தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

3.5-சமணக் கோயில்களும் வழிபாடும்

3.5 சமணக் கோயில்களும் வழிபாடும்


    இனி, சமணக் கோயில்கள் பற்றியும் அவற்றில்
நடைபெறும், பூசைகள், திருவிழாக்கள் பற்றியும் பார்ப்போம்.

3.5.1 சமணக் கோயில்கள்

சமணக் கோயில்

    பழந்தமிழகத்தில் சமணக் கோயில்கள் பல இருந்தன.
அக்கோயில்களுள் பல பிற சமயக் கோயில்களாக நாளடைவில்
மாற்றப்பட்டுவிட்டன. இன்றைய காலக் கட்டத்தில் ஜினகாஞ்சி
(காஞ்சிபுரத்திற்கு அருகில்), வடார்க்காடு மாவட்டத்தில் உள்ள
அரந்தை, திறக்கோல், திருப்பாண்மலை ஆகிய இடங்களில்
சமணக் கோயில் உள்ளதாகத் தெரிகிறது.

    சமணக் கோயில்களின் அமைப்பு முறை சைவ, வைணவக்
கோயில்களின் அமைப்பு முறையைப் பெரிதும் ஒத்துள்ளது. சைவ,
வைணவக் கோயில்களில் உள்ளது போலவே மூலவர்,
உற்சவமூர்த்தி ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. சாஸ்தா,
யக்ஷி     முதலிய சிறு     தெய்வங்களின் உருவங்களும்
இக்கோயில்களில் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள சமணர்கள்
திகம்பரர் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆகையால்
இக்கோயில்களில் உள்ள திருவுருவங்கள் ஆடையில்லாமல்
அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் சிறு தெய்வங்களுக்கு
ஆடைகள் உடுத்தப்பட்டுள்ளன.

கோமதேஸ்வரா

    சமணக் கோயில்களில் அருகக் கடவுள் அல்லது
தீர்த்தங்கரர்களின் திருவுருவங்கள் நின்ற கோலமாகவும் இருந்த
கோலமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கிடந்த
கோலமாக இவ்வுருவங்கள் அமைக்கப்படுவது வழக்கமில்லை.

3.5.2 வழிபாடுகள்

சமண வழிபாடு

    சமண வழிபாட்டில், பூசை, விழாக்கள் போன்றவை
முக்கியப் பங்கு வகிக்கின்றன.

●  பூசைகள்

    சைவ, வைணவக் கோயில்களில் நாள்தோறும் பூசைகள்
நடைபெறுவதைப் போலவே சமணக் கோயில்களிலும் காலை,
மாலை வேளைகளில் பூசைகள் நடைபெறுகின்றன. அபிஷேகம்,
ஆராதனை, அர்ச்சனை முதலியவையும் இக்கோயில்களில் நடைபெறுகின்றன.

●  திருவிழாக்கள்

    சைவ,     வைணவக்     கோயில்களைப் போலவே
திருவிழாக்களும் அவற்றையொட்டி இறைவன் திருவீதி உலா
நிகழ்ச்சிகளும் சமணக் கோயில்களில் நடைபெறுகின்றன.

    உற்சவ மூர்த்திகளும், பரிவாரத் தெய்வங்களும்
விமானத்திலும் வாகனங்களிலும் எழுந்தருளுகின்றன. சமண
மூர்த்திகள் வீதி உலா வரும்பொழுது அம்மூர்த்திகளுக்கு
முன்னர்த் தருமச்சக்கரம் எழுந்தருளும்.

    எனவே, சமணக் கோயில்களில் உள்ள இறை உருவங்கள்,
வழிபாட்டு முறைகள், கோயில்களின் அமைப்பு, திருவிழா
நிகழ்ச்சிகள் முதலியவற்றைக் கூர்ந்து நோக்கும் பொழுது அவை
சைவ, வைணவ சமயங்களைப் பெரிதும் ஒத்திருப்பதைக்
காணலாம். இவை மட்டுமின்றி, சில பண்டிகைகள் கூட
ஒன்றுபோல் அமைந்திருப்பதைக் காண முடிகிறது. விழாக்
கொண்டாடும் நாட்களும் முறைகளும் ஒன்றாக இருக்கின்றன;
காரணங்கள் வேறாக இருக்கின்றன.

●  தீபாவளி

    தீபம் + ஆவளி. தீபம் என்றால் விளக்கு. ஆவளி
என்றால் வரிசை. விளக்குகளை வரிசையாக ஏற்றி வழிபடும் விழா.
இதைச் சமணர்கள் மகாவீரர் வீடுபேறு அடைந்த நாளாகக்
கொண்டாடி மகிழ்கின்றனர். திருமால் நரகாசுரனைக் கொன்ற
நாளைத் தீபாவளி தினமாக இந்து சமயத்தார் கொண்டாடுகின்றனர்.

●  சிவராத்திரி

    சிவராத்திரி விழா மாசி மாதம் அமரபக்ஷத்து (தேய்பிறை)ச்
சதுர்த்தசி அன்று நள்ளிரவு கொண்டாடப்படுவதாகும். இதே
நாளில்     இவ்விழாவைச் சைவர்களும்     சமணர்களும்
கொண்டாடுகின்றனர்.

    முதல் தீர்த்தங்கரர் ரிஷப தேவர் என்கிற ஆதிநாதர்
வீடுபேறு அடைந்த நாளைச் சமணர்கள் சிவராத்திரியாகக்
கொண்டாடி மகிழ்கின்றனர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:15:24(இந்திய நேரம்)