Primary tabs
மரபுக்கவிதையே ‘கவிதை’ எனத் தொன்று தொட்டு மதிக்கப்
பெற்றுவருவதாகும். ஓசை ஒழுங்கும், வரையறுக்கப்பட்ட வடிவமும்
இதன் இன்றியமையாத இயல்புகளாகும்.
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும்
அடிப்படை இலக்கணங்கள் மரபுக்கவிதை இயற்றத்
தேவையானவையாகும். எனவே அவற்றை அறிந்தோம்.
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா
ஆகியவற்றின் இலக்கணங்களும், வகைகளும், பாவினங்களாகிய
தாழிசை, துறை, விருத்தங்களும் குறித்த அறிவும் புலமையும்
பாப்புனைவோர்க்கு இன்றியமையாதனவாதலின் அவை
எடுத்துரைக்கப்பட்டன. பாவகைகள் நெருங்கிய தொடர்புடையவை.
பாவினங்கள் பாவுடன் நெருங்கிய தொடர்புடையனவல்ல.
பாவினங்களில் வாய்பாட்டமைப்புக்கே முக்கியத்துவம் தரப்பெறும்.
தளைகள் குறித்த சிந்தனை தேவைப்படாது.
பா இயற்ற விரும்புவோர் பொருள்கோள், செய்யுள் விகாரம்,
நடை நலன், புணர்ச்சி விதிகள் ஆகியன குறித்தும் அறிந்திருத்தல்
வேண்டுமாதலின் அவை ஓரளவு சுட்டிக்காட்டப்பட்டன.
இவ்வகையில் மரபுக்கவிதை வடிவம் என்னும் இப்பாடம்,
பாக்களை அடையாளம் காணவும், புதியனவற்றை இவ்வடிவங்களில்
புனையவும் ஆர்வத்தையும் பயிற்சியையும் அளிப்பதாக
அமைகின்றது.