பலா மரம்

முனைவர் கு.க.கவிதா,
உதவிப் பேராசிரியர்,
சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

தமிழ் மக்களின் ‘முக்கனிகளில்’ ஒன்றெனப் பெருமையுடைய பலா, ருசி மிக்கக் கனிகளைத் தருவதுடன் ஆடுகளைக் கொழுக்க வைக்கும் தழை. இசைக் கருவிகளுக்கான மரம், கறியாகச் சமைத்திடப் பிஞ்சு மற்றும் விதை, மருத்துவப் பயனுடைய பல்வேறு பகுதிகள் ஆகிய அனைத்தையும் உடையது.
பலாமரம்

தாவரவியல் பெயர் : ஆர்டோகார்பஸ் ஹெட்டிரோஃபில்லஸ் (Artocarpus heterophyllus Lam.)
தாவரக் குடும்பர்ம் : மோரேசி (Moraceae)

பலாவின் தாயகம் இந்தியாவாகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் 1200 மீட்டர் உயரம் வரையுள்ள பசுமை மாறாக் காடுகளில் காணப்படும் மரமாகும். வடக்கே அஸ்ஸாமிலும் பீகாரிலும் அதிகமாக உள்ளன.

பலா ஒரு பசுமை மாறா மரம் வறண்ட இடங்களிலும் கூட, முழுமையாக இலையுதிர்த்திடாது. ஓங்கி உயர்ந்து 10-20 மீட்டர் வரை வளரக்கூடியது. ஈரச் செழிப்புள்ள மணற்பாங்கான நிலங்களிலும் மலைச் சரிவுகளிலும் உயர்ந்து வளரும்.

பயன்கள் :

தழை கால்நடைகளுக்குத் தீவனமாகும். இலைகளில் ஸைகிளோ ஆர்பினோன் ஸைகிளோ ஆர்பினோன், ஸைகிளோ ஆர்டநோல், பீடாஸ் பிரோஸ் பிரால், டானின்கள் ஆகியவை உள்ளன. பலாப்பிஞ்சு காய்கறியாகச் சமைத்து உண்ணலாம். காய்களில் உள்ள பாலில் ஸைக்ளோ ஆர்பினோன், ஸைக்ளோ ஆர்டனால், பீடா சிடோஸ்டிரால், ப்யூடிரோஸ்பெர்மால் மற்றும் பல அமினோ அமிலங்கள் உள்ளன.

பலாக்கனியில் 29% அளவில் உண்ணக்கூடிய சுளைப் பகுதி 12% அளவில் விதை 59% அளவில் மேல் தோலுடன் கூடிய சக்கைப் பகுதி ஆகியவை உள்ளன. பலாச் சுளைகளை நேரடியாக உண்பதுடன் சிரப், ஜாம், ஜெல்லி முதலியனவும் செய்திடலாம்.

பலாத் தோல்ச் சக்கையும் பயனுடையதே. இதிலிருந்து 0.03% நறுமணமுடைய உலர்தைலம் தயாரிக்கலாம்.

பலாக்கொட்டை நல்லதொரு உணவாகும். மலைவாசிகள் கொட்டையை மாவாக்கி உண்பர்.

பலாவின் காயிலிருந்தும் மரத்திலிருந்தும் பால் எடுக்கலாம். மரத்துப் பாலிற்கு பாக்டீரியக் கிருமிகளைத் தடுக்கும் திறன் உள்ளது. அதிலும் குச்சிகளின் பாலில் இத்திறன் நான்கு மடங்காக உள்ளது.

வேரில் பீடா- ஸ்டிரோஸ்பிரால், அர்சோலிக் அமிலம் (ursolicacid), பெடுலினிக் அமிலம், ஸைகிளோ ஆர்பினோன், ஆர்டோஃபிளேவானோன் உள்ளது. வயதான மரங்களின் வேர்களைக் கொண்டு படச் சட்டங்கள் தயாரிக்கின்றனர்.

மரம் வீணை, தம்புரா முதலிய இசைக் கருவிகள் செய்ய மிகவும் ஏற்றது. மேஜை, நாற்காலிகள் செய்ய மஹோ கனியைப் போன்று சிறந்ததாகும். கட்டிடச் சாமான்கள் செய்யலாம்.

காபித்தோட்டங்களில் நிழல் மரமாகப் பயிரிட ஏற்றதாகும்.