வசம்பு

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Acorus caamus.

குடும்பம் : Araceae

ஆங்கிலம் : Sweet flag

வளரிடம் : இத்தாவரம் இந்தியா மற்றும் பர்மாவினைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்பொழுது உலகின் பல பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது.

வளரியல்பு : ஒரு மீட்டர் உயரமுள்ள நீர் வாழ் குறுஞ்செடி இதன் தண்டு தரையடித் தண்டாகும். நாணல் போன்ற அமைப்பு கொண்டது; இலைகள் வாள் போன்ற அமைப்பும் கரும்பச்சை வண்ணமும் கொண்டவை; மலர்கள் மஞ்சள் நிறம் கோடைக்காலத்தில் தோன்றுகின்றன.

மருத்துவப் பயன்கள் : உலர்த்தப்பட்ட தடியடித்தண்டு மணம் கொண்டது. செயல் தூண்டுவி ; வடிநீராக உட்கொண்டால் வலுவேற்றியாக உதவுகிறது ; வயிற்றுவலி மற்றும் வயிற்று உப்புசம், பசியின்மை ஆகியவற்றினைக் குணப்படுத்தும் ; அதிமதுரத்துடன் சேர்த்து குழந்தைகளின் இருமல், காய்ச்சல், வயிற்றுவலி முதலியவற்றுக்கு மருந்தாகிறது. தொண்டை கரகரப்பு மற்றும் இருமலுக்குத் தரையடித் தண்டு வாயில் போட்டு மெல்லப்படுகிறது. வாயில் உமிழ்நீர் சுரப்பினை அதிகரித்து சுகம் தரும். அதிக அளவில் உட்கொண்டால் வாந்தி ஏற்படும். குறைந்த அளவு ஜீரணத்தைத் தூண்டி நரம்புகளுக்கு வலு தருகிறது; வயிற்றின் அமிலத் தன்மையினை நீக்கும் ; பல நச்சுகளுக்கும் முறிவு மருந்தாக இருப்பதால் தொற்றுநோய் பரவுதலின்போது தரையடித்தண்டு உட்கொள்ளப்படுகிறது. முந்திரிக்கொட்டை ஓட்டின் எண்ணெய்யுடன் கலந்து முடக்கு வாதத்திற்கு மேல் பூச்சாகிறது. அடி வயிற்றில் வாயு இருந்து வலி ஏற்படும்பொழுது வசம்பின் சாம்பல் ஆமணக்கு அல்லது தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து அடிவயிற்றில் பூசினால் வலி நீங்கும் ; இதனை மென்றால் பல்வலி நீங்கும்.