Primary tabs
இவ்வொழுக்கம் இல்லறத்தார்க்கு கூறியது. கொல்லாமை முதலிய ஐந்தையும் அணுவிரத மென்றும், இவ்வெண் வகையையும் மூலகுணம் என்றும் வழங்குவர். இங்குக் கூறிய, ‘பெருகிய கொலை‘ யாவது - பொறியால் பெருகிய (இரண்டு முதல் ஐம்பொறி வரையிலுமுள்ள) இயங்கும் உயிர்களை வதித்தல். ‘பெரிய கொலை‘, இயங்குயிர் கொல்லாமை‘ (அருங் - 66, 67) என்னுஞ் செய்யுட்களும், ‘பெரிய கொலை பொய் களவு பிறர்மனையி லொருவல், பொருள்வரைதல் மத்தமது புலைசுணலின் நீங்கல்... ... இவை மனையறத்தார் சீலம்‘ (மேரு 356) என்னுஞ் செய்யுளும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலன. ‘உறும் பெரிய துன்ப முயிர்க்கொலை‘ என்ற (சீவக 2868) கவியும் இதனை நோக்கியதாகும் என்று கூறுப. களவு -- காரியக்களவு, காரணக் களவு என இருவகை: அவை வருமாறு:-- பிறர் உடைமைகளை (பொருள்களை)த் திருட ஏவுதல். திருடிவந்த பொருள்களை உலோபத்தால் வாங்குதல், அரசன் ஆணையைமீறி நடத்தல், (பொருட் பற்றால்) தான் வாங்கும்போது நிறைய வாங்கித்தான் விற்பதைக் குறையக் கொடுத்தல், நெல்லில் பதர், நெய்யில் எண்ணெய் முதலிய பொருள்களைக் கலந்துவிற்றல் ஆகிய இவ்வைந்து விதச் செயலும் உடையார் கள்ளர் களேயென்றும், அவர்கள் காரியக்களவு செய்வோர் என்றும், பசியால் கன்னம் வைத்துத் திருடுவோர் காரணக்களவு செய்வோர் என்றும் ஆகமம் கூறும். மேருமந்தரம் 334 முதல் 340 வரை உள்ள செய்யுட்களைக் காண்க. பொருட் பற்றைப் பரிமிதபரிக்ரஹம் என்பர். ‘வீதராகன்‘ என்றாற் போல, ‘ஒருவின புலைசு தேன் கள்‘ என்றார். புலாலைப்போலவே, கள்ளும் தேனும் குற்றமுடையன: இவை, ஜீவவதையின்றி உண்டாதல் இன்மையின் என்க. ‘இக் காரிகை யாங்கண், கரும்பிற் றொடுத்த பெருந்தேன் சிதைந்து, சுரும்பு சூழ் பொய்கைத் தூநீர் கலக்கும், அடங்கா வேட்கையின் அறிவஞரெய்திக், குடங்கையினொண்டு கொள்ளவுங் கூடும்‘ (சிலப், நாடு 81,85.) என்றும், 'தேனை கொலைக் கொப்ப தென்றாய் நமஸ்தே‘