தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பாட முன்னுரை

5.0 பாட முன்னுரை

    இனிய மாணவ நண்பர்களே ! தமிழ் மொழியின் மிகப்
பழமையான இலக்கியம் சங்க இலக்கியம்     என்பதை
அறிவீர்கள் அல்லவா? அவை பத்துப்பாட்டு, எட்டுத் தொகை
ஆகப் பதினெட்டு நூல்கள் ஆகும். எட்டுத்தொகையுள் அடங்கிய
ஒரு தொகை நூல்தான் புறநானூறு. தொகை என்றால் தனித்தனிப்
பாடல்களின் தொகுப்பு என்று பொருள். மனிதனின் அகவாழ்க்கை
ஒழுக்கமான காதலைத் தவிர, அவனுடைய மற்ற வெளி உலக
வாழ்க்கை ஒழுக்கங்கள் எல்லாம் புறத்திணை எனப்பட்டன.
அவனது வீரம், கல்வி, கொடை, நட்பு, அறம், ஆட்சி போன்ற
சமூகம் தொடர்பான ஒழுக்கங்கள் எல்லாம் புறத்திணையில்
அடங்கும். புறத்திணை பற்றிய நானூறு பாடல்களின் தொகை
நூல் என்பதால் இது புறநானூறு என்று பெயர் பெற்றது.

இந்நூலில் உள்ள நானூறு பாடல்களில் ஒன்று கடவுள் வாழ்த்து.
267, 268 எண் கொண்ட இருபாடல்கள் கிடைக்கவில்லை.
இவற்றிற்குப் பின்னால் உள்ள பல பாடல்களின் சொற்களும்
அடிகளும் சிதைந்து உள்ளதால், முழுமையான வடிவில் இல்லை.

வேறு வேறு காலங்களில் வாழ்ந்த பல புலவர்கள் பாடிய
பாடல்களின்     தொகுப்பாகப்     புறநானூறு     உள்ளது.
பாடப்பட்டவர்கள் பலரும்     பல்வேறுபட்ட காலங்களில்
வாழ்ந்தவர்கள். அகத்திணைப் பாடல்களில் உள்ளவை போன்ற
கற்பனைப் பாத்திரங்கள் இல்லை. எனவே, தமிழ்நாட்டின்
வரலாற்றில் ஒரு மிக நீண்ட கால கட்டத்தின் பதிவுகள்
புறநானூற்றில் உள்ளன.

     அகநானூறு என்னும் தொகை நூலுக்கு ஒரு தொகுப்பு முறை
பின்பற்றப் பட்டுள்ளதை அறிவோம் அல்லவா? அதைப்போல்
இந்த நூலுக்கும் ஒரு தொகுப்பு முறையை நூலைத்
தொகுத்தவர்கள் பின்பற்ற முயன்று உள்ளனர். கடவுள் வாழ்த்து,
அடுத்து மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்
பற்றிய பாடல்கள், அடுத்து வேளிர்கள் என்னும் குறுநில
மன்னர்கள், வள்ளல்கள் பற்றிய பாடல்கள், அவற்றை அடுத்துப்
போர் பற்றிய பாடல்கள், இறந்தவர்களுக்கான இரங்கல் பாக்கள்,
உலகியல் நிலையாமை பற்றிய பாடல்கள் எனப் புறநானூறு
தொகுக்கப் பெற்றுள்ளது.

    ஒவ்வொரு பாடலின் கீழும் பாடப் பெற்றவர், பாடியவர்,
பாடல் உணர்த்தும் திணை, துறை போன்ற குறிப்புகள் உள்ளன.
பாடிய 156 புலவர்களுள் மன்னர்களும், மகளிரும் உள்ளனர்.
மகளிரும் கல்வி, கேள்விகளில் சிறந்து புலவர்களாக விளங்கி
உள்ளனர்.

     புறநானூற்றுப் பாடல்களில் இருந்து சங்க காலத்
தமிழர்களின் இலக்கியப் படைப்பாற்றலையும், வீரம், கல்வி,
கொடை, ஆட்சித்திறன், வாழ்க்கை பற்றிய மெய்யறிவு, மக்கள்
வாழ்க்கை நிலை போன்றவற்றையும் அறிய இயலும். இந்தப்
பாடம் சுருக்கமாக இவை பற்றி விளக்குகிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:24:24(இந்திய நேரம்)