தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாவின வடிவங்கள்

3.3 பாவின வடிவங்கள்

     வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய
நால்வகைப் பாக்களுக்கும் உரியனவாகத் தாழிசை, துறை, விருத்தம்
ஆகிய பாவின வகைகள் அமைகின்றன.

 
3.3.1 தாழிசை
     குறைந்த ஓசையுடையது. இது ஆறு வகைப்படும்.

1) குறள் தாழிசை

     குறள் வெண்பாவில் கலித்தளை கலந்து செப்பலோசை
சிதைந்து வருவது.

(எ.கா) வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்
     பண்டையள் அல்லள் படி


2) வெள்ளொத்தாழிசை

     இன்னிசைச் சிந்தியல் வெண்பா, ஒருபொருள்மேல்
மூன்றடுக்கி வரும்போது இப்பெயர்பெறும்.

3) வெண்டாழிசை

     வெண்டளை, ஆசிரியத்தளை, கலித்தளை ஆகியவற்றுள்
ஒன்றாலோ, பலவாலோ மூன்றடிகளில் அமைவது; ஈற்றடி
சிந்தடியாகவும் ஏனைய அடிகள் அளவடியாகவும் வரும்.

     எ.கா. ஆசிரியத் தளையால் வருவது.

     நண்பி தென்று தீய சொல்லார்
     முன்பு நின்று முனிவு செய்யார்
     அன்பு வேண்டு பவர்


4) ஆசிரியத் தாழிசை

     அளவொத்த அளவடிகள் மூன்று கொண்டு, ஒரு பொருள்
மேல் மூன்றடுக்கி வருவது இது. சிறுபான்மை, தனித்து வருவதும்
உண்டு.

(எ.கா) கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன்
     இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
     கொன்றையந் தீங்குழல் களோமோ தோழீ


5) கலித்தாழிசை

     இரண்டடிகளிலும் பல அடிகளிலுமாக அமையும். ஈற்றடி, சீர்
மிகுந்து வரும். ஏனைய அடிகளில் சீர்கள் ஒத்தும் ஒவ்வாதும்
அமையும். கலியொத்தாழிசை என்பதும் இதுவே.

(எ.கா) செல்லார் பொழில்தில்லைச் சிற்றம் பலத்தெங்கள்
     பொல்லா மணியைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்!


6) வஞ்சித் தாழிசை

     குறளடிகள் நான்கு கொண்டு அமைவது. அடிகள் அனைத்தும்
ஓரெதுகை பெற்று வர வேண்டும். ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி
வருவதும் மிக அவசியமானது.

(எ.கா) பிணியென்று பெயராமே
     துணிநின்று தவஞ்செய்வீர்!
     அணிமன்றில் உமைபாகன்
     மணிமன்று பணிவீரே!


     இவற்றில் தளை பார்த்தல் கூடாது.

3.3.2 துறை
     துறை என்னும் பாவினம் நான்கு வகைப்படும்.

1) குறள்வெண் செந்துறை

     அளவொத்த இரண்டடிகளில் அமையும். அவ்வடிகள்
அளவடியாகவோ,     நெடிலடியாகவோ,     கழிநெடிலடியாகவோ
அமையும்.

(எ.கா) 1. ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
     ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே


     2. நன்றி யாங்கள் சொன்னக்கால்
     நாளும் நாளும் நல்லுயிர்கள்
     கொன்று தின்னும் மாந்தர்கள்
     குடிலம் செய்து கொள்ளாரே


2) ஆசிரியத் துறை

     நான்கடியில் அமையும்; இடைமடக்குடையது; முதலடி தவிரப்
பிற அடிகளில் ஏதேனும் ஒன்று அளவு குறைந்து வரும்.

