பனை மரம்

முனைவர் கு.க.கவிதா,
உதவிப் பேராசிரியர்,
சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

தொன்றுதொட்டு ஓலைச் சுவடிகளிலே அறிவுக் களஞ்சியத்தைச் சுமந்து கொடுத்துவிட்டு இன்று பரிதாபமாக மறைந்து வருகிறது பனை. உள்ளூர் அருமைகளை பயன்படுத்தாத சோம்பேறித்தனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு பனை. 10 சதுர மீட்டர் இடத்திலே, ஆண்டிற்கு 180 லிட்டர் அருமையான பதனீர், 10 ஓலைகள், 1.14 கிலோ தும்பு, 2.27 கிலோ ஈர்க்கும், 6 கிலோ எரிதுரும்பு, 20 நார்கள் என ஈந்திடும் பனை. இது பொங்கலுக்குக் கிழங்கும், கோடைக்கு நுங்கும், போதைக்குக் கள்ளும் தரும். சிறிது உழைத்தால் 24 கிலோ கருப்பட்டியும் பெறலாம். அல்லது 16 கிலோ சீனி எடுக்கலாம். பாசனமளிக்காமலே கரும்பு தரும் அளவிற்குச் சர்க்கரையும் கிடைக்கும். முற்றிய மரம், வீடு கட்ட உதவிடும். வீட்டை செப்பனிட ஓலையும் கிடைக்கும். மணலிலே ஓடையுடன் இணைந்து, ஆடு வளர்க்கவும் வாய்ப்பு தரும். எனினும் மரத்தை வெட்டுவதிலுள்ள தீவிரம் நடுவதில் இல்லை. மரத்தைப் பயன்படுத்துவதிலுள்ள வாணிபத் தீவிரம், வளர்க்கும் ஆராய்ச்சியில் இல்லை. பனங்குடி, பஞ்சாவடி, பனை மரத்துப்பட்டி என்ற பெயர்கள் மட்டும் நிலைத்துள்ளனவே தவிர பனை மரங்கள் வெட்டப்பட்டு, மறைந்து வருகின்றன.
பனைமரம்
இதன் தாவரவியல் பெயர் பொராசஸ் ஃபிளாபலிபர் (Borassus flabelifer L.). தாவரக் குடும்பம் பாமே. பனையின் தாயகம் அயன ஆப்ரிக்கப் பகுதியாகும். அங்கிருந்து இந்தியா, பர்மா, ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்தியாவில் தக்காணம், பீகார், வங்காளம், ஆகிய பகுதிகளில் அதிகமாக உள்ளன. கடற்கரையோரங்கள் எங்கும் மிகுதியாக அடர்ந்து வளருகின்றன. பனை கிளைகள் இன்றி, செங்குத்தான அடி மரத்துடன் 30 மீட்டர் உயரமும் 1.0-2.1 மீட்டர் சுற்றளவுக்குப் படர்ந்த ