முறுகல் மரம் இம்மரம் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் கார்சினியா இண்டிகா (Garcina indica Linn.) என்பதாகும். இது குலுசியேசியே (Clusiaeae) நீலகிரி அடிவாரத்தில் இதனைக் காணலாம். இம்மரம் நவம்பர், பிப்ரவரி மாதங்களில் பூக்கிறது. கனிகள் ஏப்ரல் மாதங்களில் பழுக்கின்றன.
வளரியல்பு : இது இலையுதிர்க்கால மெல்லிய தண்டுடைய மரம். இதன் கிளைகள் கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும். இலைகள் நீள்சதுரம் அல்லது ஈட்டி வடிவில் இருக்கும். இலைகளின் மேற்பகுதி அடர்பச்சை நிறமாகும். அடிப்பகுதி வெளிர் நிறமாகும். பழங்கள் உருண்டையாக இருக்கும். காய்கள் பழுத்து, அடர் ஊதா நிறத்திலிருக்கும். ஒவ்வொரு பழத்திலும் 5-8 பெரிய விதைகள் அடங்கியிருக்கும். பயன்கள் :
முறுகல் மரத்தின் பழங்கள் இனிய நறுமணமுடையவை. இனிப்புக் கலந்த புளிப்புச் சுவை கொண்டவை. கனியின் மேல் தோலை உலர்த்தி, கனிச்சாறில் அமிழ்த்தி எடுத்துச் சூரிய ஒளியில் உலர்த்திக் கோகம் என்னும் பொருள் தயாரிக்கப்படுகிறது. கோகம் புழுக் கொல்லித்தன்மை கொண்டது. இதயத்திற்கு வலிமை தரும். மூலநோய், சீதபேதி, கட்டி, வலி, இதயக் கோளாறுகளைப் போக்கும். நோயைத் தடுக்கும், கட்டிகளை இளக்கும், பூச்சு மருந்தாகவும் பயன்படும். காயங்களுக்கும், உதடு, கைகளில் ஏற்படும் புண்களுக்கும் மருந்தாகும். நோக்கீட்டு நூல் : அறிவியல் களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (2005) |