பாக்கு மரம்

முனைவர் கு.க.கவிதா,
உதவிப் பேராசிரியர்,
சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

இது கழுகு என்றும் கூறப்படும். இதன் தாவரவியல் பெயர் அரிகா கடெச்சு ( Areca catechu L) என்பதாகும். பாக்கு அரிகேசி (Arecaceae) அல்லது பாமே எனப்படும் ஒருவித்திலைக் குடும்பத்தைச் சார்ந்ததாகும். அரிகா இனத்தில் ஏறத்தாழ 20 சிற்றினங்கள் உண்டு. அவை பெரும்பாலும் இந்தோ-மலேய வெப்ப மண்டலங்களில் காணப்படும். இந்தியாவில் இதன் 4 சிற்றினங்கள் உள்ளன.
பாக்குமரம்

பாக்கின் பிறப்பிடம் மலேயா நாடாக இருக்கக்கூடும் எனத் தாவரவியலார் கருதுகின்றனர். இந்தியக் கடற்கரையோரப் பகுதிகளிலும் மலையடிவாரங்களிலும் இது பயிரிடப்படுகிறது. பொதுவாகப் பாக்கு, தென்னையைப் போல் கடற்கரையைச் சார்ந்த உப்பு மண்ணில் நன்றாக வளரும் எனினும் மலைகளில் 1000 மீட்டர் உயரம் வரை காணப்படுகிறது.
பாக்கு மரம_பூ

இது 15-20 மீட்டர் உயரம் வளரக்கூடிய மெல்லிய தண்டுடைய மரமாகும். இதன் தண்டு வெண்மையாக வழவழப்பாக இருக்கும். இலையின் வடுக்கள் தண்டில் வட்டமாகக் காணப்படும். இலை சிறகு வடிவக் கூட்டிலையின் பட்டை அகலமாக தண்டைச் சுற்றிக் குருத்துக்குப் பாதுகாப்பாக இருக்கும். இப்பட்டை கெட்டியாகத் தோல் போலிருக்கும். இலை 1.5 – 2 மீட்டர் நீளமிருக்கும். குருத்திலைப் பரப்பு விசிறி மடிப்புடன் அழகாகக் காணப்படும்.

இம்மரத்திலிருந்து கிடைக்கும் கொட்டைப் பாக்கை நேரிடையாகவோ பதப்படுத்தியோ பயன்படுத்துவர். தென்னிந்தியாவில் பதப்படுத்திய பாக்கே பயன்படுத்தப்படுகிறது.

பயன்கள் :

இந்தியா, மியான்மர், இலங்கை, மலேசிய நாடுகளில் பாக்கைத் தனியாகவோ வெற்றிலையுடன் சேர்த்தோ பயன்படுத்துவர். இளம் கொட்டைகளை மளமிளக்கியாகப் பயன்படுத்தலாம். இந்தியாவிலும், சீனாவிலும் நீண்ட காலமாகப் பாக்கைக் குடல்பூச்சி நீக்கியாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். விலங்கு மருத்துவர்கள் இதை நாடாப்புழுவை நீக்கப் பயன்படுத்துவண்டு. அர்கோலின் என்னும் நச்சுத் தன்மை வாய்ந்த அல்கலாய்டு கொட்டையில் உள்ளது. இது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடியது. பெருமளவில் உட்கொண்டால் பக்கவாதத்தைத் தோற்றுவிக்கும்.