Primary tabs
2.1 தொன்மை நாடகங்கள்
நாடகக்
கலைக்கும், கடவுள் வழிபாட்டுச் சடங்கிற்கும்
நெருக்கமான தொடர்பு உண்டு. சங்க காலம் சுட்டுகின்ற பல
கூத்து வடிவங்களும்
இறைவனோடு தொடர்பு
கொண்டவைகளாகவே உள்ளன. பழைய புராணங்களும்,
முதல் நாடகம் இந்திரசபையில் அரங்கேற்றப்பட்டதாகக்
கூறுகின்றன. இக்கலை வடிவம் தொல்காப்பியத்தில் கூத்து
என வழங்கப்பட்டது. துணங்கை, வெறி, துடி, குரவை
போன்றன செல்வாக்குமிக்க கூத்து வடிவங்களாகி நின்றன.
இவையாவும் கடவுள் வழிபாட்டின்போதும்,
திருவிழாக்களின்போதுமே நடிக்கப்பட்டன. கடவுள் சார்ந்த
நாடகக் கலை, காலத்திற்கேற்ப மன்னர்கள் ஆதரவில்
வளர்ந்தது. கி.பி.பத்தாம் நூற்றாண்டில்,
பிற்காலச்
சோழர்களின் ஆதரவில் இராசராசேசுவர நாடகம் போன்ற
நாடகங்கள் நடத்தப் பெற்றன. புராணக் கடவுளர்கள் பெற்ற
இடத்தை இங்கே மன்னர்கள் பெற்றனர். மன்னர்கள் கடவுள்
நிலைக்கு உயர்த்தப்பட்டு, அவர்கள் பெயரிலே நாடகங்கள்
நடைபெற்றன. அதேசமயம் வேறு பல நாடகங்களும்
இவ்வேளையில் தோற்றம்
பெற்றிருந்தன. பிரபோத
சந்திரோதயம் என்னும் நாடகமும், சல்கல்ப சூரியோதயம்
என்ற நாடகமும் கி.பி.12ஆம் நூற்றாண்டில் நடிக்கப் பெற்றதாக
ஏ.என்.பெருமாள் தமிழ்நாடகம் ஓர் ஆய்வு என்ற நூலில்
கூறுகிறார்.
கி.பி.பதினாறாம்
நூற்றாண்டு வரை உள்ள தொன்மை நாடகப்
போக்குகள் கடவுள்
சார்ந்தும், மன்னர்
சார்ந்துமே
அமைந்திருந்தன. புராணக்
கதைகளே பெரும்பாலும்
நாடகங்களாயின. அனைவரும் அறிந்த
அந்தக் கதைகளை
யாரும் எழுதி வைக்காமலே நடித்தனர்.
அதன் காரணமாகவே
இக்காலக்கட்டப் பகுதியில் நமக்கு
எழுதப்பட்ட நாடகங்கள்
கிடைக்கவில்லை.