Primary tabs
அவனுக்குத் தன் தந்தைக்குப் பின் நாட்டை ஆளுகின்ற அரச
உரிமை தானாக வந்து சேர்கிறது. இதனால், மன்னன் தன் நாடும் செல்வமும் எல்லாம் தனக்கே உரிமை என்று கருதிவிடக் கூடாது.
இந்த உலக இன்பங்களை எல்லாம் துய்ப்பதற்குத் தனக்குக்
கிடைத்த நல்ல வாய்ப்பு இது என்று எண்ணிக் கட்டுப்பாடு
இல்லாமல் இன்பத்தில் மூழ்கிவிடக் கூடாது. தம் ஒழுக்கக்
கேட்டால் நாட்டையும் அழித்துத் தாமும் அழிந்த பல
அரசர்களைப் பற்றி உலக வரலாற்றில் அறிகிறோம் அல்லவா?
அரசர்கள் அறம் என்னும் நேர்வழியில் இருந்து
தவறிவிடாமல் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.புலவர்கள் இனிய கவிதை நயம் பொருந்திய சொற்களால் கருத்துகளை
உணர்த்தியுள்ளனர். சில வேளைகளில் செவியில் கடுமையாக
ஒலிக்கும் சொற்களைக் கூட அஞ்சாமல் கூறி, அரசர்களைத்
திருத்தமான வழி நோக்கித் திருப்பியிருக்கிறார்கள்.
செவியறிவுறூஉ, பொருள் மொழிக் காஞ்சி, வாயுறை
வாழ்த்து என்னும் துறைகளில் அமைந்த புறநானூற்றுப்
பாடல்களில் இத்தகைய அறிவுரைகளைக் காணலாம்.
மன்னர்களும், மற்றவர்கள் தம்மைப் பார்த்துப் பின்பற்றத்
தக்க வகையில் நல்ல நடத்தை உடையவர்களாய்
வாழ்ந்துள்ளனர். பொன்முடியார் ‘நன்னடை நல்கல்’ கடமையை
மன்னர்க்குக் கூறியது இதனால் தான்.
- நெல்லும் நீருமா உயிர்?
உயிராக அமைவது எது? நெல் முதலிய உணவுப் பொருள்கள்
அல்ல. உயிரும், பயிரும் தோன்றுவதற்கும் அவை வளர்ந்து
வாழ்வதற்கும் அடிப்படையாக அமையும் நீரும் அல்ல. மண்ணை ஆளும் மன்னன்தான் மக்களுக்கு உயிர் ஆவான். இதை
அறிவது, வலோல் வெல்லும் படையை உடைய வேந்தனின்
கடமை ஆகும்” என்று மோசிகீரனார் மன்னனுக்கு அவன்
கடமையை உணர்த்துகிறார். ஒரு சிறிய பாடலில் எவ்வளவு
பெரிய உண்மையை விளக்குகிறார் ! அந்தப் பாடல் இதுதான் :
நெல்லும் உயிர்அன்றே நீரும் உயிர்அன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால் யான்உயிர் என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே (186)
(அன்றே = இல்லை ; மலர்தலை = அகன்ற இடத்தையுடைய ;
அறிகை = அறிவது ; தானை = படைகள்)
உயிர்தானே உடம்பை இயக்குகிறது? உயிர் நன்றாக இயங்கினால்
தானே உடலும் நன்றாக இயங்கும்? உடம்புக்கு வரும் நோயை
உயிர் நுகர்ந்து கொண்டு உடம்பைக் காக்கிறதே, அது போல
மன்னனுக்கு, மக்களைக் காப்பது கடமை. இவை போல, இன்னும் எண்ண எண்ணப் பொருள் நலம் தருவதாக இச்சிறு பாடல்
உள்ளதல்லவா?. மன்னன் செங்கோல் முறை தவறாமல் ஆட்சி செய்தால்தான் மழை தவறாமல் பெய்யும். நீரும் நெல்லும் மழை இல்லாமல் வருமா? எனவே முறையோடு ஆளும்
மன்னன்தான் இவற்றைத் தரும் உயிரின் உயிர் ஆவான் என்னும்
ஒரு கருத்தும் தோன்றுகிறது இல்லையா?
