தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU-Library


நூலாசிரியர் வரலாறு
பின்னர்,  அக்காலத்தில்  பாண்டி மண்டலத்தின்கண் உள்ள சிறு நாடுகளில்
ஒன்றாகிய  மாறை  நாட்டில்  தஞ்சாக்கூர் என்னும் ஊரில் மாவலிவாண மரபைச்
சேர்ந்த  சந்திரவாணன்  என்னும்  வேளாளச்  செல்வன் அந்நாட்டை அரசாண்ட
கோமாறவர்மர்  திரிபுவனச்  சக்கரவர்த்தி  குலசேகர தேவருக்கு அமைச்சராகவும்
படைத் தலைவராகவும் புலவர்களைப் புரக்கும் வள்ளலாகவும் வாழ்ந்து வந்தனர்.

பொய்யாமொழிப்  புலவர் அச் செல்வரையடைந்து அவர் மீது நாற்கவிராச  நம்பி
அகப்பொருள்  இலக்கணத்திற்கு  இலக்கியமாகக் கோவையொன்று பாடினர்.  அக்
கோவைக்குப்  பாட்டுடைத்  தலைவன் மேற்கூறிய  சந்திரவாணனே.  சந்திரனுக்கு
மகனாகிய வாணன் என்று சொக்கப்ப நாவலர் உரையிற் காணக் கிடப்பதால், அவ்
வள்ளலின்    இயற்பெயர்     அறிவதற்கில்லை.     புலவர்    இக்கோவையை
அரங்கேற்றுங்கால்  ஒவ்வொரு  பாடலுக்கும்  மூன்று  கண்களிலும் மணிபதித்துச்
செய்யப்  பெற்ற  பொன்  தேங்காய்  ஒவ்வொன்று பரிசாக வழங்கிப் பல வரிசை முறைகளும்  செய்து  சிறப்பித்தார்  என்பர்.  இன்னும் பொய்யா மொழிப் புலவர்
பாடிய  தனிப்பாடல்களைக்  கொண்டு  வழங்குகின்ற வேறு பல வரலாறுகளையும்
தமிழ் நாவலர் சரிதம் முதலிய நூல்களால் அறிந்து கொள்ளலாம்.

பின்பு, பொய்யாமொழியார் சோழநாட்டைச் சேர்ந்து பெருஞ் செல்வராகிய  சீனக்க
முதலியாரிடம்  சார்ந்து   நட்புரிமை   கொண்டார்; உயிரும்   உடலும்   போல்
பிரிவின்றியைந்த  பெருங்  கிழமை  கொண்டு  வாழ்ந்தனர்.  இவ்வாறு   ஆங்கு
வாழ்ந்து வருங்கால் ஒருநாள் புலவர் பெருமகனார் வெளியூருக்கு ஓர்  அலுவலை
முன்னிட்டுச் சென்று மீண்டார்.  அதற்குள்   சீனக்க  முதலியார் இறந்தனர்; இவர்
வருமுன்  அவருடலை நன்காடு கொண்டு  சென்று எரியூட்ட முற்பட்டனர்; புலவர்
திரும்பி  வரும்  போது  செய்தியறிந்து  விரைந்து நன்காடு சென்றார்; அப்போது
முதலியாரைக்  கிடத்திச்  சிதைகள்  அடுக்கப்  பெற்றிருந்தன.  அதன்  பக்கலில்
சென்று,

‘அன்று நீ செல்லக்கிடவென்றாய்‘  என்று  தொடங்கி  ஒரு வெண்பாப் பாடினார்.
அப்போது  சிதையில்  கிடத்தியிருந்த  நண்பருடன்  படுத்தார்; உடனே   உயிர்
பிரிந்தது; தம்முயிர்  கொண்டு  தம்  நண்பரைத்  தேடிச் சென்றதுபோல் சென்று
விண்ணுலகெய்தி இருவரும் அன்பால் ஒன்றுபட்டனர்.

பொய்யாமொழிப்புலவர்  கோமாறவர்மர்  திரிபுவன  சக்கரவர்த்தி குலசேகர
தேவர்  காலமாகிய  12ஆம்    நூற்றாண்டில்   வாழ்ந்தவர்   என்பதும்,   இவர்
காலத்திலேயே, நாற்கவி நம்பியும் வாழ்ந்தவர் என்பதும் வரலாறுகளினால் அறியக்
கிடக்கின்றது. ஆதலால் இவர் எழுநூற்றைம்பது ஆண்டுகட்கு முற்பட்டிருந்தவர்
என்பது புலனாகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 16:34:48(இந்திய நேரம்)