தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

கவிதை வடிவம்

5.2 கவிதை வடிவம்
     ஒரு கவிதையைப் பார்த்த அளவில் மரபுக்கவிதையா,
புதுக்கவிதையா எனக் கண்டுணரும் அளவிற்கு வடிவப்
பாகுபாடுகள் இவற்றிற்கிடையே உள்ளன. படிக்கும் வகையிலும்
இவற்றை வேறுபடுத்தி உணரலாம். வரிவடிவம், ஒலிவடிவம்
என்னும் இருவகைகளிலும் இவ்வாறு இவை வேறுபடுவதனை அடி,
அடி எண்ணிக்கை, யாப்பு, தொடைநயம், சொற்கள், தனித்தன்மை,
நெடுங்கதை என்னும் உள்தலைப்புகள் கொண்டு இங்குக்
காண்போம்.

5.2.1 அடி


     கவிதைக்கு வடிவம் தர யாப்புப் பயன்படுகிறது. யாப்பு அடிகளைக் கொண்டு அமைகிறது. அடிகள் அமைந்துள்ள நிலையைக் காண்போம்.

  • மரபுக்கவிதை
  •      குறில், நெடில், ஒற்று என்பவற்றின் அடிப்படையில் நேரசை,
    நிரையசைகளும், அவ்வசைகளின் அடிப்படையில் ஓரசைச் சீர்,
    ஈரசைச் சீர், மூவசைச் சீர், நாலசைச் சீர் என்பனவும் இவற்றின்
    அடிப்படையில் அடிகளும் அமைகின்றன.

         இரண்டு சீர்களையுடையது குறளடி; 3 சீர்கள் கொண்டது சிந்தடி; 4 சீர்கள் உடையது நேரடி அல்லது அளவடி ; 5 சீர்கள் அமைந்தது நெடிலடி; 6 சீர் முதலானவற்றை உடையது கழிநெடிலடி எனப்படுகின்றது. 6 முதல் 8 சீர்
    உடையன சிறப்புடையன; 9 மற்றும் 10 சீர் உடையன நடுத்தரச் சிறப்புடையன; 10க்கு மேற்பட்ட சீர் உடையன அவ்வளவாகச் சிறப்பற்றன.

         ஓர் அசையோ, ஒரு சீரோ ஓரடியில் தனித்து இடம் பெறுவதில்லை.
    கூன் என்னும் தனிச்சொல் கலிப்பா, வஞ்சிப்பாக்களில்     உறுப்பாக
    இடம்பெறுவதாகும். இது சிறுபான்மையினது.

    (1) குறளடி
    - ‘அறம்செய விரும்பு’
    (2) சிந்தடி
    - ‘நிற்க அதற்குத் தக’
    (3) அளவடி
    - ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’
    (4) நெடிலடி
    - ‘நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்    
    நினைப்பதுன்னை’
    5) கழிநெடிலடி
    - ‘நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ
    இதற்கு நாயகமே!’

         விருத்தம் போன்றவற்றில் ஒரு பாடலில் இடம்பெறும் அடிகள், எதுகையைக் கொண்டு அடையாளம் காணப்படுவது வழக்கம். இவ்வெதுகை அடியெதுகையாகும்.

  • புதுக்கவிதை
  •      அடி என்பது புதுக்கவிதையில் வரி எனப்படும். சீர்கள், சொற்கள் என்றே குறிக்கப்பெறும். ஒரு வரியில் பெரும்பாலும் நான்குக்கு மேற்பட்ட சொற்கள் இடம்பெறுவதில்லை. மற்றபடி, எதுகை, அசை, சீர், தளை ஆகியன தொடர்பான வரையறைகள்
    ஏதுமில்லை.

        உன்
       விழிகளின் வாசிப்பில்
       என்
       பேனா எழுத
       அவதிப்படுகின்றது     (ஈரநிழல்)

         என்னும் கவிதையில் பல்வேறு நிலைகளையும் காண்கிறோம்.

