நீர்நொச்சி

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Vitex trifolia L.

குடும்பம் : Verbenaceae

ஆங்கிலம் : Three leaved chaste tree

வளரிடம் : இந்தியாவின் வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் சமவெளி மற்றும் குன்றுகளில் வளர்கின்றது.

வளரியல்பு : புதர்ச்செடி; இலைகள் மூன்று சிற்றிலைகள் கொண்டவை; காம்பற்ற தலைகீழ் முட்டைவடிவின; மடல் முழுமையானது; மேல்புறம் பளபளப்பாகவும், கீழ்ப்புறம் வெண்மையான தூவிகளுடன் காணப்படும்; மலர்கள் சிறியவை; மஞ்சரியாக அமைந்தவை. அல்லி இதழ் தூவிகள் கொண்டது; வேண்டர் நீலநிறம். மகரந்ததாள் கம்பிகள் அடிப்புறத்தில் முடிகள் உள்ளன. கனிகள் கோணவடிவின விதைகள் நீள்வட்ட வடிவின.

மருத்துவப் பயன்கள் : இலை, வேர், மலர்கள், கனிகள், ஆகியவை மருத்துவப் பண்புகள் கொண்டவை. மூட்டுவலி எதிர்ப்பு, குடல் புழுக்கள் எதிர்ப்புச் சக்திகள் இலைகளுக்கு உண்டு. காய்ச்சல் போக்குவி மற்றும் பூச்சிக் கொல்லியாகப் பயன்படுகிறது. முடிவளர்வதற்கு பயன்படுகிறது; மூச்சு குழல் அழற்சி, விட்டு விட்டு வரும் காய்ச்சல், வெண்குட்டம் ஆகியவற்றினைக் குணப்படுத்த உதவுகிறது; ஞாபக சக்தியினை மேம்படுத்தவும் பயன்படும். சுளுக்கு, வீக்கம் மற்றும் மூட்டுவலி ஆகியவற்றுக்கு வெளிப்பூச்சாக உதவுகிறது.

வேர் வாந்தியினைத் தடுக்கும்; மார்புசளியினை அகற்றும்; வலுவேற்றியாகவும் நீர் தாகத்தைப் போக்கவும் பயன்படுகிறது. மலர்கள் தேனுடன் கலந்து வாந்தியுண்டான காய்ச்சலுக்கு மருந்தாகிறது. கனிகள் நீர்ச்சோர்வை, மாதவிடாய்க் கோளாறு ஆகியவற்றினைப் போக்க வல்லவை; நரம்பு வலுவேற்றியாகவும் செயல்படுகிறது.