தன் குடிமக்களிடம் இருந்து அளவுக்கு அதிகமாக வரி
வாங்கினான் அறிவுடைநம்பி எனும் பாண்டிய மன்னன். அவனது
செயல் அறிவுடைய செயலாய் இல்லை. பிசிராந்தையார் என்ற
புலவர், இந்த மன்னனால் வருந்திய மக்களின் துயரக்
கண்ணீரைத் தமிழ்ப்பாடல் கொண்டு துடைத்தார். எப்படி? ஓர்
அழகிய உவமையைக் கொண்டு அறிவுடை நம்பிக்கு அறிவு
புகட்டிவிட்டார்.
“விளைந்த நெல்லை முறையாக அறுத்துக் கவளமாக உருட்டி
யானைக்கு உணவு தருவார்கள். அப்படித் தரும்போது ஒரு
மிகச்சிறிய அளவு நிலத்தில் விளையும் நெல்லும் அந்த
யானைக்குப் பலநாள் உணவு தருவதற்குப் போதும். ஆனால்
நெல் விளைந்த பெரும் பரப்பளவுள்ள வயல் ஆனாலும் அதில்
யானையைப் புகுந்து மேய விட்டால் என்ன ஆகும். அதன்
வாய்க்குள் செல்வதைவிடக் காலில் மிதிபட்டு அழியும் நெல்லே
அதிகமாக இருக்கும். அளவுக்கு மிஞ்சி வரிவிதித்து உன்
ஆட்களால் மக்களை வருத்தி நீ பொருள் பெறுவதும் இதைப்
போன்ற செயல்தான்” என்று உணர்த்தினார். மக்களைத்
துன்புறுத்திப் பதறப்பதற அவர்களிடம் இருந்து பொருளைப்
பறிக்கும் மன்னன் தானும் அழிவான் அவன் நாடும் அழியும்
என்பதை,
யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான்
உலகமும் கெடுமே (184 : 10-11)
(புக்க = புகுந்த ; புலம் = விளைநிலம்)
என்று பாடி எச்சரித்தார்; மன்னனைத் திருத்தினார்.
மிக்க இளவயதில் ஏழு மன்னர்களைக் களத்தில் வென்றவன்
நெடுஞ்செழியன். இதனால் வந்த புகழால் போர் செய்வதில்
அதிகமாக விருப்பம் கொண்டவனாக ஆகி, ஆட்சி செய்வதில்
அவனுக்குக் கவனம் குறைந்துவிடுமோ என்று அஞ்சினார் புலவர்
குடபுலவியனார். ஓர் அருமை மிக்க பாடலால் அவனுக்கு
அறிவுரை கூறினார். மிக நீண்ட பாடல். அறவியல்,
அறிவியல் இரண்டும் விளங்கும் இனிய கவிதை. அதில்,
நிலைகளைப் பெருக்கி விளைச்சலை மிகுதிப் படுத்துமாறு
அவனுக்குப் பொருளாதார அறிவியலைப் போதிக்கின்றார்.
“பகைவரை வென்று அவரை விலங்கு (தளை) பூட்டிச் சிறை செய்வதைவிட, மழையால் பெருகும் நீரை ஏரிகளிலும்
குளங்களிலும் சிறைப்படுத்துவதே (தேக்குவதே) ஒரு நாட்டிற்கு
நலம் பயக்கும்” என்கிறார்.
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண்தட் டோரே
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே (18 : 28-30)
(நிலன் நெளி மருங்கு = நிலம் குழியாய் உள்ள இடம்;
தட்டோர் = தளைத்தோர், சிறைப்படுத்தினோர்,பிணைத்தோர்,
தள்ளாதோர் = பிணைக்காதவர்கள்)
அவ்வாறு நீரைத் தேக்கித் தளைசெய்தவர்களின் பெயர்தான் புகழ்
வடிவில் உலகத்தோடு தளைக்கப்பட்டு நிலைக்கும். தளைக்காதவர்
பெயர் நிலைக்காது என்கிறார்.