         புதுக்கவிதையைப் பொறுத்தவரை, வரிகளில் அமையும்
    சொல்லமைப்பைப் பொருள்தான் தீர்மானிக்கின்றது.

        அவள்
        மாமியார் வீட்டுக்குப்
        போனாள்

        அவள் மாமியார்
        வீட்டுக்குப் போனாள்

         இவை இரண்டிலும் ஒரே விதமான சொற்கள் இடம்
    பெற்றிருப்பினும், அவை அடுத்தடுத்த வரிகளில் அமையும் நிலை
    கொண்டு வெவ்வேறு பொருள் தரக் காணலாம்.

    5.2.2 அடி எண்ணிக்கை

     
        அடி இரண்டு முதல் பல சீர்களைக் கொண்டது. அடிகளின் எண்ணிக்கைக்கு அளவு உண்டா? பார்க்கலாம்.

  • மரபுக் கவிதை
  •      இரண்டடிகளையுடைய திருக்குறள் முதலாக, 782 அடிகளையுடைய மதுரைக்காஞ்சி வரையிலுமாக மரபுக்கவிதை பல்வேறு அடிவரையறைகளைப் பெற்றுவரக் காண்கிறோம்.

         வெண்பா ஈரடிச் சிறுமையும், ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும் மூவடிச் சிறுமையும், கலிப்பா நாலடிச் சிறுமையும் கொண்டு அமையும் என யாப்பருங்கலக் காரிகை கூறுகின்றது. பொதுவாக இப்பாக்களுக்கான அடிகளின் உச்சவரம்பு உரைப்போர் உள்ளக்கருத்தின் அளவினதாக அமைகின்றது.

         விருத்தம், தாழிசை, துறை போன்ற பாவினங்கள் பொதுவாக ஓரெதுகையுடைய நான்கடிகளைப் பெற்று வருதல் இயல்பு.

         அவிநயம் என்னும் நூல், ஆசிரியப்பாவின் அடிச்சிறுமை ஒன்று என்று கூறுகின்றது. இலக்கணங்களில் காணும் நூற்பா யாப்பை அதற்குச் சான்றாகக் காட்டுகின்றது.

  • புதுக்கவிதை
  •      புதுக்கவிதையானது குறைந்தது இரண்டு வரிகளையாவது கொண்டிருக்கின்றது.     உச்சவரம்புக்கு வரி எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை.

         தொடக்க காலத்தில் பத்து வரிகளுக்கு மேற்பட்ட அளவில் கவிதைகள்     இருந்தன.     இக்காலத்தில்     பெரும்பாலும் பத்துவரிகளுக்குள்ளாகவே புதுக்கவிதை அமைவதைக் காண்கிறோம்.

    5.2.3 ஒலிநயம்

         யாப்பு அமைப்பு ஒழுங்காக அமைவதிலேயே ஒரு வகையான ஓசை அமைப்பு உருவாகிச் செவிக்கு இன்பமூட்டுவதை உணரலாம். அது எவ்வாறு அமைகிறது என்பதைக் காண்போம்.

  • மரபுக் கவிதை
  •      மரபுக்கவிதை இலக்கணத்திற்குக் கட்டுப்பட்டது. சொற்களை ஓசை ஒழுங்கில் வைத்துக் கட்டுவதையே யாப்பு என்கிறோம். எனவே யாப்பில் தாளம், ஒலி நயம், ஓசை நயம் என்று குறிப்பிடப்படும் இசைத் தன்மை மிக எளிதில் கிட்டி விடுகின்றது. சொற்களின் வல்லோசை, மெல்லோசைகளைக் கவிஞன் அடுக்குவதன் மூலம் சந்தமும் ஒலிநயமும் கைவருகின்றன.

