தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

உள்ளடக்கம்

5.3 உள்ளடக்கம்
     ‘கலை கலைக்காகவே’ என இன்புறுத்தல் மட்டுமே அதன்
பயன் என்பவர்களும் உண்டு. ஆனால், இன்பம் என்பது
கவிதையின் ஒரு பயனாக     இருக்கலாமேயன்றி அதுவே
இலக்கியமாகாது; "கலை     வாழ்க்கைக்காகவே" என்னும் கருத்தேபெரும்பாலோர் முடிவாகும்.

     சமுதாய வாழ்வைச் சித்திரிப்பதும், சமுதாய மேன்மைக்கு
வழிகோலுவதும், வழிகாட்டுவதும் இலக்கியத்தின் இயல்புகள்
ஆகும்.

     இருவகைக் கவிதைகளும் பல்வேறு பாடுபொருள்களை
உடையனவாய் உள்ளன. அவற்றுள் மனிதநேயம், மொழிப்பற்று,
நாட்டுப்பற்று, பெண்ணியம், பொதுவுடைமை, அரசியல், வறுமை,
காதல், தன்னம்பிக்கை, இயற்கை ஆகிய பாடுபொருள்கள் குறித்து
இங்குத் தனித்தனியே காண்போம்.


5.3.1 மனிதநேயம்

மரபுக்கவிதை

     மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவுதலும், துயர்கண்டு வருந்தித் தீர்க்க முற்படுதலும் இடையூறு செய்யாதிருத்தலும் மனிதநேயம் ஆகும்.

    வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
    வாடினேன் ; பசியினால் இளைத்தே
    வீடுதோ றிரந்தும் பசியறா(து) அயர்ந்த
    வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் ;
    நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
    நேருறக் கண்டுளம் துடித்தேன் ;
    ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்(சு)
    இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்

     எனவரும் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா,
மனிதநேயத்தையும்     ஆன்மநேயத்தையும்     தெள்ளிதின்
உணர்த்துவதாக உள்ளது.

புதுக்கவிதை

     அண்டை மாநிலம், அண்டை நாடுகள் என அடுத்தடுத்து
இருப்பனகூட எல்லைக்கோடு, மண்ணுரிமை முதலான பல்வேறு
காரணங்களாலும், தீவிரவாதங்களாலும், நாளும் நவீன ஆயுதம்
கொண்டு போரிடும் இக்காலத்திற்கு மனிதநேயம் மிகமிகத்
தேவையாகும்.

    போர்களை நிறுத்து
    புன்னகையை உடுத்து
    பூமியை நேசி
    பூக்களை ரசி
    மனிதரை மதி
    மண்ணைத் துதி
    இன்றாவது

     என வரும் வைரமுத்துவின் கவிதை மனிதநேயத்தை
எடுத்துரைக்கின்றது. ‘சிக்கலும் சிடுக்கும்     புதுக்கவிதையின்
ஜீவாதாரம்’ என்னும் க.நா.சுப்பிரமணியத்தின் கருத்திற்கேற்றது இது.


5.3.2 மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும்


அ.மொழிபற்று

மரபுக்கவிதை

    பல்வேறு வாழ்வியல் தேவைகளுக்காகப் பிறமொழிகளைக் கற்க
வேண்டிய தேவை இருப்பது உண்மை. அதே நேரத்தில்
தாய்மொழியை நேசித்தலும், அதில் பயிற்சி பெறுதலும் மிகவும்
வேண்டிய பண்புகளாகும். தாய்மொழியை அலட்சியப்படுத்துதல்,
தாய்மொழியில் பேசுதல் குறைவென்று தாழ்வு மனப்பான்மை
கொள்ளுதல் போன்றன இருத்தல் கூடாது.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவது எங்கும் காணோம் ;
    பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
    இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
    நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
    வாழ்ந்திடுதல் நன்றோ சொல்வீர் !
    தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
    பரவும்வகை செய்தல் வேண்டும்

(பான்மை = இயல்பு ; நாமம் = பெயர் ; தேமதுரம் =
தேன்போல் இனிமை)

எனப் பாரதியார் பாடுவது உளங்கொளத்தக்கது.

புதுக்கவிதை

     அயல்மொழி மோகத்தில் இன்று நிலைதடுமாறும் தமிழர்நிலை
அதிகரித்துள்ளது. கவிஞர் காசி ஆனந்தனின்,

    தமிழே ! உயிரே ! வணக்கம் !
    தாய்பிள்ளை உறவம்மா
    உனக்கும் எனக்கும் !
    அமிழ்தே ! நீ இல்லை என்றால்
    அத்தனையும் வாழ்வில்
    கசக்கும் ! புளிக்கும் !

எனவரும் கவிதை, மொழிப்பற்றுக்குத் தக்கதொரு சான்றாகும்.

