பெல்லடோனா

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Atropa belladona L.

குடும்பம் : solanaceae

ஆங்கிலம் : Belladona

வளரிடம் : மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பாவினைச் சார்ந்த தாவரம். இதன் மருத்துவப் பயன் கருதி உலகெங்கும் வளர்க்கப்படுகிறது.

வளரியல்பு : இரண்டு மீட்டர் உயரத்திற்கு வளரும் பல பருவக் குறுஞ்செடி. இலைகள் அகன்றவை, கணுவில் எதிரெதிராக அமைந்தவை, மலர்கள் பெரியவை, இலைக் கோணத்தில் நீண்ட காம்புடன் இணைந்தவை, பழுப்புநிற அல்லிகுழல், கனிகள் கோள வடிவின, செரி கனி போன்றவை.

மருத்துவப் பயன்கள் : இத்தாவரம் குழந்தைகளின் கண்களை விரிவடையச் செய்யும், இதனை இத்தாலிய மகளிர் தங்களது கண்களை விரியச் செய்வதற்குப் பயன்படுத்தினர். எனவே, சிற்றினப் பெயர் இத்தாலிய மொழியில் ‘அழகிய பெண்மணி’ என்னும் பொருளில் அமைந்துள்ளது.

இது தளர்ந்த உறுப்புகளை நல்ல நிலைக்குக் கொண்டுவரும். குடல்வலியினைப் போக்கும், சிறுநீர் நுண்குழல்களின் பிரிப்பு வலியினை நீக்குகிறது. இதய துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. இது ஜீரண மற்றும் மூச்சுக்குழல் சுரப்புகளை மட்டுப்படுத்துகிறது.