கணவாய் மீன்கள் - Cuttle Fishes

முனைவர் ச.பரிமளா
பேராசிரியர் மற்றும் தலைவர்
தொல்லறிவியல் துறை

மன்னார் வளைகுடா, மண்டபம், இராமேஸ்வரம் பகுதி கடலோர மக்களால் சுவை மிகுந்த உணவுப் பொருள்களாகப் பயன்படுத்தப்படும் கணவாய் மீன்கள் (Cuttle fishes) பொதுவாக தலைக்காலிகள் (Cephalopods) என்றழைக்கப்படுகின்றன. பெயருக்கு ஏற்றவாறு இவற்றின் நீண்டஉடலின் தலைப்புறத்தே கைகளையொத்த உறுப்புகள் அமைந்துள்ளன. இவ்வுறுப்புகளின் நுனியில் உறிஞ்சிகள் (Suckers) அல்லது ஒட்டுறுப்புக்கள் காணப்படுகின்றன. நீண்ட, மிருதுவான, வெண்மையான, சொரசொரப்பு மிக்க கணவாய் ஓடு (Cuttle bone) இதன் உடற்பகுதிக்கும் தோற்பகுதிக்கும் இடையில் செருகினாற் போல் அமைந்திருக்கும். மரம், கண்ணாடியைப் பளபளப்பாக்குவதற்கும் அலங்காரப் பொருள்கள் தயாரிப்பிலும் இக்கணவாய் ஓடுகள் பயன்படுகின்றன. இம்மீன்கள், நண்டுகளையும் இறால்களையும் மிக விரும்பி உண்ணுகின்றன. ஊசிக்கணவாய், பேய்க் கணவாய், விஷக்கணவாய் இனங்கள் என்று பல இனங்கள் உள்ளன. உணவுக்காக பயன்படும் கணவாய் மீன்களிலிருந்து பல ஊறுகாய் வகைகளும் தயாரிக்கப்படுகின்றன. இதன் குடற் பகுதியிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருள் மீன்களுக்கும் கோழிகளுக்கும் தீவனப் பொருள்களாகின்றன. இம்மீன்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சாயங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன

கணவாய் மீன்கள்