தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தேம் படு மலர்

தேம் படு மலர்
17. செவ்வேள்


மாலைதோறும் பரங்குன்றைப் பரவி உறைபவர்

தேம் படு மலர், குழை, பூந் துகில், வடி மணி,
ஏந்து இலை சுமந்து; சாந்தம் விரைஇ,
விடை அரை அசைத்த, வேலன், கடிமரம்
பரவினர் உரையொடு பண்ணிய இசையினர்,
5
விரிமலர் மதுவின் மரம் நனை குன்றத்து
கோல் எரி, கொளை, நறை, புகை, கொடி, ஒருங்கு எழ
மாலை மாலை, அடி உறை, இயைநர்,
மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்?


மாறுமாறு எழும் பல்வேறு ஓசைகளை உடையது பரங்குன்றம்

ஒருதிறம், பாணர் யாழின் தீங் குரல் எழ,
10
ஒருதிறம், யாணர் வண்டின் இமிர் இசை எழ,
ஒருதிறம், கண் ஆர் குழலின் கரைபு எழ,
ஒருதிறம், பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத,
ஒருதிறம், மண் ஆர் முழவின் இசை எழ,
ஒருதிறம், அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப,
15
ஒருதிறம், பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க,
ஒருதிறம், வாடை உளர்வயின் பூங் கொடி நுடங்க,
ஒருதிறம், பாடினி முரலும் பாலை அம் குரலின்
நீடுகிளர் கிழமை நிறை குறை தோன்ற,
ஒருதிறம், ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற,
20
மாறுமாறு உற்றன போல் மாறு எதிர் கோடல்
மாறு அட்டான் குன்றம் உடைத்து.


பரங்குன்றிற்கும் கூடலுக்கும் இடைப்பட்ட நிலம்

பாடல் சான்று பல் புகழ் முற்றிய
கூடலொடு பரங்குன்றின் இடை,
கமழ் நறுஞ் சாந்தின் அவரவர் திளைப்ப,
25
நணிநணித்து ஆயினும், சேஎய்ச் சேய்த்து;
மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின்
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று.
வசை நீங்கிய வாய்மையால், வேள்வியால்,
திசை நாறிய குன்று அமர்ந்து, ஆண்டுஆண்டு
30
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை
வாய்வாய் மீ போய், உம்பர் இமைபு இறப்ப;
தேயா மண்டிலம் காணுமாறு இன்று.


பரங்குன்றின் அலங்காரம்

வளை முன் கை வணங்கு இறையார்,
அணை மென் தோள் அசைபு ஒத்தார்
35
தார் மார்பின் தகை இயலார்,
ஈர மாலை இயல் அணியார்,
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட,
சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா:
அனைய, பரங்குன்றின் அணி.


தெய்வ விழவும் விருந்தயர்வும்

40
கீழோர் வயல் பரக்கும், வார் வெள் அருவி பரந்து ஆனாது
அரோ;மேலோர் இயங்குதலால், வீழ் மணி நீலம் செறு
உழக்கும் அரோ;தெய்வ விழவும், திருந்து விருந்து அயர்வும்,
அவ் வெள் அருவி அணி பரங் குன்றிற்கும்,
தொய்யா விழுச் சீர் வளம் கெழு வையைக்கும்,
45
கொய் உளை மான் தேர்க் கொடித் தேரான் கூடற்கும்,
கை ஊழ் தடுமாற்றம் நன்று.


முருகனை எதிர் முகமாக்கி வாழ்த்துதல்

என ஆங்கு,
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புட் கொடி,
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர், இறைவ!
50
பணி ஒரீஇ, நின் புகழ் ஏத்தி,
அணி நெடுங் குன்றம் பாடுதும்; தொழுதும்;
அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும்
ஏம வைகல் பெறுக, யாம் எனவே.


கடவுள் வாழ்த்து
குன்றம்பூதனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:29:49(இந்திய நேரம்)