பறவைக் கோலா மீன்
(Flying Fish)

முனைவர் ச.பரிமளா
பேராசிரியர் மற்றும் தலைவர்
தொல்லறிவியல் துறை
பறவைக் கோலா மீன்

தமிழகத்தின் நாகப்பட்டினக் கடலோரப் பகுதிகளில் குறிப்பிட்டப் பருவக்காலங்களில் பறவைக் கோலாமீன்கள் மிக மிக அதிக அளவில் பிடிக்கப்படுகின்றன. புதிய மீன்களாக விற்பனை செய்யப்படுவதுடன் காயவைக்கப்பட்டும், பதப்படுத்தப்பட்டும், கருவாடாகப் பெருமளவில் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இக்கோலா மீன்களைப் பிடிப்பதற்கென்றே கோலா மரம், கோலா வலை பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாகக் கடலில் மீன் பிடித்துத் திரும்புதல் மிக எளிதான பணியன்று. கடலில் மற்ற மீன்களைப் பிடிப்பது போல் அல்லாது கோலா மீன்களைப் பிடிப்பதற்கு மிகுந்த கவனமும் பாதுகாப்பும், பயிற்சியும் தேவைப்படுகின்றன. வலைகளில் இம்மீன்கள் பிடிபட்டாலும் இவற்றின் பறக்கும் வேகம் சில வேளைகளில் மீனவர்களைக் காயப்படுத்துவதும் உண்டு.

இம்மீன்கள் பறவைகளைப் போல காற்றில் சிறகடித்துப் பறப்பதில்லை என்றாலும், இவை கூட்டங்கூட்டமாக நீருக்கு மேலெழும்பி சிறிது தூரம் வரை பறந்து பின் நீரில் விழுந்து எழும்பி விழுந்து எழும்பி பறந்து செல்வது பார்ப்பதற்கு அழகிய காட்சியாகும். நீரிலிருந்து ஏறத்தாழ 100 அல்லது 150 அடி உயரம் வரை எழும்பிப் பறக்கும் இம்மீன்களின் பறக்கும் வேகம் மணிக்கு 20 முதல் 30 வரை இருக்குமென்று கணக்கிட்டுள்ளனர். இம்மீன்களின் மார்புத்துடுப்புகள் (pectoral fins), வால்பகுதி வரை நீண்டு வளர்ந்து பறவைகளின் இறக்கையைப் போல பறப்பதற்கு உதவுகின்றன.

இம்மீன்கள் எக்ஸோசீட்டிடே (Exocoetidae) குடும்பத்தில் 8 பேரினங்களின் கீழ் 48 இனங்களைக் கொண்டிருக்கின்றன. உண்பதற்கும் சுவையான கோலா மீன்கள் வணிக மற்றும் பொருளாதாரச் சிறப்பு மிக்கவையாகும்.