கண்டங்கத்திரி

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Solanum surattense Burms.

குடும்பம் : Solanaceae

ஆங்கிலம் : Yellow-berried night shade

வளரிடம் : இந்தியா முழுவதும் காணப்படும். சாலை ஒரங்கள், தரிசு நிலங்களில் காணப்படும்.

வளரியல்பு : நன்கு படர்ந்து தரையை ஒட்டி வளரும் குறுஞ்செடி, தாவரம் முழுவதும் முட்கள் காணப்படும். இலைகள் முட்டை வடிவிலான ஓரங்கள் வெட்டியும் நீண்ட நேரான முட்களுடன் இருக்கும். மலர்கள் கொத்தாகக் காணப்படும். நீலநிறத்தில் பூக்கள், கனிகள் கோளவடிவிலானவை, சதைப்பற்றுள்ள கனிகள் (பச்சை நிறத்துடன் வெண்மைப் பகுதிகளைக்கொண்டது) கனிந்த நிலையில் மஞ்சள் நிறத்தில் காணப்படும். விதைகள் தட்டையானவை. மார்ச்-ஜூலை மாதங்களில் மலர்கள் தோன்றுகின்றன.

மருத்துவப் பயன்கள் : தாவர முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. இலைகளின் சாறு மிளகுடன் சேர்த்து மூட்டுவலிகளுக்கு மருந்தாகிறது. வேர் ஆஸ்துமாவை குணப் படுத்துகிறது. வாந்தி நிறுத்தக்கூடியது. சிறுநீர்ப் போக்கு தூண்டுகிறது. மார்பு வலி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு மருந்தாகிறது. கனிகளின் சாறு தொண்டை வலியைப் போக்குகிறது. விதையின்பொடி குழந்தைகளின் இருமலுக்கு தேனுடன் கலந்து கொடுக்கப்படுகிறது.

விதைகள் எரித்த புகை ஆஸ்த்துமா நோயில் சளி அகற்றுவியாகப் பயன்படுகிறது. மேலும் பல்வலியைக் குணப்படுத்துகிறது. இதன் கசாயம் பால் வினை நோய்க்கு மருந்தாவதுடன் கருத்தரிக்கவும் ஊக்குவிக்கிறது.