கொடும்பாளுர் மூவர் கோயில் - புதுக்கோட்டை

tva_pu_st_kodumbalur_alingana murthy_22 tva_pu_st_kodumbalur_arthanari_02 tva_pu_st_kodumbalur_gajasamharamurti_03 tva_pu_st_kodumbalur_hariharan_05 tva_pu_st_kodumbalur_kalanthagamurti_06
tva_pu_st_kodumbalur_murugan_10 tva_pu_st_kodumbalur_nataraja_07 tva_pu_st_kodumbalur_pikshadanar_20 tva_pu_st_kodumbalur_pillar wall inscription_13 tva_pu_st_kodumbalur_sivan_21
tva_pu_st_kodumbalur_temple view_01 tva_pu_st_kodumbalur_tripuranthaga_08 tva_pu_st_kodumbalur_veenadhara_09 tva_pu_st_kodumbalur_vimana inner view_17  

சிற்பங்கள் :

தளங்களிலும், கருவறைக் கோட்டங்களிலும் கங்காதரர், காலாந்தகமூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, ஆடல்வல்லான், திரிபுராந்தகர், முருகன், அர்த்தநாரீசுவரர், சங்கரநாராயணன், ரிஷபாந்திகர் போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன. பரிவார சந்நிதிகள் இடம்பெறவில்லை. கோபுரங்கள் இடம் பெறவில்லை. முருகன் சிற்பம் ஒன்று தனித்துவமான தலையலங்காரத்தில் சிதைந்த நிலையில் காணப்படுகின்றது.முழுத்தூண்கள் இங்கு இடம் பெறவில்லை.

கோயிலின் அமைப்பு :

இரண்டு கோயில்கள் மட்டுமே உள்ளன. மூன்றாவது தாங்குதளப்பகுதி மட்டும் காணப்படுகிறது. கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்ட இக்கோயில்கள் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டது. மூன்று தளங்களை உடையது. தளங்களில் சிவவடிவங்கள் சிற்பங்களாக காணப்படுகின்றன.

சுருக்கம் :

கொடும்பாளுர் மூவர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள கி.பி.9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இருக்குவேளிரின் மிகச் சிறந்த கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக்கு சான்றாகும். கொடும்பாளுர் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் மிகவும் தொன்மையான ஊராகும். கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளோடு இவ்வழியே புகாரிலிருந்து மதுரைக்கு வருவதாக சிலம்பு குறிப்பிடுகிறது. அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான இடங்கழி நாயனாரின் பிறப்பிடம் கொடும்பாளுர் ஆகும். கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இருக்குவேள் மன்னன் பூதி விக்கிரமகேசரி கொடும்பாளுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். அவன் பாண்டியர் மற்றும் பல்லவர்களை வென்ற குறுநில மன்னன். இவன் முதலாம் ஆதித்த சோழனின் சமகாலத்தவன். இவனுடைய தந்தை சமரபிரமா விஜயாலயச் சோழன் காலத்தவன் ஆவான். பூதி விக்கிரமகேசரியின் மகள் நங்கை என்பவளை முதலாம் பராந்தக சோழனின் மகனான அரிகுலகேசரி மணந்தான். இவ்வாறு சோழருக்கும் இருக்குவேளிருக்கும் மணஉறவு முறையில் நட்பு உண்டாகியது. பூதிவிக்கிரம கேசரியின் இரு மைந்தர்களும் பூதி பராந்தகன், பூதி ஆதித்தன் என்ற பெயர்களையே பெற்றிருந்தனர். மூவர் கோயில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்காக எடுப்பிக்கப் பட்டிருக்கலாம் எனத் தெரிகின்றது. ஆனால் தற்போது இரண்டு கற்றளிகள் மட்டுமே முழுமையாகக் காணப்படுகின்றன. மற்றொன்று தரைப்பகுதியில் கட்டுமானத்தைக் கொண்டுள்ளது. மூவர் கோயில் இரண்டு கற்றளிகளும் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. அதிட்டானம், சுவர், கூரை, கிரீவம், ஸ்தூபி என்ற நிர்மாணங்களைக் கொண்டுள்ளது. சுவரிலும், தளங்களிலும் அமைந்துள்ள கோஷ்டப்பகுதிகளில் கஜாரி, காலாரி, ஆடல்வல்லான், அர்த்தநாரி, ஹரிஹரன், முருகன், வீணாதரர், கல்யாணசுந்தரர், கங்காதரர், உமாமகேசுவரர், பிட்சாடனர் போன்ற பல்வகையான சிற்பங்கள் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கற்றளிகளும் நாகர பாணியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சுவரில் உள்ள ஒரு கிரந்தக் கல்வெட்டு இருக்குவேளிரின் வம்சாவளிப் பட்டியலைத் தருகின்றது. மற்றொரு கல்வெட்டு முதலாம் இராஜராஜன் காலத்தியது. இக்கல்வெட்டு நொந்தா விளக்கொன்று எரிப்பதற்கான கொடையைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.