சூழ
    விண்மீன்கள் போன்ற பல சிறு தட்டுகளைப் பரப்பி உனக்கும் உன்
    சுற்றத்தார்க்கும் கொழுப்பு மிக்க இறைச்சியை உணவாகத் தருவான்.
    முக மலர்ச்சியுடன், குறையாத விருப்பத்துடன், உறவுமுறை சொல்லிச்
    சொல்லித் தானே நின்று உண்ணச் செய்வான். உனக்குப்
    பொன்னால் செய்த தாமரைப் பூவைப் பரிசாகத் தருவான்.
    வண்டுகள் மொய்க்காததும் நெருப்பில் பூத்ததும் ஆன புதுமைப்
    பூ அது. விறலியர்க்குப் பொன்னரி மாலைகள் தருவான்.
    தேர்களையும் குதிரைகளையும் குறைவின்றி வழங்கும் வள்ளல்
    அவன்” என்று பெரும்பாணன் வழி கூறி அனுப்புகிறான்.
    4.4.5 மலைபடுகடாம்
        ஆற்றுப்படை நூல்களுள் தனிச் சிறப்புக் கொண்டது மலைபடுகடாம். 583 அடிகள் கொண்ட மிகப்பெரிய இந்நூலுக்குக் கூத்தராற்றுப்படை என்ற வேறு பெயரும் உண்டு.
    • ஆசிரியர் பற்றி
    இதனை இயற்றியவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் ஆவார்.

    ஆகுளி, எல்லரி, குழல், குறும்பரந்தூம்பு, சிறுபறை, சீறியாழ்,
    தட்டை, தண்ணுமை, துடி, தூம்பு, பதலை, பன்றிப் பறை, பாண்டில், பேரியாழ், முழவு முதலிய பலவகை இசைக்கருவிகள் பற்றிக்
    கூறியுள்ளார். குறிஞ்சி, படுமலை, மருதம் ஆகிய பண்களைப்
    பற்றியும் பாடியுள்ளார். யாழைப் பற்றிய சொல் ஓவியம் தீட்டுகிறார்.
    அடர்த்தியான காட்டுவழியில் செல்லும் போது இசைக்கருவிகளுக்கு
    நேரும் இடையூறுகள் பற்றியும், அவற்றைத் தவிர்த்துக் கவனமாகச்
    செல்லும் வழிமுறைகள் பற்றியும் சொல்லியுள்ளார். இசைக் கலையில்
    நுண்மையான புலமையும், இசைக் கருவிகள் பற்றிய தெளிந்த
    ஆழமான அறிவும் உடையவர் இவர் என்று இவை காட்டுகின்றன.

    மலை சார்ந்த நிலப்பகுதி பற்றியும், அதில் காணப்படும் செடி
    கொடிகள், மரங்கள், விலங்குகள், பறவைகள், மக்கள் பற்றியும்
    மலையில் எழும் பல வகையான ஒலிகள் பற்றியும் அருமையான
    பல தகவல்கள் தரும் கலைக்களஞ்சியமாக இந்நூலைப்
    படைத்துள்ளார்.

    பல்குன்றக் கோட்டம் என்னும் மலை நாட்டை ஆண்ட
    நன்னன் சேய் நன்னன்
    என்னும் வேள் இந்நூலின் பாட்டுடைத்
    தலைவன் ஆவான். நவிர மலை இவனது மலை. சேயாறு பாயும்
    வளம்மிக்க இவனது நாட்டின் தலைநகர் செங்கண்மா. இப்போது
    செங்கம் என்று வழங்கும் இந்த நகரில் அக்காலத்தில் பெரிய
    கோட்டை மதில், அகழி, பெரிய தெரு, கடைத்தெரு, அரியணை
    அமைந்த அரசவை, நன்னனிடம் நல்லுறவு கொள்வதற்காக வந்து
    சிற்றரசர்கள் தம் காணிக்கைப் பொருளுடன் காத்திருக்கும் முன்றில்
    (முற்றம்) கொண்ட கோபுர வாசல் இவற்றைக் கொண்ட பெரிய
    அரண்மனை இருந்திருக்கிறது. இச்செய்திகளை இந்நூலில் இருந்து
    அறிகிறோம்.
  • நன்னனின் நல்ல பண்புகள்
  • நன்னன் மிகச் சிறந்த கொடை வள்ளலாக இருந்திருக்கிறான்.

    தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை ஓம்பா வள்ளல்
                    (399 - 400)


    “தேர்களைப் பரிசாக வாரிச் சிதறும் கவிந்த கையையுடைய,
    தேன் துளிக்கும் மாலையணிந்த, தனக்கென்று எப்பொருளையும்
    வைத்துக் கொள்ளாத வள்ளல்” என்றும்;

        குன்றா நல்இசைச் சென்றோர் உம்பல் (540)

    “கொடை வழங்குவதில் எவருக்கும் குறைவு படாத நல்ல புகழ் உடையவர் மரபில் வந்தவன்” என்றும் பாராட்டப்படுகின்றான்.