         ‘இலக்கணக் கட்டுக்கோப்பு சொற்களின் அர்த்தத்தை
    ஆழப்படுத்துகிறது; சொற்களின் ஒலிநயத்தைச் சிறப்பாக
    வெளிக்கொணர்கிறது’ என்கிறார் தொ.மு.சி.ரகுநாதன். அதே
    வேளையில் ‘ஒலிநயத்துக்கு மிகையான அழுத்தம் கொடுத்துத் தம்
    படைப்பின் தரத்தைக் குறைத்துக் கொள்ளவும் கூடாது’ என்கிறார்
    கைலாசபதி.

         ஒவ்வொரு பாவகைக்கும் குறிப்பிட்ட ஓசை நயம் இருக்கிறது.

    (1) வெண்பா - செப்பலோசை
    (2) ஆசிரியப்பா - அகவலோசை
    (3) கலிப்பா - துள்ளலோசை
    (4) வஞ்சிப்பா - தூங்கலோசை

         இவ்வொவ்வொன்றும் ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசை என
    மும்மூன்று வகைகள் உடையன. தளைகளைக் கொண்டு நால்வகை
    ஓசைகளும், தளைகளின் வருகைமுறை கொண்டு ஏந்திசை முதலிய
    உட்பிரிவுகளும் உணர்த்தப்படுகின்றன.

         தாழிசை, துறை, விருத்தம் என்னும் பா வகைகளில் சீர்களின்
    வருகை முறையால் வாய்பாடுகள் அமைக்கப்பட்டு, அவற்றின்
    பல்வேறு வகைப்பாடுகளால் பற்பல ஒலிநயங்களில் பாடல்கள்
    அமைகின்றன.

         கவிஞன் தன் பொருளுக்கு ஒத்திசைகின்ற பா மற்றும் பா
    வகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் விரும்புகின்ற ஒலிநயத்தைப்
    பெறமுடியும். பயிற்சியின் மூலம் ஓரளவு எளிதிலேயே இது கைவந்து
    விடுகின்றது.

        ஆசில்பர தாரமவை அஞ்சிறைய டைப்பேம்
        மாசில்புகழ்க் காதலுறு வேம்வளமை கூறப்
        பேசுவது மானமிடை பேணுவது காமம்
        கூசுவது மானுடரை நன்றுநம கொற்றம் (கம்ப ராமாயணம்)

         என்பதில் கும்பகருணன், இராவணனிடம் அறவுரை கூறுமுகமாக அமையும் கருத்துகளை, ஒலிநயம் மெருகூட்டக் காணலாம்.

         ஒலிநயமே, பாடலுள் இடம்பெறும் நகை முதலான எண்வகை
    மெய்ப்பாடுகளை வெளிப்படுத்துவதில் பேரிடம் பெறுகின்றது.

  • புதுக்கவிதை
  •      ‘மென்மையான ஒலிநயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது புதுக்கவிதை முயற்சி’ என்கிறார் சி.சு.செல்லப்பா. இந்த
    மென்மையைச் ‘சவுக்கைத் தோப்பின்வழியே காற்று பாய்ந்து சென்ற
    பிறகு தோன்றும் ஓயும்ஒலி’ என்கிறார்             ந.பிச்சமூர்த்தி. ‘கடல்
    அலையிலும் கால்நடையிலும் ஒருவகை ஒலிநயம் உள்ளதே,
    அதேபோல் புதுக்கவிதையிலும் ஒருவகை ஒலிநயம் இசைந்து
    வரும்’ என்பார் மீரா.

         செய்யுளில் கிடைப்பதுபோல் எதிர்பார்க்கும் நிறுத்தங்களில்
    தோன்றாமல், இயல்பாகவே தோன்றி நிறுத்தங்களை நிர்ணயிக்கும்
    உள்ளடங்கிய ஒலிநயம், புதுக்கவிதையில் இடம்பெறுகின்றது.

