இறால்கள் (Prawns)

முனைவர் ச.பரிமளா
பேராசிரியர் மற்றும் தலைவர்
தொல்லறிவியல் துறை
இறால்கள்

இயற்கையான இறால் மீன் வளத்தில் மிக முக்கிய இடங்களைப் பெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. நன்கு வளர்ந்து பெருகுவதற்கேற்ற வாழ்விடச் சூழல் நிறைந்த இறால் படுகைகளைக் (Prawn grounds) கொண்டிருப்பதில் தமிழகம் தனியிடம் பெறுகிறது. “செம்மீன்கள்” எனச் சிறப்பாக அழைக்கப்பெறும். இறால் மீன்கள் உண்மையில் மீனினத்தைச் சார்ந்தவையல்ல. இவை கணுக்காலிகள் (Arthropoda) தொகுதியில், டெகாபோடா (Decapoda) வரிசையில் கிரஷ்டேசியா (Crustacea) என்னும் வகுப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இறால் இனங்கள் அனைத்துமே இறால்கள் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் அறிவியல் முறைப்படி உண்மையான இறால் இனங்கள் பினேய்டு வகை (penaeid) என்றும் இறால் இனங்களைச் சாராதவை நான்பினேய்டு (Nonpenaeid) என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.

இறால்களில் வண்ணத்திற்கும் வடிவத்திற்கும் ஏற்றவாறு இவை செவ்விறால், பச்சையிறால், கருப்பு இறால், வரி இறால், மோட்டிறால், கல்லிறால், கூனியிறால், சிங்கியிறால் என்று பல பெயர்களில் அழைக்கப்பெறுகின்றன. கடல் பகுதியிலும், ஆற்றுப்பகுதியிலும், கழிமுகப் பகுதியிலும் பரவிக் காணப்படும் இறால் இனங்கள் நீரின் அடிமட்டதே வாழ்வதால் மட்கிய பொருள்களையும் மிதவை உயிரிகளையும் உண்டு வாழ்கின்றன. உண்பதற்குச் சுவை மிகுந்த, புரதச்சத்து நிறைந்த எளிதில் செரிக்கக்கூடிய இறால் உணவு கடலுணவு வகையில் ஏற்றுமதி முக்கியத்துவம் கொண்டவையாகும்.