நாவல் மரம்

முனைவர் கு.க.கவிதா,
உதவிப் பேராசிரியர்,
சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

சிறாருக்குக் கனி; வாணிபத்திற்கு ஏற்றபடி ஜாம் ஜெல்லி, காடி ஆகியவை செய்திடலாம். நீரிழிவு நோய் உள்ளோருக்குக் கொட்டை அருமருந்து. உடலின் பல உபாதைகளுக்கும் மரத்தின் பல்வேறு பகுதிகள் மருந்தாகும். காற்றுத் தடுப்பிற்கு அருமையான மரம், கட்டிட வேலைகளுக்கும் ஏற்ற மரத்தைத் துரிதமாக வளர்த்துக் கொடுத்திடும். கால்நடைகளுக்குக் கலப்புத் தீவனம் தயாரிக்கவும் உதவிடும். மேலும் ஆராய்ந்தால், பல கிருமி மற்றும் பூசன நாசினிகளைக் கூட இம்மரத்திலிருந்து பெறலாம்.
நாவல்

தாவரவியல் பெயர் : ஸைனஸ்கியம் குமினியை (Eugenia cumini (L) Skeels )
தாவரக் குடும்பம் : மிர்டேசி (Myrtaceae)

வளரியல்பு :
நாவல்மரம்

ஜம்பு – நாவல் (ஜம்பூத்வீபம்) என்றொரு பெயரும் உண்டு. பாரதமே நாவலின் தாயகம் என உரிமை கொண்டாடலாம். நாவல் மரம் 25-35 மீட்டர் ஓங்கி உயர்ந்து வளரக்கூடிய மரம். இலையின் அளவைப் பொருத்தும் இருவகைகள் உள்ளன. இலைகள் 5.5 – 11.5 செ.மீ நீளமும் 2.5 – 6.5 செ.மீ அகலமும் கொண்டு முட்டை அல்லது கோளவடிவில் இருக்கும். 10 செ.மீ நீளப் பூங்கொத்துக்கள் அடர்ந்திருக்கும். மே, ஜூன் மாதங்களில் பழங்கள் தோன்றும். கனிகள் 4 செ.மீ நீளம் இருக்கும்.

பயன்கள் :

பழத்திலிருந்து ஒயின் தயாரிக்கின்றனர். ஜெல்லி மற்றும் ஸ்குவாஷ் முதலிய பானங்கள் தயாரிக்கலாம். காய்களிலிருந்து காடி தயாரிக்கலாம். இந்தக் காடி, நறுமணமும் சுவையும் உடையதாக இருக்கும். நாவல் பழக்கொட்டையில், புரதமும் கால்சியமும் அதிக அளவில் உள்ளன. டஸ்ஸார் பட்டுப்புழு வளர்க்க, இதன் தழை பயனாகும். பாலுடன் பட்டைச் சாறைக் கலந்து உட்கொண்டால் வயிற்றுப்போக்கு நீங்கும். வைட்டமீன் ‘சி’ பற்றாக்குறையை நீக்கும். மண்ணீரல் வீக்கத்திற்கும் மருந்தாகும்.