Primary tabs
காவல் கடுமை
காதலர்களின் உறவு காதலியின் பெற்றோர்களுக்குத் தெரிந்துவிட்டது. அவளை வெளியில் விடாமல் காவல் காக்கிறார்கள். அவள் வெளியே சென்றாலும் யாராவது துணைக்குச் செல்லுகிறார்கள். காதலன் அவளைச் சந்திக்கச் சுற்றிச் சுற்றி வருகிறான். அவள் தனக்குத் தானே பாடுவது போல் அவனை நோக்கிப் பாடுகிறாள்.
நிழல்ல வந்து நிக்கி
வீட்டுக் கொடுமையாலே
வெளியேற நேரமில்ல
காட்டானை கட்டியிருக்க
கரடி புலி தானிருக்க
ஏழண்ணமார் இருக்க
எப்ப வந்த மன்னவனே?
கரடி புலி வாயக் கட்டி
ஏழண்ண மார் கண்ணயர
ஏறி வந்தேன் கற்கோட்டை
கருதோ ஒரு கருது
காவலோ பத்து லட்சம்
இந்த விதம் காவலில
எந்த விதம் நான் வருவேன்
ஆடியிருட்டுக்குள்
அமாவாசைக் கம்மலில
தேடி வருமுன்னே
தெரு வெல்லாம் காவலில்லா
சதிராடும் பொன்னுச்சாமி
வீட்டுக் கொடுமையாலே
வெளியே வர நீதியில்ல
வட்டார வழக்கு: நிக்கி-நிற்கிறாங்க ; எப்ப-எப்பொழுது; காவலில்லா-காவல் அல்லவா; வந்த-வந்தாய்; கருது-கதிர்; நீதி-நியதி..
சேகரித்தவர்
:
S.S.போத்தையா
இடம்
:
விளாத்திக்குளம்,
நெல்லை மாவட்டம்.