தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புதுக்கவிதை உருவம்

4.1 புதுக்கவிதை உருவம்

     சுவைபுதிது பொருள்புதிது வளம்புதிது
     சொற்புதிது சோதி மிக்க
     நவகவிதை

எனப் பாரதி அறுசீர் விருத்தத்தில் விடுத்த அழைப்புதான்,
புதுக்கவிதை வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாய்
அமைந்தது.

சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளை
உடையது மரபுக்கவிதை. அக்கட்டுப்பாடுகளை உடைத்தது புதுக்கவிதை.

     புதுக்கவிதை
     என்பது
     சொற்கள் கொண்டாடும்
     சுதந்திரதின விழா

எனவும்,

     புதுக்கவிதை எனும் போர்வாள்
     இலக்கண உறையிலிருந்து
     கவனமாகவே
     கழற்றப்பட்டிருக்கிறது

எனவும் குறிப்பிடுவார் வைரமுத்து.

எனவே, மரபு இலக்கணம் இல்லாமைதான் புதுக்கவிதைக்கான
இலக்கணம் ஆகிறது. புதுக்கவிதை தோன்றியதற்கான நோக்கம்
என்னவோ இதுதான்.ஆனால் புதுக்கவிதைக்கு என்று சொற்செட்டு,
உருவ அமைப்பு என்ற ஒன்று வேண்டுமல்லவா? புதுக்கவிதையின்
உருவம் எவ்வாறு இருக்கிறது என, இதுவரையில் வந்துள்ள
கவிதைகளைக் கொண்டு அடையாளம் கண்டுணர வேண்டியுள்ளது.

     புதுக்கவிதையின் உருவம் குறித்து, அடிவரையறை,அடியமைப்பு,
சொற்சுருக்கம், ஒலிநயம், சொல்லாட்சி, தொடை நயம், யாப்புச்
சாயல், நாட்டுப்புறச் சாயல், வசன நடை, உரையாடல் பாங்கு
ஆகிய வகைகளில் காணலாம்.

4.1.1 அடிவரையறை (வரி எண்ணிக்கை)

     எத்தனை அடிகளில் புதுக்கவிதை எழுதப்பட வேண்டும்
என்றெல்லாம் வரையறை இல்லை. இரண்டடி முதல் எத்தனை
அடிகளில் வேண்டுமானாலும் எழுதப் பெறலாம்.

     இரவிலே வாங்கினோம்
     இன்னும் விடியவே இல்லை     (அரங்கநாதன்)

என்பது சுதந்திரம் குறித்த இரண்டடிக் கவிதை.

     பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
     முத்தமிட்டுச் சொன்னது பூமி
     ஒன்பதுமுறை எழுந்தவனல்லவா நீ     (தமிழன்பன்)

என்பது மூன்றடியுடையது.

     சுதந்திரம் குறித்து அமைந்த,

     பழத்தினை
     நறுக்க வாங்கிக்
     கழுத்தினை
     அறுத்துக் கொண்டோம்     (எழிலவன்)

என்னும் கவிதை நான்கடியுடையது.

     அமுத சுரபியைத்தான்
     நீ தந்து சென்றாய்
     இப்போது
     எங்கள் கைகளில் இருப்பதோ
     பிச்சைப் பாத்திரம்     (மேத்தா)

என்பது காந்தியடிகளிடம், இந்தியாவின் பொருளாதார நிலையைக்
குறித்துரைக்கும் ஐந்தடிக் கவிதை.

     வாயிலே
     அழுக்கென்று
     நீரெடுத்துக் கொப்பளித்தேன்
     கொப்பளித்துக்
     கொப்பளித்து
     வாயும் ஓயாமல்
     அழுக்கும் போகாமல்
     உற்றுப் பார்த்தேன்
     நீரே அழுக்கு
!     (சுப்பிரமணிய ராஜு)

என்பது ஒன்பதடிகளில் அமைந்துள்ளது.

எனவே, கூற விரும்பும் கருத்து முற்றுப்பெறுவதற்குத்
தேவையான அடிகளில் அமையக் கூடியது புதுக்கவிதை என்பது
புலனாகின்றது.     அதேவேளையில்     சொற்சுருக்கமும்
இன்றியமையாதது.