(எ.கா) போதுறு முக்குடைப் பொன்னெயில் ஒருவன்
     தாதுறு தாமரை அடியிணை பணிந்தார்
     தாதுறு தாமரை அடியிணை பணிந்தார்
     தீதுறு தீவினை இலரே


3) கலித்துறை

    
நெடிலடி நான்குடையது. 1, 3 சீர்களிலோ, 1, 4 சீர்களிலோ,
1, 3, 5 சீர்களிலோ மோனை அமைதல் நன்று. சந்தத்தில்
அமைவதும் உண்டு. பல வாய்பாடுகளில் அமையும். இவற்றில்
பாவியற்றப் பயிலல் நன்று. வாய்பாடுகளை மனம் கொள்ளுதல்
அவசியம்.

1) மா விளம் விளம் விளம் மா - வாய்பாடு

     கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
     பண்ணு றத்தெரிந் தாய்ந்தஇப் பசுந்தமிழ் ஏனை
     மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
     எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?


     2) விளம் மா விளம் மா காய் - வாய்பாடு

     காயிலை தின்றும் கானிலு றைந்தும் கதிதேடித்
     தீயிடை நின்றும் பூவலம் வந்தும் திரிவீர்காள்!
     தாயினும் அன்பன் பூமகள் நண்பன் தடநாகப்
     பாயல்மு குந்தன் கோயில ரங்கம் பணிவீரே
 

     கட்டளைக் கலித்துறை என்பதும் இதில் ஒரு வகை. முதல்
நான்கு சீர்களிலும் வெண்டளை பிறழாமல், கடைசிச்சீர் அடிதோறும்
விளங்காயாக அமைய, நேரசையால் தொடங்குவது. அடிக்கு 16
எழுத்தும், நிரையசையில் தொடங்குவது 17 எழுத்தும் என
அமைவது (இவ்வாறு எண்ணுகையில் ஒற்றெழுத்தைத் தவிர்க்க
வேண்டும்). தஞ்சைவாணன் கோவை, அபிராமி அந்தாதி
முதலிய நூல்கள் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்தவை.

(எ.கா) அன்னைத் தமிழினில் ஆயிரம் நற்பேர் அமைந்திருப்ப
     இன்னல் ஒலிப்புடை ஏதில் மொழிப்பெயர் ஏற்றதென
     உன்னி மழலையர்க் கெல்லாம் பெயரிட் டுவந்திடுவோர்
     கன்னல் இருப்பவும் காம்பு சுவைக்கும் கருத்தினரே


    
(காம்பு - மூங்கில்)

4) வஞ்சித்துறை

     குறளடி நான்கு கொண்டு தனித்து வருவது. பல
வாய்பாடுகளிலும் இதனை அமைக்கலாம்.

(எ.கா)     கூவிளம் தேமா - வாய்பாடு

     நல்லவர் உள்ளம்
     வல்லவன் இல்லம்
     தொல்லைகள் இல்லா
     எல்லையில் இன்பம்
3.3.3 விருத்தம்

    விருத்தம் ‘மண்டிலம்’ எனவும் படும். இது நால்வகைப்படும்.

1) வெளி விருத்தம்

     பெரும்பாலும் நான்கடிகளில் அமையும்; மூன்றடிகளில்
வருவதும் உண்டு. அடிதோறும் ஒரே தனிச்சொல்லைப் பெற்று
வரும். தனிச்சொல்லைச் சேர்க்காமல் அடிதோறும் நான்கு சீர்கள்
அமையும்.

(எ.கா) சொல்லல் சொல்லல் தீயவை சொல்லல் -
             எஞ்ஞான்றும்;
     புல்லல் புல்லல் தீநெறி புல்லல் - எஞ்ஞான்றும்;
     கொல்லல் கொல்லல் செய்ந்நன்றி கொல்லல் -
             எஞ்ஞான்றும்,
     நில்லல் நில்லல் நீசரைச் சார்ந்திங் - கெஞ்ஞான்றும்


2) ஆசிரிய விருத்தம்
 

     ஆறுசீர் முதல் பல சீர்களிலும் அமையும் அளவொத்த
நான்கடிகளில் அமைவது. ‘கழிநெடிலடிகள் நான்கு கொண்டது’
என்பர். இக்காலப் பயன்பாட்டில் மிகுதியும் உள்ளது இது.
மோனை சிறக்குமாறு மடக்கி எழுதப்பெறும்.

