Primary tabs
கவிதை, நாடகம், புனைகதை,
கட்டுரை எனத் தம் கருத்தை
முருகியலுணர்வும், பயன்பாடும் அமையத் தமிழில் இயற்றுவது
படைப்பிலக்கியம்.
மாற்றவியலாத சொற்கோப்புடையது கவிதை. குறிப்பிட்ட
வடிவங்களில் பாட வேண்டும் என முன்னோர் வகுத்த நெறிகளில்
எதுகை, மோனை முதலியன அமையத் தொடுப்பது மரபுக்
கவிதையாகும். வரையறுத்த
இலக்கணம் ஏதுமின்றிச்
சொற்புனைவுகள் இன்றி நறுக்குத்
தெறித்தாற்போல்
உணர்த்தவல்லது புதுக்கவிதை. அவை கருத்து, உணர்ச்சி, கற்பனை,
வடிவம் ஆகியவற்றால் சிறந்து நிற்பன.
உரையாடல் சிறந்திருப்பது நாடகம். மேலும், தொடக்கம், வளர்ச்சி, உச்சம், வீழ்ச்சி, முடிவு என ஐந்து கூறுகளையுடையது. நாடகம் ஒப்பனை, உச்சரிப்பு, நடிப்பு ஆகியவற்றால் பெருமை பெறுவது.
நிகழ்ச்சிகளைப் புனைந்துரைப்பது கதை. ஒரு கருத்தைச்
சில
நிகழ்ச்சிகளில் சில பாத்திரங்களால் ஆர்வமுற எடுத்துரைப்பது
சிறுகதை. பலரது வாழ்வியலை ஒருவரின் வாழ்வியலோடு
பிணைத்துப் பற்பல நிகழ்வுகளில் விவரிப்பது புதினமாகும்.
இவ்விரண்டிலும் இட, கால, சூழல் பின்னணிகளும், கதைப்பின்னலும்,
கதைப்பாத்திரப் படைப்புகளும் குறிப்பிடத்தக்க
சிறப்பின.
கட்டுரை, உரைநடையில் அமைவது. வாழ்க்கை வரலாறு, ஆராய்ச்சி, விளக்கம், பயணம் எனப் பல வகைகளில் கருத்துகளைக் கட்டியுரைப்பதாகும்.
மேற்குறித்தனவற்றை இப்பாடத்தில் தெரிந்து பயில்வதன்வழி,
இவ்வாறு இயற்றும் படைப்பிலக்கிய உத்திகள் குறித்து
அறிந்துணர்ந்து கொள்கிறோம்.