4.1.2 அடியமைப்பு (வரியமைப்பு)

ஒவ்வோரடியிலும் குறிப்பிட்ட சீர்கள் இருக்கவேண்டுமென்று
மரபுக்கவிதையில் வரையறை உண்டு. ஆனால் புதுக்கவிதையில்
அந்நிலை இல்லை. ஓரடியில் ஒரு சீரும் வரலாம்; இரு சீரும்
வரலாம். இங்குச் சீர் என்று கூறாமல் சொல் என்றே சுட்டலாம்.
ஓரடியில் ஒரு சீர் மட்டுமன்றி, ஓரசையோ ஓரெழுத்தோகூட
அமையலாம். பொருள்     புலப்பாட்டிற்கான அழுத்தத்தைப்
புலப்படுத்த வகையுளி (சொற்பிளப்பு) அமைகின்றது. ‘புதிய /
மாணவர் விடுதி’, ‘புதிய மாணவர் / விடுதி’ என இணைத்தும்
பிரித்தும் ஒலிப்பதில் பொருள் வேறுபாடு அமைவதை நன்கு
உணரலாம். அடுத்தடுத்த அடிகளுக்குரியவை என்பதை/
குறியிட்டு உணர்த்துவர்.

1. ஒரு சொல் அடிகள்

ஒவ்வோர் அடியிலும் ஒவ்வொரு சொல்லே இடம்பெறும்
கவிதைகளும் உண்டு.

எடுத்துக்காட்டு:

எங்கள்
வீட்டுக்
கட்டில்
குட்டி
போட்டது
;
தொட்டில்’     (எஸ்.வைத்தியலிங்கம்)

2. ஓரெழுத்து அடிகள்

     ஓரடியில் ஓர் எழுத்தே அமைவது. அவ்வாறு அமைவது
சுட்டும் பொருளுடன் தொடர்புடைய தோற்றத்தை உணர்த்துதல்
வேண்டும்.

எடுத்துக்காட்டு:

எ     எ     தூ
ன     த்     ங்
க்     த     கா
கு    னை  த
த்
ந     இ
தெ   ட்     ர
ரி     ச     வு
யு     த்     க
ம்     தி     ள்

         ர
         ங்
         க
         ள்
         எ
         ன்
         று

என்னும் அமுதபாரதியின் கவிதை நட்சத்திரச் சிதறல்களை
எழுத்துச் சிதறல் (சொற் சிதறல்) மூலம் உணர்த்துவதோடு,
நெடுக்குவெட்டுத் தோற்றத்தில் அமைந்த அடிகளின் நீட்சி இரவின்
நீளத்தைப் புலப்படுத்துவதாகவும் அமைகின்றது.

3. புள்ளியிட்ட அடிகள்

பொருள்     அழுத்தம்     கருதிச் சில சொற்களையோ
எழுத்துகளையோ அடுத்துப் புள்ளியிட்டு எழுதுதல் உண்டு.


எடுத்துக்காட்டு: 1

    

     நாங்கள் குருடர்கள்
     பகல் . . . . . . . .
     எப்படி இருக்கும்

என்னும் கவிதையில் பார்வையற்றோரின் ஆர்வமும் ஏக்கமும்
புள்ளியிட்டமைத்த வகையில் ஏற்படும் தொனியால் (உச்சரிப்பு
மாற்றம்) உணர்த்தப்படுகின்றன.

எடுத்துக்காட்டு : 2

     மௌனத்தை மொழிபெயர்த்து
     நாலே எழுத்துள்ள
     ஒரு மகாகாவியம் தீட்டினேன்
     ம. . . ர. . .ண . . . ம்,
     எனது வாசகர்கள்
     வாசித்து - அல்ல
     சுவாசித்தே முடித்தவர்கள்     (சிற்பி)

என்ற கவிதையில் அச்சுறுத்தலையும் அவலத்தையும் உணர்த்தும்
வகையில் மரணம் என்னும் சொல் உச்சரிப்பு வேறுபாட்டை
உணர்த்தப் பிரித்துச் சுட்டப்பட்டது.

மரபுக்கவிதையில் சீர்களால் அமைவனவே அடிகள் எனப்படும்.
புதுக்கவிதையில் சொல்லால் அமைவன வரிகள் எனலே
பொருந்தும் எனக் கூறுவதும் உண்டு.

