வெந்தியம்

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Trigonella foenum L.

குடும்பம் : Fabaceae

ஆங்கிலம் : Fenugreek

வளரிடம் : இந்தியாவின் பல பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் வட சமவெளிப்பகுதிகளில் காட்டிலும் இயல்பாகக் காணப்படுகிறது.

வளரியல்பு : 30-60 செ.மீ உயரமுள்ள, மணமிக்க நிமிர்வளர் சிறுசெடி. மூன்று சிற்றிலைகளுடைய சிறகு கூட்டிலை, சிற்றிலைகள் பற்களுடைய விளிம்புடையவை, நீள் உருளை-தலைகீழ் ஈட்டி வடிவம் 2.0-2.5 செ.மீ நீளமுடையவை; ஒன்று அல்லது இரண்டு கோண மடல்கள் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமுடையவை ; வெடி கனிகள் அலகு போன்ற முனைகள் கொண்டு, நீர் ததும்பி, 3-15 செ.மீ நீளமுடையவை. விதைகள் 10-20, நீள் உருளை வடிவம் கொண்டு ஒரு முனையில் குழிவை உடையன. பசும் பழுப்பு நிறமுடையவை.

மருத்துவப் பயன்கள் : விதைகள் மியுசிலேஜ் கொண்டவை, சிறுநீர்க் கழிவை அதிகரிக்கும். அஜீரணத்தைப்போக்கும் துவர்ப்புள்ளது. தோலை மிருதுவாக்கும், வயிற்றுவலி, வாயுகோளாறு, சீதபேதி, பசியின்மை இருமல், நீர்க்கோர்வை, ஈரல் மண்ணீரல் வீக்கம், வாதநோய் ரிக்கட்ஸ், இரத்தச்சோகை, நீரிழிவு நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும். இலைகள் குளிர்ச்சியூட்டும் மிதமான பேதி மருந்து, புறவீக்கம், தீக்காயங்கள் இவற்றைக் குணப்படுத்த உதவும்.