ஆ.நாட்டுப்பற்று

மரபுக்கவிதை

தாய்நாடு, தாய்க்குச் சமமானது.

    பெற்ற தாயும் பிறந்தபொன் னாடும்
    நற்றவ வானினும் நனிசிறந் தனவே

     என்பார் பாரதியார். நாட்டு விடுதலைக்காகத் தம் உடல்,
பொருள்,     ஆவி     ஆகியவற்றைத் தியாகம் செய்த
நாட்டுப்பற்றாளர்கள் பற்பலர்.

    எந்தையும் தாயும் மகிழ்ந்துகு லாவி
    இருந்ததும் இந்நாடே - அதன்
    முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
    முடிந்ததும் இந்நாடே - அவர்
    சிந்தையில் ஆயிரம் எண்ணம்வ ளர்ந்து
    சிறந்ததும் இந்நாடே - இதை
    வந்தனை கூறி மனதில்இ ருத்திஎன்
    வாயுற வாழ்த்தேனோ - இதை
    வந்தே மாதரம் வந்தே மாதரம்
    என்று வணங்கேனோ

(குலாவி = சேர்ந்து ; வந்தனை = வணக்கம்)

     என்னும் பாரதியாரின் பாடல் நாட்டு வணக்கமாகத் திகழ்ந்து
வீறுணர்வு அளிக்கின்றது.

புதுக்கவிதை

     நாட்டுக்கு வணக்கம் செலுத்துவது ஒரு வகை என்றால்,
நாட்டுமக்களின் பிரச்சனைகளை எண்ணிப் பார்ப்பது மற்றொரு
வகை எனலாம். இசை என்னும் தலைப்பில் மேத்தா எழுதியுள்ள
புதுக்கவிதை அவ்வகையானது. அது வருமாறு :

ஜனகணமன பாடலை
நான் நேசிக்கிறேன்
எப்போது இதை
இன்னும் அதிகமாய்
நேசிப்பேன் தெரியுமா?
எப்போது
இந்தியா
தன் பிரச்சினைத்
துயரங்களுக்கெல்லாம்
‘ஜனகணமன’ பாடுகிறதோ
அப்போதுதான் இதை
அதிகமாய் நேசிப்பேன்

     ‘ஜனகணமன’ பாடுதலாவது பிரச்சினைகளை முடித்து
வைத்தல் - முடிவில் பாடுதல்     என்னும்     பொருளில்
இங்குக் கையாளப்படுகின்றது. நாட்டு வளத்தைப் போலவே,
நாட்டுமக்களின் வாழ்வும் இன்றியமையாதது அல்லவா?


5.3.3 பெண்ணியம்

மரபுக்கவிதை

     ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் சமுதாயம் ; உலகம்.
ஆனால் ஆண், பெண்ணை அடிமைப்படுத்தி வந்துள்ள நிலைமை
காலங்காலமாக நம் சமுதாயத்தில் இருந்து வந்துள்ளது. பெண்கள்
அறிவில் குறைந்தவர்களாகவும், போகப் பொருள்களாகவும் கல்வி பெறத்தகுதியற்றவர்களாகவும் கருதப்பட்டு வந்துள்ளனர். இந்நிலை
பாரதியார்; காலந்தொட்டுத்தான் மாறியது. விழிப்புணர்வு வந்தது;
பெண்ணுரிமை பேசப்படலானது ; மகளிர் மதிக்கப்படலாயினர்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங் கேபெண்
இளைப்பில்லை காண்என்று கும்மியடி

     என்னும் பாரதியார் பாடலையே தக்கதொரு முன்னோடியாகக்
கொள்ளலாம்.

புதுக்கவிதை

     பெண்களும் தங்கள் பிரச்சனைகளை எடுத்துக்கூறப் பயன்படும் வடிவமாகப் புதுக்கவிதை உள்ளது. ஆண்கள், பெண்களுக்காகக் காலந்தோறும் குரல் கொடுத்து வரும் வரிசையில்,
இன்று பெண்களும் வந்து நிற்கத் தொடங்கியுள்ளனர்.

என் ஆதித்தாயின்
முதுகில்பட்ட திருக்கைச் சவுக்கடி
நான்காணும் ஒவ்வொரு
முகத்திலும்
தழும்பாய், தேமலாய்
படர்ந்து கிடக்கிறது

     எனவரும் பெண்கவிஞரின் கவிதை, ‘பெண்கள் எந்தப்
பதவியில் இருந்தாலும் இன்னும் ஆணாதிக்கத்திலிருந்து விடுபட்டு
முன்னேறியதாகத் தெரியவில்லை’ என்பதைப் புலப்படுத்துகின்றது.


