தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பாரமலை சாய்ந்தது

கணவனும் மனைவியும் குறைவற வாழ்ந்து வரும் பொழுது, மனைவி சில தீய நிமித்தங்களைக் கண்டாள். மலை சாய்ந்து விட்டது ; தோப்பிலிருந்த மணி உடைந்தது ; கடுகுப் பயிரும், மிளகுப் பயிரும் பயன் தரவில்லை ; இவற்றைக் கண்டு, காலனைப் போல சொல் தவறாத ஜோசியர்களிடம் சென்று வருங்காலத்தைப் பற்றிக் கேட்கச் சென்றார்கள். அவர்கள் ‘எழுத்திங்க’, ‘பொழுது இல்லை’ என்று சொல்லி விட்டார்கள். இதனால் காலம் கெட்ட காலம் சீக்கிரம் மாறும் என்றே எண்ணி வந்தார்கள். ஆனால் அவன் இறந்து விடுவான் என்று மனைவி நினைக்கவேயில்லை.

கட்டிலுக்குக் கீழே
காத்திருந்தோம் சிலகாலம்
காத்திருந்தோம் கண்ணப்பொத்தி
காலன் வந்த மாயமென்ன?
மெத்தைக்குக் கீழே
வீத்திருந்தோம் சிலகாலம்
வீத்திருந்தோம் கண்ணப்பொத்தி
வீமன் போன மாயமென்ன?
பத்துமலைக் கப்பாலே,
பார மலைக்கிப்பாலே
பாரமலை சாஞ்சொடனே
பகவானை கைதொழுதோம்
எட்டு மலைக்கப்பாலே
இலங்கை மணிதோப்போரம்
இலங்கை மணி உடச்சொடனே
இந்திரரைக் கையெடுத்தோம்
கடுகு பயிர் ஆகுமிண்ணு
காத்திருந்தோம் சிலகாலம்
முளகு பயிர் ஆகுமின்னு
முழிச்சிருந்தோம் சிலகாலம்
முளகு பயிர் ஆகவில்லை
முழிச்சிருந்தோம் வீணால
கடுவரைச்சுக் கோலமிட்டு
காலனவே வரவழைச்சி
காலன் பெருமாளும்
கட்டெடுத்து சொன்னாக
எள்ளரைச்சு கோலமிட்டு
எமனையே வரவழைச்சி
எமன் பெருமாளும்
ஏடெடுத்தும் சொன்னாக
பொன் எடுத்து கோலமிட்டு
பொழுது வரவழைச்சு
பொழுதும் பெருமாளும்
போட்டெழுத்துன்னா சொன்னாக
தங்க மலையேறி
சாதகங்கள் பார்க்கையிலே
தங்கமலை நாதாக்கள்
தகுந்தெழுத்துன்னும் சொன்னாக
ஆத்துக்கும் அந்தப்புறம்
அழகான கல்லறையே
கல்லறை மேடையிலே
கண்ணுறக்கம் வந்ததென்ன?
கரிஞ்ச நிழல் பாத்து
தாவரம் பத்தியிலே-உனக்கு
குளுந்த நிழல் பாத்து
கூட இருக்கத் தேடுதனே
ஒத்த மரமானேன்
ஒரு மரமே காலாற
பக்கமரம் இல்லாமே
பதவி குலைஞ்சேனே

சேகரித்தவர் :
எஸ்.எம். கார்க்கி

இடம்:
சிவகிரி,
நெல்லை மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 06:13:06(இந்திய நேரம்)