         எந்தெந்த இடங்களில் தாளலயம் வருகிறது என்பது வாசகனுக்கு முன்கூட்டியே மரபுக்கவிதையில் தெரிந்து விடுகின்றது. அதனால்
    செய்யுளின் ஓசை எந்திர கதி போன்ற செயற்கைத் தன்மையை
    அடைந்து விடுகிறது. இது கடிகார ஓசை போன்றது. புதுக்கவிதையில்,
    காற்றைப்     போல், தென்றலைப்போல் இயல்பானதாக இருக்க வேண்டும்.
    கவிதையின் அர்த்தத்திற்கு இசைவானதாக இருக்க வேண்டும் எனப்
    புதுக்கவிதைத் திறனாய்வாளர்கள் சுட்டுகின்றனர்.

        அணில் கடித்த பழமா?
        ஆங், எனக்கும்
        கொஞ்சம்
        தாலியறுத்த விதவையா?
        அய்யோ. . .
        எச்சில் !

         என்னும் கவிதையில் அமையும் ஒலிநயம், பாடுபொருளுக்கு மேலும் வலுச்சேர்க்கக் காண்கிறோம்.

    5.2.4 தொடைநயம்


         அடிகளை எவ்வாறு இணைப்பது (தொடுப்பது) என்பதையே
    தொடை என்கிறோம். அத்தொடை காலத்துக்கேற்றவாறு மாறி
    வருகிறது.

  • மரபுக்கவிதை
  •      தொடுக்கப்படுவது தொடை. மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்பனவும், அந்தாதி, இரட்டை, செந்தொடை என்பனவும் மரபுக்கவிதையில் தொடைநயங்களாகச் சிறப்பிடம் பெறுகின்றன.

         அடுத்தடுத்த அடிகளில் எதுகையும், ஓரடியின் முதல் மற்றும்
    மூன்றாம் சீர்களில் மோனையும், சொல் அல்லது பொருளில்
    முரணும், அடிகளின் இறுதிச் சீர்களில் இயைபும் தேவைப்படுமிடத்து
    அளபெடையும் மரபுக்கவிதைகளில் இடம்பெறக் காண்கிறோம்.
    மனனத்திற்கேற்றவாறு முதல் பாடலின் இறுதி அடுத்த பாடலின்
    தொடக்கமாக அமைவது அந்தாதியாகும் (மனனம் = மனப்பாடம்
    செய்தல்). செந்தொடை என்பது, எதுகை போன்ற எத்தொடைகளும்
    அமையாமல், பொருளால் கவிதை சிறந்து நிற்பதென்பர்.

        கல்வியில் லாத பெண்கள்
        களர்நிலம் ; அந்நி லத்தில்
        புல்விளைந் திடலாம் ; நல்ல
        புதல்வர்கள் விளைத லில்லை ;
        கல்வியை உடைய பெண்கள்
        திருந்திய கழனி ; அங்கே
        நல்லறி வுடைய மக்கள்
        விளைவது நவில வோநான்? (பாரதிதாசன்)

         என வரும் பாடலில் எதுகை, மோனை, முரண் என்னும்
    தொடைநயங்கள் சிறக்கக் காண்கிறோம்.

  • புதுக்கவிதை
  •      எதுகையும் மோனையும் அமைந்தேயாக வேண்டும் என்னும்
    அவசியம் புதுக்கவிதையில் இல்லை. பொருளுக்கு இசைந்த
    ஒலிநயத்தையும் சொற்களையும் கவிஞர்கள், தாம் விரும்பிய
    வண்ணம் அமைக்கும் சுதந்திரம் வசனத்தில் அமைந்து கிடக்கிறது.
    கட்டுப்பாடு இல்லாமல் கட்டுக்கோப்பை உருவாக்கும் வாய்ப்பு
    வசனத்தில் எழுதும்போது கிடைக்கிறது. எனவே பொருளம்சத்தை
    ஓசைக்காகத் தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே,
    சொற்களின் கட்டமைப்பைப் புதுக்கவிதையில் எழுதும்போது
    கவிஞன் விரும்பிய வகையில் அமைத்துக்கொள்ள முடிகின்றது.