மன்னன் தன்னை நாட்டின் காவல்காரனாகவே கருதினான். இதனால்அரசன், வேந்தன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட
மன்னனுக்குக் காவலன் என்ற பெயரும் தமிழில் உள்ளது.
மன்னுதல் என்றால் தங்குதல், நிலைபெறுதல் என்று பொருள். தன் குடிமக்களின் நலனும், நம்பிக்கையும் அவனில்தான் தங்குகின்றன
என்ற பொருளில்தான் அவன் மன்னன் எனப்பட்டான் என்று
புரிந்து கொள்வோம்.
மாணவர்களே, புறத்திணை பற்றிய முந்தைய பாடங்களை
நினைவு படுத்திப் பாருங்கள். பழங்காலத்தில் ஏழு
புறத்திணைகளுள் பெரும்பகுதி - ஐந்து, போர் செய்தல்
பற்றியே அமைந்துள்ளன. இது ஏன் என்று விளக்கப்பட்டு
உள்ளது அல்லவா?
காவலன் ஆன மன்னன் தன் மக்களைத் தீயவர்களின்
தாக்குதலில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் அல்லவா? அதனால்
தன்னை ஆற்றல் உள்ளவனாக, போர்ப்பயிற்சியும் திறமையும்
கொண்டவனாக ஆக்கிக் கொள்வான். தன் மக்களையும்
அவ்வாறே வலிமை உடையவராக ஆக்குவான்.
புறத்திணை அந்த வீரத்திற்கு வரம்பு கட்டி ஒழுக்க விதிகள் தருகிறது. புறநானூறு, தம் வீரத்தால் தன்மானம், நாட்டுப்பற்று
போன்ற உயர் பண்புகளின் மனித உருவமாக வாழ்ந்தவர்களின் நினைவைப் போற்றுகிறது.அதற்காகப் புலவர்கள் படைத்த ‘சொல் சிற்பங்களின்’ மண்டபமாக விளங்குகிறது.
தன் சிறுமையான செயல்களால் முரண்பட்டு நலங்கிள்ளியின்
பகைவனாக ஆனவன் நெடுங்கிள்ளி. தன் சோழ மரபில் வந்தவன்
என்றாலும் அவனுடன் போர்புரிவதைத் தவிர்க்க முடியாத சூழல்
நலங்கிள்ளிக்கு
ஏற்பட்டது. கோவூர்கிழார் போன்ற புலவர்கள்
முயன்றும்
முரண்பாடு தீரவில்லை. நலங்கிள்ளி போருக்குமுன்
உரைத்த
வஞ்சினம் அவனது வீரத்தையும் ஒழுக்கத்தையும்
வெளிப்படுத்தும் சிறந்த கவிதையாகத் திகழ்கிறது.
ஈவாயாக என்று கேட்டால் இந்த அரசு என்ன, என் உயிரையே
கூடக் கொடையாக வழங்கி விடுவேன். ஆனால், என்
அமைச்சர்தம் அறிவு, படைத்தலைவர்தம் ஆற்றல் இவற்றை மதியாமல், என் வீரத்தையும் இகழ்ந்தான் அவன். உறங்கும்
புலியைக் காலால் இடறிய குருடனைப் போல் அவன் அழிவது
உறுதி. வருந்தும்படி போர் செய்து அவனை அடக்குவேன்.
தவறினால் என் மார்பில் அணிந்த மாலை, தீமை இல்லாத
நெஞ்சத்துடன் காதல் கொள்ளாத, கருங்கூந்தலை உடைய
பொதுமகளிரின் பொருந்தாத புணர்ச்சியால் வாடித் துவளட்டும்”
என்பது நலங்கிள்ளி உரைத்த வஞ்சின உரையாகும் (73). இதில் பொதுமகளிரைத் தழுவும் ஒழுக்கக் கேடு என்பது எவ்வளவு
பெரிய இழிசெயலாக அவனால் கருதப்பட்டது என்பதையும்
காண்கிறோம். வீரத்தையும் ஆண்மை ஒழுக்கத்தையும்
வியக்கிறோம்.