4.1.3 சொற்சுருக்கம்

    சொற்சுருக்கம் உடைமை கருதி, புதுக்கவிதையைத் தளை
தட்டிய திருக்குறள்
என்பார் வைரமுத்து.

     ஒருவரி நீ
     ஒருவரி நான்
     திருக்குறள் நாம்     (அறிவுமதி)

என்பது தலைவன் தலைவியர் உருவத்தால் பிரிந்தும் உள்ளத்தால்
ஒன்றியும் இருப்பதை உணர்த்துகிறது.

     அண்ணலே!
     இன்றுஉன் ராட்டையில்
     சிலந்திதான் நூல் நூற்கிறது

என்னும் கவிதை இராட்டை பயனற்று, மேனாட்டு ஆடைகளே
நடைமுறையிலிருப்பதை உணர்த்துகின்றது.

     வரங்களே
     சாபங்களானால்
     இங்கே
     தவங்கள் எதற்காக?     (அப்துல் ரகுமான்)

என்பது திட்டங்கள் நாட்டில் நிறைவேற்றப்படாமை குறித்து
அமைந்ததாகும்.

4.1.4 ஒலிநயம்

மரபுக்கவிதையில் இலக்கியச் சொற்களிடையே ஒலிநயம் பயின்று
வரும். புதுக்கவிதையில் பேச்சுவழக்குச் சொற்களிடையே ஒலிநயம்
இடம்பெறும்.

     ராப்பகலாப் பாட்டெழுதி
     ராசகவி ஆனவனே!
     தமிழென்னும் கடலுக்குள்
     தரைவரைக்கும் போனவனே!
     அம்பிகா பதியிழந்து
     அமரா வதியுனது
     காதுக்குள் அழுதாளே
     கவியேதும் பாடலியே!
     கதைகதையாப் பாடினையே
     மனுஷக் காதலைநீ
     மரியாதை செய்யலியே!
     (வைரமுத்து)

என்று கம்பரிடம் வினவப்படும் கவிதையில் ஒலிநயம்
இடம்பெற்றுள்ளது.

4.1.5 சொல்லாட்சி

     சிறந்த சொல்லாட்சிகளுக்குப் புதுக்கவிதையில் இன்றியமையா
இடம் உண்டு.

     வில்லே
     வில்லை வளைக்குமா?
     வளைத்தது
     சீதையின் புருவவில்
     இராமனின்
     இதய வில்லை வளைத்தது
     தன்பக்கம்
     அழைத்தது (மேத்தா)

என்பதில் வில் என்னும் சொல் சிறப்புறப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

     வடமொழி, ஆங்கிலம், பேச்சுவழக்குச் சார்ந்த சொற்களுக்கும்
புதுக்கவிதையில் இடம் உண்டு.

எடுத்துக்காட்டு: 1 வடசொல்

     நாங்கள் அடிமைகள்
     அதனால்தான்
     எங்கள் சாம்ராஜ்யத்தில்
     சூரியன் உதிப்பதுமில்லை
     அஸ்தமிப்பது மில்லை

எடுத்துக்காட்டு : 2 ஆங்கிலம்

வேகமாய்
மிக ஆர்வமாய்
பஸ்ஸைப்
புணர்ந்த
மண்ணின் பிரசவம்

என்பது சாலைப் புழுதி பற்றியது.

எடுத்துக்காட்டு : 3 பேச்சு வழக்கு

     அம்மா
     மழைத்தண்ணியை
     வாளியில பிடிச்சா
     இடியைப் பிடிப்பது எதுலே?
     ட்ரம்மிலேயா?

இவ்வாறு சொல்லாட்சிகள் இடம்பெறுகின்றன.

4.1.6 தொடை நயம்

    எதுகை, மோனை, இயைபு என்னும் தொடை நயங்களெல்லாம்
புதுக்கவிதையில் வரவேண்டும் என்றும் விதியில்லை; வரக்கூடாது
என்றும் விதியில்லை. எனவே இவை தற்செயலாக அமைவன
எனலாம்.

