சீரகம்

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Cuminum ciminum L.

குடும்பம் : Apiaceae

ஆங்கிலம் : Cumin

வளரிடம் : எகிப்து நாட்டினைச் சேர்ந்த சீரகம் ஒரு குறுஞ்செடி; 30 செ.மீ. உயரம் வளரக்கூடியது. ஒரு பருவச் செடி. கோடைக்காலத்தில் இதன் விதைகள் சேகரிக்கப்படுகிறது. இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது.

வளரியல்பு : மென்மையான தண்டு, இலைகள் மும்முறை கிளைத்தவை; நுனி சிற்றிலைகள் கம்பு போன்றவை; மலர்கள் வெண்மையானவை; கனிகள் உருளை வடிவானவை; நுனியில் குறுகியவை; விதைகள் ஒருபக்கம் அமுங்கியவை; வரிப்பள்ளம் கொண்டவை.

மருத்துவப் பயன்கள் : சீன, இந்தியா மற்றும் மையக் கிழக்குப் பகுதிகளின் சமையல் குறிப்புகளில் முக்கியமான மணப் பொருள்களாக உள்ளது. குறிப்பாக ஊறுகாய் மற்றும் கறிகளில் கனி-விதை பயன்படுத்தப்படுகிறது.

சீரகம் வயிற்று உப்புசம், வாயுவைப் போக்குவதுடன் ஜீரண உறுப்புகள் அனைத்தையும் ஊக்குவிக்கிறது; அடி வயிற்றில் சேறும் வாயுவைக் குறைத்து குடல் வலி போக்கிச் சுகமளிக்கிறது.

இந்தியா மூலிகை மருத்துவத்தில் தூக்கமின்மை, சளி மற்றும் காய்ச்சல் போக்க பயன்படுத்தப்படுகிறது. வெங்காயச் சாறுடன் கலந்து தயாரித்த விழுது தேள்கடியின் மேல் பூச்சாகப் பயன்படுத்தப்படுகிறது; வயிற்று வாயுக் கோளாறுகளைப் போக்கும்.

சீரகம் குளிர்ச்சி தருவதுடன் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கச் செய்கிறது. வயிற்றிலுள்ள புழுக்கள் மற்றும் வாயில் ஏற்படும் புண் போன்றவற்றைக் குணப்படுத்தவும் சீரகம் பயன்படுகிறது.