  • அறுசீர் விருத்தம்
  •      விளம் மா தேமா - வாய்பாடு

         இதந்தரு மனையின் நீங்கி
         இடர்மிகு சிறைப்பட் டாலும்
         பதந்திரு இரண்டும் மாறிப்
         பழிமிகுந் திடருற் றாலும்
         விதந்தரு கோடி இன்னல்
         விளைந்தெனை அழித்திட் டாலும்
         சுதந்தர தேவி நின்னைத்
         தொழுதிடல் மறக்கி லேனே!


        
    மா மா காய் - வாய்பாடு

         இல்லாப் பொருளுக் கேங்காமல்
         இருக்கும் பொருளும் எண்ணாமல்
         எல்லாம் வல்ல எம்பெருமான்
         இரங்கி அளக்கும் படிவாங்கி
         நல்லார் அறிஞர் நட்பையும்நீ
         நாளும் நாளும் நாடுவையேல்
         நில்லா உலகில் நிலைத்தசுகம்
         நீண்டு வளரும் நிச்சயமே!


        
    காய் காய் காய் காய் மா தேமா - வாய்பாடு

         கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதல்
         கற்ற கேள்வி
         வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய்
         மறைக்கப் பாலாய்
         எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி
         இருந்து காட்டிச்
         சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத்
         தொடக்கை வெல்வாம்

  • எழுசீர் விருத்தம்
  • · விளம் மா விளம் மா
    விளம் விளம் மா - வாய்பாடு


    (எ.கா) அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
         அன்பினில் விளைந்தவா ரமுதே
         பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
         புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
         செம்மையே ஆய சிவபதம் அளித்த
         செல்வமே சிவபெரு மானே
         இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
         எங்கெழுந் தருளுவ தினியே


    · புளிமா புளிமா புளிமா புளிமா
         புளிமா புளிமா புளிமா - வாய்பாடு


    (எ.கா) பனியால் நனைந்து வெயிலால் உலர்ந்து
         பசியால் அலைந்தும் உலவா
         அனியா யவெங்கண் அரவால் இறந்த
         அதிபா வமென்கொ லறியேன்
         தனியே கிடந்து விடநோய் செறிந்து
         தரைமீ துருண்ட மகனே
         இனியா ரைநம்பி உயிர்வாழ் வமென்றன்
         இறையோ னுமியானு மவமே

  • எண்சீர் விருத்தம்
  • காய் காய் மா தேமா - வாய்பாடு

    வெள்ளந்தாழ் விரிசடையாய்! விடையாய்! விண்ணோர்
         பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
    பள்ளந்தாழ் உறுபுனலின் கீழ்மே லாகப்
         பதைத்துருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்(கு)
    உள்ளந்தாள் நின்றுச்சி அளவும் நெஞ்சாய்
         உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா
    வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
         கண்ணிணையும் மரமாம்தீ வினையி னேற்கே

    காய் காய் காய் மா - வாய்பாடு

    நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
    நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
    பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
    பொலபொலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
    காப்பதற்கும் வகையறியீர்! கைவிடவும் மாட்டீர்!
    கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே
    ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல
    அகப்பட்டீர்! கிடந்துழல அகப்பட் டீரே!

