Primary tabs
வந்து எதிர்த்தாலும் அஞ்சி ஓடாது கூடி எதிர்த்துப்போராடும் வன்மை பெற்றதாதல்வேண்டும். படைவீரர் தம் நெஞ்சத்திட்பம், கண்ணில் ஒருவன் வேல்கொண்டு குத்தினும் கண்ணைச் சிமிழ்த்தாது விழித்தகண் விழித்தபடியிருக்கும் நெஞ்சுரம் பெற்றவராக மிளிர்தல்வேண்டும். இவைகளைப் பெற்றவனையே ‘வீரன்’ எனக்கூறி மகிழ்வர், நம் வள்ளுவர் பெருந்தகை.
இவ் வீரத்தன்மைகள் நிறைந்த படைவலிமை பெற்றவனென, நளவேந்தனைப் படைத்துக்காட்டுகின்றார், நம் புகழேந்தியார். அவற்றுள் முதற்கண்,
‘ ஓடாத தானை நளனென் றுளனொருவன்’ (சுயம்வர : 18)
என்றும், அப்பால் அவன்றன் செங்கோல் மாட்சியை,
‘சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்’ (சுயம்வர : 19)
என்றும், அவன்றன் அறத்தின்மாறா அளியினை,
‘செம்மனத்தான் தண்ணளியான்’ (சுயம்வர : 46)
‘அறங்கிடந்த நெஞ்சும் அருளொழுகு கண்ணும்
மறங்கிடந்த திண்தோள் வலியும்’ (சுயம்வர : 47)
என்றும் எடுத்துக்காட்டி, மக்களுட் சிறந்த மாண்புடையனாக நளமன்னனை நமக்குத்தந்து, அவன் வரலாற்றை விளக்கியுரைப்பாராயினார்.
(iii) அறமுறைகள்:
‘அறமாவது விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் ஆம்’ என்பர் ஆசிரியர் பரிமேலழகியார். எனவே, நல்லன செய்தலே அறமென்பது பெறப்படும். இதனை நம் புலவர் மேதகை, நளமன்னன் காதைத்தொடர்களுள், ஆங்காங்கே இடையிடையே பொதிந்து உவமமாகவும் வேறுபல நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் உரைத்து மன்பதையுலகம் அறிந்து கடைப்பிடிக்கத் தெளிவுபடுத்துவர். அவற்றுட் சில:
‘காதல், கவறாடல், கள்ளுண்டல், பொய்ம்மொழிதல்,
ஈதல் மறுத்தல்’ (கலிதொடர் : 39)
என்பன,
(1) காதல்: மிக்க காமம். காதல் மிகுதியால் தன் மனையாளையன்றி வேறு பல மாதர்களையும் விரும்புதல். இதனால் ஒருவன்.