அசுவகந்த

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Withania somnifera Dunal.

குடும்பம் : Solanaceae

வளரிடம் : எல்லா இடங்களிலும், வறண்ட நிலங்களிலும் காணப்படும். மருத்துவப் பயன் கருதி வளர்க்கப்படுகிறது.

வளரியல்பு : புதர் செடி 2மீ உயரம் வரை வளரும். தண்டு முழுவதும் கம்பளி போன்ற வளரியல்புகள் காணப்படுகின்றன. முட்டை வடிவிலான இலைகள், மலர்கள் இலைக் கோணத்தில் காணப்படும். கொத்தாகவோ அல்லது தனித்தோ காணப்படும். மணிவடிவிலானதும் புல்லி வட்டம் வீக்கமடைந்து காணப்படும். மணியைவிடப் பெரியது. மகரந்தத்தாள்கள் அல்லிவட்டத்தின் அடிப்பகுதியில் ஒட்டியவை. சூல்முடி இரண்டாகக் கிளைத்தது. விதைகள் பல, மலர்களும், கனிகளும் நவம்பர் மாதங்களில் தோன்றுகின்றன.

மருத்துவப் பயன்கள் : இலைகள் கசப்பானவை, வயிற்றுப்பூச்சிகளுக்கு எதிரானவை, காய்ச்சல் போக்குவி, வேர் மற்றும் இலைகள் இணைந்து, நுரையீரல் நோய்களுக்கு மருந்தாகின்றன. கசக்கிய இலைகளும் அரைத்த வேரும் மேல் பூச்சாகச் சொறி, வலியுடைய வீக்கங்கள் மற்றும் புண்கள் மீது பூசப்படுகிறது.

பாலுணர்வு ஊக்குவி, வலு வேற்றுவி, மேலும் இருமல், விக்கல், மாதவிடாய் சிக்கல் போன்றவற்றைக் குணப்படுத்த வல்லது. நரம்பு மண்டலத்தினை வலுப்படுத்தும். விந்துவை அதிகப்படுத்தும். மூப்பு பலவீனத்தைப் போக்கும். வேரின் பொடி சம அளவு நெய் மற்றும் தேனுடன் உட்கொண்டால் மலட்டுத்தன்மை அல்லது விந்து பலவீனத்தை நீக்கும்.