    மா விளம் மா விளம் - வாய்பாடு

         வான நாடரும் அறியொ ணாதநீ
         மறையின் ஈறுமுன் தொடரொ ணாதநீ
         ஏனை நாடரும் தெரியொ ணாதநீ
         என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
         ஊனை நாடகம் ஆடு வித்தவா
         உருகி நானுனைப் பருக வைத்தவா
         ஞான நாடகம் ஆடு வித்தவா
         நைய வையகத் துடைய விச்சையே


    விளம் விளம் விளம் மா - வாய்பாடு

         கூவின பூங்குயில்; கூவின கோழி;
         குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
         ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்(து)
         ஒருப்படு கின்றது; விருப்பொடு நமக்குத்
         தேவ! நல் செறிகழல் தாளிணை காட்டாய்!
         திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
         யாவரும் அறிவரி யாய் ! எமக் கெளியாய்!
         எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே


  • பன்னிருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
  •      விளம் மா விளம் மா
         மா காய் - வாய்பாடு

    புண்ணிய முதலே! பொங்கொளி மணியே!
         பொய்யாப் பெருவாழ்வே!
    பொள்ளலில் முத்தே! கள்ளமில் வித்தே!
              புரையில் சுவைப்பாகே!
    தண்ணிய அமுதே! மண்ணியல் மதியே!
         தமிழ்நா வலரேறே!
         சத்துவ நிதியே! பொத்திய மலநோய்
         சாடு பெரும்பகையே!
    எண்ணிய அன்ப ருளத்தமு தூற
         இனிக்கு நறுந்தேனே!
    என்றும் பத்தி ரசங்கனி கனியே!
              எந்நா ளினுமெங்கள்
    கண்ணிய பொருளே! ஆய்பவர் தெருளே!
         ஆடுக செங்கீரை!
    ஆரரு ளாகர! சேவையர் காவல!
              ஆடுக செங்கீரை!


         இவ்வாறு அறுசீர் விருத்த வாய்பாட்டு அமைப்பு இரு
    மடங்காகிப் பன்னிரு சீர் விருத்தம் அமையும்.

  • பதினான்கு சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
  •      மா மா மா மா மா மா விளம் - வாய்பாடு

    பேச வந்த தூத! செல்ல
         ரித்த ஓலை செல்லுமோ?
         பெருவ ரங்கள் அருள ரங்கர்
         பின்னை கேள்வர் தாளிலே
    பாசம் வைத்த மறவர் பெண்ணை
              நேசம் வைத்து முன்னமே
         பட்ட மன்னர் பட்ட தெங்கள்
         பதிபு குந்து பாரடா!
    வாச லுக்கி டும்ப டல்க
         வித்து வந்த கவிகை; மா
         மகுட கோடி தினைய ளக்க
         வைத்த காலும் நாழியும்;
    வீசு சாம ரங்கு டில்தொ
         டுத்த கற்றை; சுற்றிலும்
    வேலி யிட்ட தவர்க ளிட்ட
              வில்லும் வாளும் வேலுமே

         இவ்வாறே எழுசீர் விருத்த வாய்பாட்டு அமைப்பு இரு
    மடங்காகிப் பதினான்கு சீர் விருத்தம் அமையும்.

    3) கலி விருத்தம்

         அளவொத்த அளவடி நான்குடையது கலிவிருத்தமாகும்.

    (எ.கா) உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
         நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
         அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
         தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே


         இது சந்தத்தில் அமைவதும் உண்டு.

    (எ.கா) வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின்
                     மறையப்
         பொய்யோஎனும் இடையாெளாடும் இளையானொடும்
                     போனான்
         மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
         ஐயோஇவன் வடிவென்பதோர் அழியாவழ குடையான்


    4) வஞ்சி விருத்தம்

         அளவொத்த சிந்தடிகள் நான்கு கொண்டது.

    (எ.கா) பொழுது போக்காய் இல்லாமல்
         எழுதும் பாக்கள் எல்லாமும்
         அழுது வாழ்வோர் நெஞ்சத்தின்
         பழுதை நீக்கின் நன்றாமே


         இது புளிமா தேமா தேமாங்காய் என்னும் வாய்பாட்டில்
    அமைந்தது - இவ்வாறு எண்ணற்ற வாய்பாடுகளில் இதனைப்
    புனையலாம்.

         இவ்வாறு பாவின வடிவங்கள் அமைகின்றன.

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:29:06(இந்திய நேரம்)