தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பொழுதிருக்க வந்து சேரும்

கணவன் மாடு பிடித்துக்கொண்டு மலைக்குப் போகிறான். மனைவி கைக்குழந்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வீட்டு வாசலில் வந்து நின்று வழியனுப்புகிறாள். மலையில் புல் நிரம்ப உண்டு. மாடு நன்றாக மேயட்டும் என்று நினைத்து நேரத்திற்குத் திரும்பாவிட்டால் இரவில் கொடிய விலங்குகளால் ஆபத்து நேரிடக்கூடும். ஆகவே சீக்கிரம் திரும்பி விடும்படி அவனிடம் சொல்லுகிறாள். அவனோ காடுமலையெல்லாம் அறிந்தவன். மாடுகளும் வசங்கிய மாடுகள். அவை எங்கும் திசை தப்பிப் போய்விடா. ஆகவே கவலை வேண்டாமெனத் தேறுதல் சொல்லிவிட்டு அவன் புறப்படுகிறான்.

மனைவி:
நாட்டுத் துறவல் குச்சி
நான் அணையும் தங்கக்குச்சி
பூட்டும் துறவல் குச்சி
போகுதில்ல ஒத்த வழி
குளத்தில் ஒருகல் உண்டும்
கூந்தல் ஒரு பாகம் உண்டும்
என்னத் தொட்ட மன்னவர்க்கு
முகத்தில் ஒரு தேமலுண்டும்
நாங்கிள் கம்பெடுத்து
நடுத் தெருவே போற மன்னா
குறுக்கே சவளுதுன்னு
கூந்தல் ஒரு பாகத்துக்கு

கணவன்:
பச்சைத் துகில் உடுத்தி
பாலகனைக் கையிலேந்தி
மணக்கவே மஞ்சள் பூசி
மாதவியே பின்னே வாராள்

மனைவி:
புல்காடு ரொம்ப உண்டும்
பொழுதனைக்கும் மேஞ்சிடாமல்
பொழுதிருக்க வந்துசேரும்
புள்ளிமான் பெற்ற கண்ணே

கணவன்:
உழுகாத மாடா
உழவறியா காளங்கண்டா
வசக்காத மாடா
வசம் பண்ணி நிக்குதற்கு

வட்டார வழக்கு: துறவல் குச்சி-திறவுகோல் குச்சி ; பொழுதனைக்கம்-பொழுதனைத்தும் ; பொழுதிருக்க-பகல் முடியுமுன் ;உழுகாத-உழாத ; காளங்கண்டா-காளைக்கன்றா? ; வசம்-வசக்குதல்.

சேகரித்தவர் :
S.M. கார்க்கி

இடம்:
சிவகிரி, நெல்லை.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:55:03(இந்திய நேரம்)