தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

6.4-நான்கு சத்தியங்கள்

6.4 நான்கு சத்தியங்கள்


    மேலே கூறிய பன்னிரு சார்புகளை விட்டு நீங்குவதற்கு
நான்கு உயர்ந்த உண்மைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இவற்றை நான்கு சத்தியங்கள் என்பர்.

அவை:

  1. நோய் (துக்கம்)
  2. நோய்க் காரணம் (துக்கோற்பத்தி)
  3. நோய் நீக்கம் (துக்க நிவாரணம்)
  4. நோய் நீங்கும் வழி (துக்க நிவாரண மார்க்கம்)

6.4.1 நோய் - நோய்க் காரணம்

    புலன்களால் உண்டாகும் பற்றுகள் எல்லாம் துன்பம்
தருவன பிறத்தல் துன்பம். பிணி, மூப்பு, சாக்காடு அடைவது
துன்பம். இது முதல் உண்மை.

    துன்பம் விளைவதற்குக் காரணமாக இருப்பவைகளை
உணர்வது இரண்டாவது உண்மை.

6.4.2 நோய் நீக்கும் வாயில்களும் வழிகளும்

    நோய் நீக்கும் வாயில்களை அறிவது மூன்றாவது உண்மை.
நோயையும் நோய்க்குக் காரணமாக இருப்பவைகளையும் நன்கு
அறிந்து, ஆசைதான் காரணம் என்பதைப் புரிந்து கொண்டு,
நோயினின்று விடுதலை அடையும் வாயில்களை அறிதல்
வேண்டும். உண்மையை உறுதியாக உணர்தல் வேண்டும்.
அவற்றைப் பின்பற்ற வேண்டும். இதுவே நான்காவது உண்மை.

    துன்பத்தைப் போக்கி நிர்வாண மோட்சம் அடைவதற்கு
எட்டு ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டும். இதை
அஷ்டாங்க மார்க்கம் என்பர்.

●  அஷ்டாங்க மார்க்கம்

    கீழ்க்காணும் எட்டு ஒழுக்கங்களை அஷ்டாங்க மார்க்கம்
என்பர். அவை:

1)
நற்காட்சி
-
ஸம்யக் திருஷ்டி
2)
நல்லூற்றம் அல்லது நற்கருத்து
-
ஸம்யக் சங்கல்பம்
3)
நல்வாய்மை
-
ஸம்யக் வாக்கு
4)
நற்செய்கை
-
ஸம்யக் கர்மம்
5)
நல்வாழ்க்கை
-
ஸம்யக் ஆஜீவம்
6)
நல்லூக்கம் அல்லது நன்முயற்சி
-
ஸம்யக் வியாயாமம்
7)
நற்கடைப்பிடி
-
ஸம்யக் ஸ்மிருதி
8)
நல்லமைதி
-
ஸம்யக் சமாதி

    இந்த அஷ்டாங்க மார்க்கத்தில் சீலம், சமாதி, பஞ்ஞா
என்னும் மூன்றும் அடங்கும். இனி, அவற்றைப் பற்றிக் காண்போம்.

6.4.3 சீலம்

    சீலம் என்றால் ஒழுக்கம் என்று பொருள். இது
மூவகைப்படும். அவை:

  • பஞ்ச சீலம்
  • அஷ்டாங்க சீலம்
  • தச சீலம்

●  பஞ்ச சீலம்

    ஐந்து ஒழுக்கங்களைக் கூறுவது பஞ்ச சீலம். அவை:

  • ஓர் உயிரையும் கொல்லாமலும் தீங்கு செய்யாமலும் இருத்தல்.
  • பிறர் பொருளைக் களவாடாது இருத்தல்.
  • முறை தவறிய சிற்றின்பத்தை நீக்குதல்.
  • பொய் பேசாது இருத்தல்.
  • மது வகைகளை உண்ணாது இருத்தல்.

இவை இல்லறத்தார்க்கு உரியன.

●  அஷ்டாங்க சீலம்

    எட்டு ஒழுக்கங்களைக் கூறுவது அஷ்டாங்க சீலம் அவை:

  • மேற்கூறிய ஐந்து
  • இரவில் தூய்மையான உணவைக் குறைவாக உண்ணல்.
  • பூ, சந்தனம் உள்ளிட்ட வாசனைப் பொருள்களைப்
    பயன்படுத்தாமை.
  • பஞ்சணை முதலியவற்றை நீக்கித் தரையில் பாய் மேல்
    படுத்து உறங்கல்.

இவ் எட்டு ஒழுக்கங்களும் இல்லறத்தாரில் சற்று உயர்ந்தோர்
பின்பற்ற வேண்டியவை.

●  தச சீலம்

    பத்து ஒழுக்கங்களைக் கூறுவது தச சீலம். அவை:

  • மேற்கூறிய எட்டு.
  • இசைப்பாட்டு, கூத்து, நாடகம் முதலியவற்றைப் பார்க்காமல்
    இருத்தல்.
  • பொன், வெள்ளி முதலியவற்றைத் தொடாது இருத்தல்.

இவை துறவிகள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கம் ஆகும்.

6.4.4 சமாதி

    துறவறம் மேற்கொண்டு தச சீலங்களில் ஒழுகுகிற
துறவிகள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கம் சமாதி அல்லது
தியானம் ஆகும்.

    அதாவது, விலக்க வேண்டிய தீய எண்ணங்களை நீக்கி,
மனத்தை ஒரு நிலையில் இருத்துவது சமாதி நிலை எனப்படும்.
இதனால், ஐம்புல இன்பங்கள், பகை, கோபம் முதலிய தீய
குணங்கள் தடுக்கப்படுகின்றன.

6.4.5 பஞ்ஞா

    இதை ஞான நிலை என்று கூறலாம். சமாதி நிலையில் தீய
எண்ணங்கள் சயலற்று அடங்கிக் கிடக்கின்றன. இவை சில
நேரங்களில் திடீரென வெளிப்படக் கூடும். அவ்வாறு அவை
மீண்டும் செயற்படாதவாறு தம் நுண்ணறிவு என்னும் ஞானத்தைக்
கொண்டு அவற்றை அழிக்க வேண்டும். இந்த ஞான நிலையை
அடைந்தவர் உலகத்தின் உண்மையான நிலையைக் காண்கிறார்.

    இவற்றின் மூலம் உலகம் நிலையில்லாதது; துன்பம்
நிறைந்தது; அசுத்தமானது என்று உணர்ந்து, பற்றுகளை விட்டு
பரிநிர்வாண மோட்சமாகிய வீடுபேற்றை அடையலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:18:18(இந்திய நேரம்)