“சேர்ந்து படைதிரட்டிப் போருக்கு வந்திருக்கின்றனர் சேரனும்,
சோழனும். இவர்களைச் சிங்கம் போலச் சீறித் தாக்கித் தேரோடு
ஊர்நோக்கி ஓடச் செய்வேன். புறம் காட்டச் செய்வேன்.
இல்லாமல் போனால் எனக்குப் பின்வரும் இழிவுகள்
ஏற்படட்டும் : எனக்குச் சிறந்தனவாக, முகத்திற்குப் பொருந்திய, மையுண்ட பெரிய கண்களை உடைய என் மனைவியைப்
பிரிவேன் ஆகுக. அறத்தின் உறுதிப்பாடு இல்லாத ஒருவனை நீதி
மன்றத்தின் தலைமையில் வைத்து, மக்களுக்கு
எல்லாம் அறத்தின் முறை தவறிக் கொடுமை செய்த
கொடுங்கோலனாக நான் ஆகுக. என் கண்போன்ற இனிய
நண்பர்களான மாவன், ஆந்தை, அந்துவஞ் சாத்தன், ஆதன்
அழிசி, இயக்கன் ஆகியவர்களுடன் கூடிப் பேசிமகிழ்ந்து வாழும் இனிய நாட்களை இழக்கும் நிலையை நான் அடைக. தென்புலம்
ஆகிய பாண்டிய நாட்டைக் காக்கும் இந்தக் குடிப்பிறப்பை
இழந்து, வேறு வன்புலம் காப்பவனாக நான் மாறிப் பிறக்குக”.
இது பூதப் பாண்டியனின் வஞ்சின உரை ஆகும் (71).
(வன்புலம் = பண்படாத நிலம்,பாலை வனம்)
தன் நாட்டையும், நீதியையும், வீரத்தையும் எவ்வளவு
மதித்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளுவோம். மேலும்,
தன் மனைவியின் மீது எவ்வளவு ஆழ்ந்த காதலையும்,
நண்பர்களோடு எத்தனை உறுதியான நட்பையும்
கொண்டிருந்தான் என்பதையும் இவ்வுரை வெளிப்படுத்துகிறது பார்த்தீர்களா?
வீரப்போர் செய்து பெறும் புண் விழுப்புண்
(விழுமியது = மிக உயர்ந்தது) எனப்பட்டது. முதுகில் பெறும்
இழிந்த புண் புறப்புண் எனப்பட்டது. பெருஞ்சேரலாதன்
என்ற மன்னனும் சோழன் கரிகால் பெருவளத்தானும்
வெண்ணிப் பறந்தலை என்ற களத்தில் போரிட்டனர்.
கரிகாலன் எறிந்த வேல் சேரலாதனின் நெஞ்சைத்
துளைத்து முனை, முதுகின் வழி ஊடுருவி விட்டது.
மார்பின் வழியாகப் பெற்ற புண்தான். ஆனாலும் முதுகிலும்
புண் ஆகிவிட்டதே? இது இழிவு என்று கருதிய அந்த வீரன்
உண்ணா நோன்பிருந்து (வடக்கிருத்தல் என்று பெயர்) உயிர் விட்டான்.
வழியாகப் பட்டாலும் அது புறப்புண்தான்’ என்று அதற்காக
நாணி வடக்கிருந்து உயிர்விட்ட பெருஞ்சேரலாதனின் வீரமே
பெருவீரம்” என்று கரிகாலனையே பார்த்துக் கவிதை பாடியவரும்
ஒரு பெண்தான்.வெண்ணிக்குயத்தியார் என்பது அவர் பெயர்.
உழைப்பும் உதவும் மனமும் நாட்டுப் பற்றும் ஏழை பணக்காரன்
என்ற வேறுபாடு இன்றி எல்லாரிடமும் அமையும். எனவே,
நாட்டுக்காகப் போரிடுவதும் உயிர் ஈவதும் எளிய
குடிமக்களுக்குப் புகழ்பெறக் கிடைத்த நல்ல வாய்ப்பு என்று கருதப்பட்டது. வீரர்களை நாட்டுப் பணிக்காகத் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கும் வீடு மூதில் (முதுமையான இல்லம்) என்று மதிக்கப்பட்டது. அந்த இல்லத்தின் வீரப் பெண்களும்
மறக்குடியில் வந்ததால் வீர உணர்வு மிக்கவர்களாக
வாழ்ந்திருக்கின்றனர். அவர்களைச் சமுதாயம் மிக
மதித்திருக்கிறது.