1. எதுகை

     பாரதி வேண்டியது
     ஜாதிகள் இல்லாத
     தேதிகள் . . .
     நமக்கோ
     ஜாதிகளே இங்கு
     நீதிகள்         (மேத்தா)

2. மோனை

     கம்பனின் இல்லறம்
     களவில் பிறந்து
     கற்பிலே மலர்ந்து
     காட்டிலே முளைத்துப்
     பிரிவிலும் தழைத்து
     நெருப்பிலும் குளித்து
     நிமிர்ந்த இல்லறம்     (மேத்தா)

3. இயைபு

     வயல்வெளிகள்
     காய்கிறது
!
     வெள்ளம் . . .
     மதுக்கடைகளில்
     பாய்கிறது
!
         (மேத்தா)

இவ்வகையில் தொடை நயங்கள் காணப்பெறுகின்றன.

4.1.7 யாப்புச் சாயலும் நாட்டுப்புறச் சாயலும்

அடிவரையறை செய்து எழுதினால் மரபுக்கவிதையே என
எண்ணத்தக்க யாப்பமைதி மிக்க பாடல்கள், புதுக்கவிதை வடிவில்
எழுதப்     பெறுவதுண்டு. திருக்குறளைக் கூட நான்கைந்து
வரிகளாக்கிப் புதுக்கவிதை எனலாம்.

     காத டைத்துக்
     கண்ணி ருண்டு
     கால்த ளர்ந்த போதும்
     ஆத ரித்துக்
     கைகொ டுக்க
     ஆட்க ளிலாப் பாதை
!
     திரும்பிவராப் பாதை - இதில்
     உயிர்கள்படும் வாதை
!
         (புவியரசு)

என்பது காலம் என்னும் கருத்துச் சார்ந்த கவிதை.

  • நாட்டுப்புறச் சாயல்
  •      அகராதி தேடாத சொல்லாட்சி அமைவதே புதுக்கவிதையின்
    நோக்கமாகும். பொதுமக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்பதே
    குறிக்கோளாக அமைதலின்,     நாட்டுப்புறச்     சாயலிலும்
    புதுக்கவிதைகள் பல உருவாகியுள்ளன.

    எடுத்துக்காட்டு:

         பூக்களிலே நானுமொரு
         பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்
         பூவாகப் பிறந்தாலும்
         பொன்விரல்கள் தீண்டலையே - நான்
         பூமாலை யாகலையே         (மேத்தா)

    என்பது முதிர்கன்னி குறித்த கவிதையாகும்.

    4.1.8 வசன நடையும் உரையாடல் பாங்கும்

        உரைநடையையே ஒடித்துப் போட்டால் புதுக்கவிதையாகி
    விடும் என்பர். ஆனால் அதில் கவிதை வீச்சு இருத்தல் வேண்டும்.

    எடுத்துக்காட்டு:

         கவலை யில்லாமல்
         தேதித் தாளைக் கிழிக்கிறாய்
         பதிலுக்குன் வாழ்நாளை
         ஒவ்வொன்றாய்க்
         கழிக்கின்றேன்         (மேத்தா)

    என்பது நாள்காட்டி பேசுவதாய் அமைந்த கவிதை.

  • உரையாடல் பாங்கு
  •      உரையாடல் பாங்குடைய கவிதைகள் படிப்போரை எளிதில்
    சென்றடையும் ஆற்றல் உடையவை. ‘விலைமாதர்கள் வள்ளுவரிடம்
    கேட்ட வினாக்களாக’ப் படைக்கப்பட்ட கவிதை பின்வருமாறு:

         எங்களுக்கும்
         ஓர் அதிகாரம் ஒதுக்கியதற்கு
         நன்றி ஐயா
    !
         பிணம்கொத்திச்
         சுகம்பெறும் ஆண்களைக்
         காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் . . .
         எங்களைக் காப்பாற்ற
         எங்களை மீட்க ஏதும் சொன்னீர்களா?
         ஐயா
         நீங்கள் சொன்னதுபோல்
         எல்லாம் விற்கிறோம் - எனினும்
         இதயத்தை விற்பதில்லை         (தமிழன்பன்)

    என நீள்கிறது கவிதை.

         இவ்வாறு புதுக்கவிதையின் உருவம் பல்வேறு வகைகளில்
    இடம்பெறக் காண்கிறோம். இனிப் புதுக்கவிதையின் உள்ளடக்கம்
    குறித்துக் காண்போம்.

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:29:49(இந்திய நேரம்)