5.3.4 பொதுவுடைமை

மரபுக்கவிதை

     பொருள் உள்ளவர்,     பொருளில்லாதவர் என்னும் பொருளாதார ஏற்றத்தாழ்வு மாறவேண்டும். உழைப்பவர்க்குத் தக்க
ஊதியம் வாய்த்தல் வேண்டும்.

நடவு செய்த தோழர் கூலி
நால ணாவை ஏற்பதும்
உடலு ழைப்பி லாத செல்வர்
உலகை யாண்டு லாவலும்
கடவு ளாணை என்று ரைத்த
கயவர் கூட்ட மீதிலே
கடவுள் என்ற கட்ட றுத்துத்
தொழிலு ளாரை ஏவுவோம்

     எனவரும் பாரதிதாசனாரின் பாடல், ‘எல்லார்க்கும் எல்லாமென்று இருப்பதான இடம்’ நோக்கி இவ்வையத்தைச் செலுத்தவல்லதாகும்.

புதுக்கவிதை

     நாட்டினைப் பரமபதச் சோபனப் படமாகவும், நாட்டில்
நிலவும் சிக்கல்களைப் பாம்பாகவும் உருவகித்துச் சமுதாய மாற்றத்திற்குத் தடையாகும் ஆற்றல்களை அழித்தால்தான் பரமபதத்தை உருவாக்க முடியும் என்கிறார் சிற்பி.

நடுங்கி நடுங்கித்
தாயக் கட்டைகள்
உருட்டிக் காத்திருந்தால்
பரமபதத்தை ஒருநாளும்நீர்
அடைந்திட மாட்டீர்
அதனால்
நாகங்கள் அழிக்கும்
யாகங்கள் தொடங்கினோம்
கொடிய சர்ப்பயாகம்

என்பது அக்கவிதையாகும்.


5.3.5 அரசியல்


மரபுக்கவிதை

     அன்பும், அருளும், அறிவும், நிர்வாகத் திறமையும்
உடையவர்களால் அரசு செலுத்தப்படும் பொழுது நாடு சிறக்கின்றது.
மனுநீதிச் சோழனின் ஆட்சிச் சிறப்பைக் கூறும் சேக்கிழார்,

மாநிலம்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலை
தானதனுக்கு இடையூறு தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்தும்தீர்த்து அறம்காப்பான் அல்லனோ?

         (பெரிய புராணம்)

     என அவன்தன் கூற்றிலமைத்துக் கூறுவார். இது முடியாட்சி,
குடியாட்சி என்னும் இரண்டிற்கும் பொருந்தும்.

புதுக்கவிதை

அரசியல் குறித்து உடன்பாட்டில் மரபுக்கவிதை உரைக்க,
எதிர்மறைநிலையில் அறிவுறுத்துகின்றது புதுக்கவிதை.

அந்நியர் எங்களைச்
சுரண்டிய போது
ஆவேசப்பட்டோம்
இப்போது
சொந்த தேசத்தார்
சுரண்டுகிறபோது
சும்மாயிருக்கின்றோம்
காரணம்
சொந்தமல்லவோ சுரண்டுகிறது (காந்தியும் கவிஞனும்)

     என்கிறார் மேத்தா. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே
மக்களைச் சுரண்டுதல் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

5.3.6 வறுமை

மரபுக்கவிதை

     வறுமை என்பது உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றன்
தேவைக்கே தவிக்கும் நிலையைக் குறிப்பது எனப் பொதுவாகப்
பொருள் கொள்ளலாம். பாணன் ஒருவனின் மனைவி, குடும்ப
வறுமையால் உணவுக்கு வழியின்றிக் குப்பையில் தோன்றிய
வேளைக்கீரையைப் பறித்து வந்து வேகவைக்கின்றாள். அதனுடன்
சேர்ப்பதற்கான உப்பு வாங்கவும் பொருளில்லை. இதில் பங்குக்கு
உறவினர்க் கூட்டம் வேறு. ஊராரின் பரிகசிப்புக்குப் பயந்து கதவைச்
சாத்திக் கொண்டு உண்கின்றாள். நல்லியக்கோடனிடம் பரிசுபெறச்
செல்லும் பாணன் குடும்பநிலை இது என்கிறார் இடைக்கழி நாட்டு
நல்லூர் நத்தத்தனார்.

     வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
     குப்பை வேளை உப்பிலி வெந்ததை
     மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
     இரும்பே ரொக்கலொடு ஒருங்குடன் மிசையும்
    
அழிபசி வருத்தம்

     (கிணைமகள் = பாடினி ; வள்உகிர் = கூரிய நகம் ;
மடவோர் = அறிவிலிகள்; கடை = கதவு; ஒக்கல் = உறவினர் ;
மிசைதல் = உண்ணுதல்)

என்பன அவர்தம் சிறுபாணாற்றுப்படை அடிகள்.

