தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

6.0 பாட முன்னுரை

    ஒருவருக்கொருவர் கருத்தைப் பரிமாறிக் கொள்வதற்கு ஏற்ற
ஊடகமாக விளங்குவது மொழி. மொழியின் பயன்பாடு பேச்சு
வழக்கில்தான் மிகுதி எனினும், அதன் தரம் எழுத்து வழக்கைக்
கொண்டே மதிப்பிடப் பெறுகின்றது. மொழியின் எழுத்து
வழக்காகிய இலக்கியம், சிறந்த நுண்கலை வடிவமாகும்.
சமுதாயத்தில் தோன்றிச் சமுதாயத்தைப் பிரதிபலித்துச்
சமுதாயத்தில் வாழும் இயல்புடையதாகிய இலக்கியம்,
சமுதாயத்தையே மாற்றக் கூடிய ஆற்றலையும் கொண்டதாகும்.

    ஒரு மொழியில் காணும் இலக்கியங்களின் உருவம்,
உள்ளடக்கம், உத்திமுறை ஆகியவை காலந்தோறும் சமுதாய
மாற்றத்திற்கேற்ப மாறுகின்றன. தமிழ்மொழியில் செய்யுள் வடிவம்
தொடக்க காலத்திலிருந்தே செங்கோலோச்சி வந்துள்ளது.
இருபதாம் நூற்றாண்டு முதல் உரைநடையின் செல்வாக்கைக்
காணமுடிகின்றது. காதல், வீரம், நீதி, பக்தி என்னும் பொதுப்
பொருண்மைகளிலிருந்தும் வேறுபட்டு, இருபதாம் நூற்றாண்டு
முதலாகப் பெண்கள், அடித்தட்டு மக்கள், அன்றாட வாழ்வியல்
சிக்கல்கள் சார்ந்த பொருண்மைகள்     இடம்பெறலாயின.
தன்மையணி, உவமையணி எனத் தொடங்கி, மடக்கணி,
சிலேடையணி எனச் சொல்லணிகளின் செல்வாக்கு மிகுந்து, இன்று
மேனாட்டு இலக்கியத் தாக்கத்தால் படிமம், குறியீடு போன்ற
உத்திமுறைகள் வரையிலாகத் தொடர்ந்து பல வெளிப்பாட்டு
முறைகளைக் காண முடிகின்றது.

    ‘காலந்தோறும் கவிதையின் நோக்கும் போக்கும்’ என்பதான
நிலையில் தமிழிலக்கியங்களைச் சங்க இலக்கியம், காப்பியங்கள்,
இடைக்கால இலக்கியங்கள், இக்கால இலக்கியங்கள் என நான்கு
வகைகளில் பாகுபடுத்தி, இப்பாடத்தில் விரிவாக அறிந்து
கொள்வோம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:31:35(இந்திய நேரம்)