“இரு நாட்களுக்கு முன்னால் போர்க்களத்தில் இவள் தந்தை
யானையைக் கொன்று தானும் இறந்தான். நேற்று நடந்த போரில்
இவள் கணவன் பசுக் கூட்டத்தைக் கவர வந்த பகைவரைத்
தடுத்துப் போரில் இறந்தான். ஒரே மகனைத் தவிர இனி
இவளுக்கு வேறு யாரும் இல்லை. போர்ப்பறையின் ஒலி
கேட்டவுடன் வீரப் புகழில் விருப்பம் கொண்டு
மகிழ்ந்து அந்த இளவயது மகனை அழைத்து வந்து
வேலைக் கையில் கொடுக்கிறாள். 'போர்க்களம் நோக்கிப் போ'
என்று விடுகிறாள். உள்ளத்தின் உறுதியைப் பார்த்தால் இவள் துணிவைக் கண்டு அச்சமாக இருக்கிறது. ‘மூதின் மகள்’ என்று சொல்வதற்குத் தகுதி உடையவள்தான்” என்று ஒரு வீரத்தாயின் செயலைப் பாராட்டுகிறார் ஒக்கூர் மாசாத்தியார்.
“போர்க்களத்தில் உன் மகன் புறம்காட்டி ஓடிவிட்டான்” என்று
சிலர் சொன்னார்கள். “அவ்வாறு அவன் முதுகு காட்டி
ஓடியிருந்தால் அவனுக்குப் பால் ஊட்டிய இந்த மார்பகத்தை
அறுத்து எறிவேன்” என்று கையில் வாளுடன் போர்க்களத்தில்
பிணங்களைப் புரட்டித் தேடினாள் தாய். மார்பில் புண்பட்டு
உடல் சிதைந்து மகன் கிடப்பதைப் பார்த்தாள். நரம்புகள்
திரண்டு தோள் தளர்ந்து தாமரை இலைபோல் வயிற்றில் சுருக்கம்
விழுந்த முதுமையான வயதில் பிறந்த சிறுவன் அவன். அந்த
வீரமகனின் பிணத்தைப் பார்த்து, ஈன்ற பொழுது அடைந்ததைவிட
அதிக மகிழ்ச்சி அடைந்தாள்” என்று பாடுகிறார், காக்கை
பாடினியார் நச்செள்ளையார்
சான்றோர் என மதிக்கப் பட்ட சங்கப் புலவர்களின்
வாழ்க்கையைப் பற்றி ஒரு தவறான கருத்து நிலவுகிறது.
“மன்னர்களையும் செல்வம் மிக்க சிலரையும் புகழ்ந்து பாடல்
எழுதி, அவர்களிடம் இல்லாத சிறப்புகளை இருப்பதாகப்
புனைந்து உரைத்து, அவர்கள் தந்த பொருளைப் பெற்றுப்
பிழைப்பு நடத்தியவர்கள் புலவர்கள்” என்பதே அது. அறியாமை அல்லது தமிழர்மீது கொண்ட பொறாமை இவற்றினால் சிலர்
பரப்பிய பழிஉரை இது என்பதைப் புறநானூற்றை ஆழ்ந்து
கற்றால் உணர முடியும்.
புலவர் பாடும் புகழ் உடையோர்தாம் மேல் உலகில் நலம்
அடைய முடியும் என்று மன்னர்கள் நம்பினர். அந்தப் புகழுக்கு
உரிய நடத்தையைக் கடைப்பிடித்து நேர்மையுடன் வாழ்ந்தனர்.
புலவர்களும், புகழ்மொழிக்குத் தகுதி இல்லாத ஒருவர்
எத்துணைப் பெரிய வேந்தரானாலும் அவரைப் பாடமாட்டார்கள்.
தகுதி உடையவரைத் தேடிக் கொண்டு பல கற்கள்
தொலைவானாலும் நடந்து செல்வார்கள்.