         எதுகை, மோனைகளெல்லாம் புதுக்கவிதையில் வரவே கூடாது
    என்றெல்லாம் விதி ஏதும் இல்லை. அவை வற்புறுத்தித்
    திணிக்கப்பட்டனவாக இல்லாமல், இயல்பாக இருத்தல் வேண்டும்.

        புலமையற்ற தருமிக்குப்
        பொற்கிழி
        தலைநிமிர்ந்த நக்கீரருக்குத்
        தண்டனை
        கடவுள்கள் கூட
        நியாயத்திற்குப்
        புறம்பாகவே

    என்னும் கவிதையில் எதுகை, மோனை, முரண் தொடைகள்
    அமைந்திருக்கக் காண்கிறோம்.

        எனக்கு
        முகம் இல்லை
        இதயம் இல்லை
        ஆத்மாவும் இல்லை
        அவர்களின் பார்வையில் (அ.சங்கர்)

    என்னும் கவிதையில் இயைபுத் தொடை அமையக் காணலாம்.

    5.2.5 சொற்கள்
         கவிதையில் இடம்பெறும் சொற்களை நான்கு வகைகளாகத்
    தொல்காப்பியர் பிரித்தார். இன்றுவரை அந்த வகையிலேயே
    சொற்கள் கவிதையில் அமைகின்றன.

  • மரபுக்கவிதை
  •      இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய நான்கும் செய்யுளில் இடம்பெறலாம் என்கிறது தொல்காப்பியம். இவை செய்யுள் ஈட்டச் சொற்கள் என்று குறிக்கப்பெறுகின்றன.

    (1) இயற்சொல் - பாமரர்க்கும் புரிவது
    (2) திரிசொல்     - படித்தவர்க்கே புரிவது
    (3) திசைச்சொல் - வட்டார வழக்குச் சொல், பிறமொழிச்
             சொற்கள்
    (4) வடசொல்     - சமஸ்கிருதச் சொற்கள்

    இவற்றின் விகிதம் வேண்டுமானால் வேறுபடலாம்.

        பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
        பேணி வளர்த்திடும் ஈசன்
        மண்ணுக்குள் ளேசில மூடர்-நல்ல
        மாதர் அறிவைக் கெடுத்தார். (பாரதியார்)

         என்பதில் பல வகைச் சொற்களும் இடம்பெறக் காணலாம்.
    (பெண்ணுக்கு - இயற்சொல், பேணி - திரிசொல், ஞானம் -
    வடசொல்)

  • புதுக்கவிதை
  •      புதுக்கவிதையில் இயற்சொல், வடசொல், திசைச்சொல், ஆங்கிலச்சொல், பேச்சு வழக்குச் சொல் (அவற்றுள் கொச்சைச்
    சொல்லும்கூட) ஆகியன இடம்பெறுகின்றன.

        விழிகள்
        நட்சத்திரங்களை வருடினாலும்
        விரல்கள் என்னவோ
        ஜன்னல் கம்பிகளோடு தான்

    என்பதில் திசைச்சொல்லும் (ஜன்னல்)

        எம்ப்ளாய்மெண்ட்
        எக்சேஞ்சுக்குப்
        புறப்பட்டுப் போன
        மகனிடம் கேட்டுக் கொண்டார்
        தந்தை
        என்னுடையதையும்
        ரெனிவல் செய்துகொண்டு
        வந்துவிடப்பா (அறிவுமதி)

    என்பதில் ஆங்கிலச் சொற்களும்,

        அழுவதும்கூட
        ஆரோக்கியமான
        விஷயம்தான்...
        சில நேரங்களில் (அறிவுமதி)

    என்பதில் வடசொல்லும்,

        வில்லை ஒடித்து மணக்க
        இராமன் வராவிட்டாலும்
        பரவாயில்லை
        தூக்கிச் செல்ல
        இராவணனாவது வரமாட்டானா (பி.எல்.ராஜேந்திரன்)

         என்னும் கவிதையில் வழக்குச் சொற்களும் இடம்பெறக்
    காண்கிறோம்.