    “மிக்க மேன்மையான பண்பாளன். பிறருடைய குற்றங்களைப்
    பெரிது படுத்தாமல் குணங்களையே பாராட்டி அவர்களை
    உயர்வுபடுத்தும் சிறந்த சுற்றத்தை உடையவன். சிறந்த வீரன்.
    பொய்யாத வாய்மை கொண்டவன். எதையும் ஆராய்ந்து செய்பவன். ஐம்பொறிகளையும் வென்ற புலன் அடக்கம் உடையவன்” என்று
    கூத்தன் வாய்மொழிகளால் நன்னன் புகழ் பேசுகிறது இந்நூல்.

    • நூலின் தனிச் சிறப்புகள்
        பிற ஆற்றுப்படை நூல்களில் இல்லாத தனிச் சிறப்புகள்
    சிலவற்றை மலைபடுகடாம் கொண்டுள்ளது.

    காடு அடர்ந்த மலைத்தொடர்களைத் தாண்டி நன்னன் இருக்கும்
    இடத்தை அடைய வேண்டும். இதனால், காட்டு வழிகளைப் பற்றிப்
    பரிசு பெற்ற கூத்தன் கூறுகிறான். அவ்வழிகளில் செல்பவர்க்கு
    ஆங்காங்கே வாழும் மக்கள் உணவு தந்து விருந்தோம்பும் பண்பாடு
    பற்றிச் சிறப்பாக எடுத்துரைக்கிறான். எடுத்துரைப்பதில் இந்நூல்
    மற்ற ஆற்றுப்படை இலக்கியங்களை ஒத்து அமைந்துள்ளது.
    ஆனால், அந்த வழிகளில் உள்ள இடர்ப்பாடுகளை எடுத்துரைத்து,
    அவற்றைத் தவிர்த்துச் செல்லும் வழிமுறைகளைக் கூறுவதில், மற்ற
    நூல்களில் இல்லாத புதுமையை இந்நூலில் காண்கிறோம்.

        விறலியை முடிமுதல் அடிவரை வருணிக்கும் பகுதி இந்நூலில்
    இல்லை. ஆனால், பேரியாழின் தோற்றம் பற்றிக் கூறும்போது
    அழகிய மங்கையை வருணிப்பதுபோல் அழகு தோன்றப் பாடுகிறார் பெருங்கௌசிகனார்.

    மலையை ஒரு பெரிய யானையாகவும், மலையில் எழும்
    பல்வகை இனிய ஓசைகளை யானையின் உடம்பில் மதநீர்
    பெருகும் போது, அதைச் சுற்றி வட்டமிடும் பலவகை வண்டுகளால்
    எழும் ஓசையாகவும், வண்டுகளின் தொல்லையால் யானையிடமிருந்து
    எழும் ஓசையாகவும் உருவகம் செய்துள்ளார். இதனால்
    இந்நூல் மலைபடுகடாம் (கடாம் = மதம்) என்ற பெயர்
    பெற்றது. இசைக்கலையைப் பற்றி பாட்டுக்கு இசையோடு
    தொடர்புடைய பெயராக இது, பொருத்தமாக அமைந்துள்ளது.
    • உள்ளத்தில் இனிக்கும் உயர்ந்த கற்பனைகள்
        மலையில் வாழை செழித்து வளர்ந்துள்ளது. முற்றிய
    வாழைக் குலையின் நுனியில் உள்ள சிவந்த வாழைப்பூ கருத்த
    பாறையில் முட்டி நிற்கிறது. இது யானையின் முகத்தில் பாய்ந்த
    இரத்தக் கறைபடிந்த வேல் போல் காட்சி தருகிறது என்று
    உவமை நயத்துடன் பாடுகிறார்.

        காழ்மண்டு எஃகம் களிற்றுமுகம் பாய்ந்தென
        ஊழ்மலர் ஒழிமுகை உயர்முகம் தோய.... (129-30)


    (காழ் = உறுதி ; எஃகம் = வேல்)

        உயர்ந்த மலையில் ஏறிச் செல்லச் செங்குத்தான சிறு
    பாதைகள் உள்ளன. அழகிய சொற்றொடரால் இவற்றைக்
    காட்டுகிறார் புலவர். “படுக்க வைத்ததைப் போன்ற பாறையின்
    பக்கங்களின் மீது தரையில் கிடக்கும் பாதைகளை எடுத்துச்
    சாய்வாக நிறுத்தி வைத்தது போன்ற குறுகிய வழிகள்” என்கிறார்.

        படுத்துவைத் தன்ன பாறை மருங்கின்
        எடுத்து நிறுத்தன்ன இட்டரும் சிறுநெறி (15 - 16)


    (மருங்கு = பக்கம், இடுப்பு)

        நூல் முழுமையும் நன்னனின் நாட்டு வளமே இயற்கை வருணனையாகப் பாடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ஒரே
    வரியில் உள்ளடக்கி, அவனது நாட்டின் செழிப்பை
    உணர்த்திவிடுகிறார் பெருங்கௌசிகனார்:

        இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய (98)

    (இட்ட = விதைத்தவை; பெட்டாங்கு = விரும்பிய படி)

        விதையைப் போட்டால் போதுமாம், விரும்பியபடி விளைச்சல்
    தரும் வளமான நிலமாம் அந்த வள்ளலின் நிலம்.
        

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:23:13(இந்திய நேரம்)