நெடுங்கிள்ளி, இளந்தத்தன் என்ற புலவரை ஒற்றன் எனக்
கருதிக கொல்ல முயன்றான். அப்போது கோவூர்கிழார் நெடுங்கிள்ளிக்குக் கூறிய அறிவுரைப் பாட்டு ‘புலவர்கள் என்பார்
யார்?’ என்பதை உலகுக்குப் புரிய வைக்கும் உயர்ந்த கவிதை.
வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குபாடிப்
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதுஅறிந் தன்றோ, இன்றே ! (47: 1-7)
(சுரம் = பாலை நிலங்கள் ; ஓம்பாது = நாளைக்கு வேண்டுமே
எனச் சேமியாமல் ; கூம்பாது = தன்னலத்தால் பொருளை
இறுக்கிப் பிடிக்காமல் ; வரிசை = தகுதியை அறிந்து தரும்
பரிசு)
“தகுதி உடைய வள்ளலைத் தேர்ந்து, அவனது இருப்பிடம்
நெடுந்தொலைவு என்றாலும் பழுத்த மரத்தை நாடும் பறவை
போல, நீண்ட கொடிய பாலை நிலங்கள் பலவற்றைக் கடந்து
செல்வோம். எவருக்கும் கீழ்ப்படாத நாவின் பொய்யில்லாத
மொழிகளால் எங்கள் திறனுக்கு இயன்ற வரை பாடுவோம்.
கிடைத்ததற்கு மகிழ்வோம். பெரிய சுற்றத்தார் அனைவர்க்கும்
உணவு தருவோம். நாளைக்கு வேண்டுமே என்று ஒதுக்கி
வைக்காமல் உண்டு, பதுக்கி வைக்காமல் மற்றவர்க்கு
வாரிக் கொடுத்து வாழுவோம். வள்ளலின் அவையில்
கிடைக்கும் பொருளின் அளவுக்காக அல்ல, பரிசிலால் கலைத் திறமையை அளவிடும் மதிப்புக்காகத்தான் இவ்வளவு துன்பமும் படுகிறோம். அப்படிப்பட்ட பரிசில் வாழ்க்கையைக் கொண்ட
எங்கள் புலவர் கூட்டம் அடுத்தவர்க்குத் தீங்கு என்பதை நினைத்தும் பார்த்ததுண்டா?” என்று பெருமிதத்துடன் கேட்கிறார் கோவூர் கிழார். “உன்னைப் போன்ற மன்னர்களும் எங்கள்
புலவர் கூட்டத்தில் உள்ளனர்” என்றும் உணர்த்திப்
புலவனைக் காப்பாற்றினார்.
பெருஞ்சித்திரனார் தம் வீட்டின் வறுமை நிலையைப் பாடிய
புறநானூற்றுப் பாடல்கள் (159, 160) துயரச் சொல் சித்திரங்கள்.
அந்நிலையிலும் தன் மானத்துடன் அவர் வாழ்ந்ததை அவர்
பாடல்கள் காட்டுகின்றன.
பெரிய வள்ளலான அதியமான், இவர் தேடிச் சென்றபோது,
இவரைக் காணாமல், கவிதையைக் களோமல் பரிசிலை மட்டும்
அனுப்பினான். அந்தப் பரிசிலைப் பெற்றுக்கொள்ள மறுத்து அவர்
பாடிய பாடல் பெருமிதம் மிக்கது.
காணாது ஈத்த இப்பரிசிற்கு யான்ஓர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் (208 : 6-7)
“நான் ஒரு சொல் வியாபாரி அல்லன்” என்ற சொல்லைக் கூர்ந்து
நோக்குங்கள். அறிவையும் புலமையையும் சீர்தூக்கித் தகுதி
அறிந்து தராவிட்டால் அப்பரிசையே மறுப்பவர்கள். தகுதி
அற்றவரைப் பாடுவார்களா? இந்தப் புலவர்களும் கலைஞர்களும்
பாராட்டிப் பாடும் அளவுக்குப் பார் ஆண்ட மன்னர் தங்கள்
தகுதியை வளர்த்துக் கொண்டனர் என்பதே உண்மை.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I