    5.2.6 நாட்டுப்புறப் பாங்கு
         கவிஞனின் கருத்தும் அதனை வெளிப்படுத்தும் அழகும்
    இணைந்து கவிதையாகின்றன. எளிய மக்களும் இயல்பான
    போக்கிலேயே கருத்தையும்     கற்பனையையும்     அழகாக
    வெளிப்படுத்துகிறார்கள். அந்த மொழியையும் ஒலியையும்
    கவிஞர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதுவே கவிதையின்
    அடிநாதமாக அமைகிறது.

  • மரபுக்கவிதை
  •      மரபுக்கவிதையின் தொடக்கமே, நாட்டுப்புறப் பாடல்கள்தாம் என்றும் கூறலாம். ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருதல் முதலான தாழிசைக் கூறுகள். நாட்டுப்புறச் சாயலுடையனவேயாகும். சிலப்பதிகாரம், திருவாசகம், குறவஞ்சி, பள்ளு போன்றவை நாட்டுப்புறத் தாக்கங்களைக் கொண்டிருக்கின்றன.

        தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்
        பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ !
        பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
        விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோ !


         எனவரும் திருவாசகம் - (திருச்சாழல் பாடல்) நாட்டுப்புறப்பாங்கினது ஆகும்.

  • புதுக்கவிதை
  •      நாட்டுப்புறப் பாடல்களே ஏட்டிலக்கியங்களின் தாய் ஆதலின், புதுக்கவிதையிலும் அவற்றின் போக்குச் சிறப்புற இடம்பெறக் காணலாம்.

        காடெல்லாம் சுற்றிக்
        காராம்பசு கொண்டுவந்தோம்
        நாடெல்லாம் சுற்றி
        நல்லபசு கொண்டு வந்தோம்
        சீமைபல சுற்றிச்
        சிவப்புப்பசு கொண்டு வந்தோம்
        சிவப்புப்பசு உதைக்குமின்னு
        சிலபேர்கள் சொன்னதனால்
        பால்கறக்க எங்கவீட்டில்
        பக்கத்தில் போகவில்லை
        பக்கத்தில் போகாது
        பாலெல்லாம் வீணாச்சு

         என்னும் கவிதையில் பொதுவுடைமைத் தத்துவம் பயன்கொள்ளப் பெறாமை நாட்டுப்புறப் பாங்கில் சுட்டப் பெறுகின்றது.

        ஆராரோ ஆராரோ
        அப்பாநீ கண்ணுறங்கு
        தார்ரோட்டில் காரோட்டும்
        தமிழ்மணியே கண்ணுறங்கு !
        நாடே பரிசளிப்பு - உனக்கு
        நன்கொடையே மூலதனம்
        பாடுபடத் தேவையில்லை - என்
        பாண்டியனே கண்ணுறங்கு !

         என்னும் பாடல் அரசியல்வாதிக்கான தாலாட்டாகப்
    பாடப்பட்டிருப்பதை அறிகிறோம்.

         விடுகதை, பழமொழி போன்ற நாட்டுப்புறக் கூறுகள் அடிப்படையில் அமையும் கவிதைகளையும் காணமுடிகின்றது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1)

    எந்த நூற்றாண்டுவரை தமிழிலக்கிய வடிவம்
    செய்யுள் வடிவமாகவே இருந்தது?

    2)
    புதுக்கவிதையை ‘உரைவீச்சு’ என்றவர் யார்?
    3)
    சுத்தானந்த பாரதியார் படைப்பு ஒன்றைக் கூறுக.
    4)
    சிறப்புடைய கழிநெடிலடிகள் யாவை?
    5)
    திரிசொல்லாவது யாது?

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:30:51(இந்திய நேரம்)