புதுக்கவிதை

     அரசு, மக்களின் பசியைப் போக்க முயலாமல் சட்டம் பேசிக்
கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை அப்துல் ரகுமானின் கவிதை
உணர்த்துகின்றது.

சுதந்திர தினவிழாவில்
‘ஜனகணமன’
பாடிக் கொண்டிருந்தார்கள்
நான்
பசியால் சுருண்டு
படுத்துக் கொண்டிருந்தேன்
எழுந்து நிற்க
முடியவில்லை
தேசியகீதத்தை அவமதித்ததாகச்
சிறையில் அடைத்துவிட்டார்கள்

என்பது அக்கவிதை.

5.3.7 காதல்

மரபுக்கவிதை

     காதல் தொன்றுதொட்டு வரும் சிறந்ததோர்
இன்றியமையாத உணர்வாகும்.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே !

     என்னும் குறுந்தொகைப் பாடலில் நிலம், வானம்,
கடல் ஆகியவற்றினும் பெரிதாகக் காதல் சுட்டப் பெறுகின்றது.
நட்பு என்பது இங்குக் காதலைச் சுட்டிற்று. குறிஞ்சிப்பூ
கிடைத்தற்கு அரிதாகலின், இக்காதலுணர்வின் கிடைத்தற்கரிய
சிறப்புத் தோன்ற உவமையாக்கப்பட்டது.

புதுக்கவிதை

காதலின் மென்மை குறித்து அப்துல் ரகுமான்,

இரவில்
புல்லின் மீது
ரகசியமாக உருவாகும்
பனித்துளி போன்றது
காதல்
     என்கிறார். புதுக்கவிதையாளர்களுள் காதலைப் பற்றிப்
பாடாதார் யாரும் இல்லை என்று கூறுமளவுக்கு யாவரும் காதலைப்
பாடியுள்ளனர்.


5.3.8 தன்னம்பிக்கை
மரபுக்கவிதை

     வாழ்க்கையில் எந்நிலையிலும் சோர்ந்து போகக் கூடாது. தடைகள் பல வரினும் போராடி வென்று மேலேற வேண்டும். ‘இதுதான் நம் தலைவிதி’ என்று சோம்பேறித்தனத்தை வளர்த்துக் கொள்ளலாகாது.

    தேடிச் சோறுநிதம் தின்று - பல
    சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
    வாடித் துன்பமிக உழன்று - பிறர்
    வாடப் பல செயல்கள் செய்து - நரை
    கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
    கூற்றுக் கிரைஎனப்பின் மாயும் - பல
    வேடிக்கை மனிதரைப் போலே - நான்
    வீழ்வேன் என்றுநினைத் தாயோ?

எனச் சக்தியிடமே முறையிடுகின்றார் பாரதியார்.

புதுக்கவிதை

     தளராத உள்ளத்தோடு துணிந்து செல்ல வழிகாட்டும் புதுக்கவிதைகள் பல வந்துகொண்டிருக்கின்றன.

    நம்பிக்கையை
    நெஞ்சில் இருத்தி
    நடந்து பாருங்கள்
    வசந்தம்
    கைகோர்த்துக்
    கூட வரும்

என்பது க.வை. பழனிச்சாமி என்பவரின் கவிதை.

5.3.9 இயற்கை

மரபுக்கவிதை

     இயற்கையைக் கண்டு அதில் மனத்தைப் பறிகொடுக்காதவர்கள்
கவிஞர்களாகவே இருத்தல் இயலாது. மயிலைக் கண்டு மனம்
மகிழ்ந்த பாரதிதாசனார், மயிலை விளித்துப் பாடுகின்றார்.

அழகிய மயிலே ! அழகிய மயிலே !
கடிமலர் வண்டு நெடிது பாடத்
தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்
தாடு கின்றாய், அழகிய மயிலே !
ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்
மரகத உருக்கின் வண்ணத் தடாகம்
ஆனஉன் மெல்லுடல், ஆடல் உன்உயிர்
இவைகள் என்னை எடுத்துப் போயின

(புளகித்தல் = சிலிர்த்தல்)

     இவ்வாறு மயிலின் ஆடலில் மனம் பறிகொடுத்த பாடலாக இஃது அமைகின்றது.

புதுக்கவிதை

மரங்களைக் குறித்து அமைந்த மேத்தாவின் கவிதை வருமாறு :

    நாங்கள்
    காற்று மன்னவன்
    கால்நடை யாத்திரையைக்
    கண்டு முரசறையும்
    கட்டியங்காரர்கள் ;
    தரையில் நடக்கப்
    பிரியப்படாத போது
    காற்று எங்கள்
    தலைகளின் மீதே
    நடந்து செல்கிறது

     இவ்வாறாகப் பல்வேறு பாடுபொருள்கள் மரபுக் கவிதையிலும்
புதுக்கவிதையிலும் அமைகின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:30:54(இந்திய நேரம்)