தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


விட்டானே ஒற்றை வழி

கிராமப் பெண்களில் சிலர் காதலித்தவனால் கைவிடப்படுவதுமுண்டு. இதற்கு மிகவும் முக்கியமான காரணம் பணத்தோடு வேறு பெண் கிடைப்பதுதான். அவ்வாறு ஏமாற்றப்பட்டவள் ஏமாற்றியவனை வயிறெரிந்து சபிப்பாள், சமூகத்தில் சொத்துக்கு மதிப்பிருக்கும்வரை அவள் சாபம் அவனை என்ன செய்யும்? நெஞ்சில் குத்துவதுபோல் கூர்மையான சொல் பிரயோகங்களை இப்பாடல்களில் காணலாம்.

கட்டப் பய குட்டப்பய
கட்ட மண்ணு தாண்டிப்பய
விசு வாசம் கெட்ட பய;
விட்டானே ஒத்த வழி

எலுமிச்சம் பழமிண்ணு
எடுத்தேன் கைநிறைய
கச்சக் குமிட்டுக் காயுண்ணு
கண்டவுக சொல்லலையே

காப்புக் கழண்ட தய்யா
கைவளையல் கழண்ட தய்யா
கோப்பு குலைஞ்ச தய்யா
கோல மொழிப் பாவியால

ஏசல் கயிறானேன்
எருமை கட்டும் தும்பானேன்
பாவி மகனால
பரதேசிக் கோலமானேன்

என்னைக் கெடுத்தவனை
எனக்கு மதி சொன்னவனை
சொகுசைக் குலைத்தவனை
சுத்தாதோ என் பாவம்?

பாம்பு கடியாதோ?
பாவம் உனைப் பிடியாதோ?
சாபம் பிடியாதோ?
சர்ப்பம் உன்னைத் தீண்டாதோ?

தண்ணியிலே தலைகவுந்து
தருமர் கூட வழி நடந்து
நம்புன சாமியாலே
நனையுறனே தூத்தலில

என்னைக் கெடுத்தமிண்ணு
எக்காளம் பேசாதே
உன்னைக் கெடுத்துருவா
உறுதியுள்ள பெத்தனாச்சி

வேப்ப மரத்தை நம்பி
வெள்ளரளிப் பூ வெடுத்தேன்
காஞ்சிரங் காய நம்பி
கனிய மறந்தனையா !

கொழுந்து அரைக்கீரை
அறுக்கறுக்கப் பூ வாசம்
விசுவாச கெட்ட வண்ட
என்ன சகவாசம்?

கத்தரி காய்க்காதோ
கமலைத் தண்ணி பாயாதோ
கிழக்க வரும் சூரியன போல்
எனக் கொருத்தன் கிடையாதோ?

காசிப் பயறடிச்சான்
பத்தினியச் சீரழிச்சான்
என்னைக் குல மழிச்சான்
எஞ்சனத்தை ஈனம் வச்சான்

ஆசை கொண்டேன் தேசத்துல
அகப் பட்டேன் கண்ணியிலே
வேசை மகனாலே
வெளிப்பட்டேன் இத்தூரம்

வட்டார வழக்கு : தும்பு-கட்டும் கயிறு ; கழண்டது- கழன்றது ; கோப்பு- உருவம் ; சொகுசு-நலம் ; தூத்தல்-சிறு மழை.

சேகரித்தவர் :
S.S.போத்தையா

இடம் :
நெல்லை மாவட்டம்.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:14:36(இந்திய நேரம்)