கீழாநெல்லி

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Phyllanthus niruri Hook f.

குடும்பம் : Euphorbiaceae

வளரிடம் : இந்தியாவினைச் சார்ந்ததும், வெப்பமான பகுதிகள் மற்றும் ஏனைப்பகுதிகளிலும் காணப்படுகிறது.

வளரியல்பு : முப்பது செ.மீ. உயரம் வரை வளரும். ஒரு பருவக் குறுஞ்செடி; செங்குத்தாகவோ அல்லது தரைமீது படர்ந்தோ காணப்படும். இலைகள் முட்டை வடிவிலானவை; மலர்கள் இலைக் கோணத்தில் காணப்படும். ஒரு பாலின மஞ்சள், பச்சை அல்லது வெள்ளை நிறம் கொண்டவை. ஆண்மலர்கள் 1-3 ஆகவும் பெண் மலர்கள் தனித்தும் காணப்படும். கனிகள் அமுக்கப்பட்டவை. கோணவடிவின; சம பரப்புடையவை; விதைகள் மூன்று முகம், செம்பழுப்பு நிறம், 6 - 7 வரிகள் காணப்படும்.

மருத்துவப் பயன்கள் : முழுத்தாவரமும் பயன்பாடு கொண்டவை; காய்ச்சல் தீர்க்க வல்லவை, கிரிமிகளுக்கு எதிரானவை, தசை இறுக்கி, குளிர்ச்சி தருவது. அடைப்பு நீக்குவது, சிறுநீர்த் தூண்டி, மயக்கம் தீர்ப்பது. குடல்வலி, வயிற்றுப்போக்கு, கோனேரியா, மாதவிடாய், அதிகக் குருதி வெளியேறுதல், இனப்பெருக்க நோய்கள் மற்றும் மஞ்சள் காமாலை ஆகியவற்றைப் போக்க வல்லது. பசுமையான இலைகளும், வேர்களும் மஞ்சள் காமாலைக்குச் சிறந்த மருந்தாகும்.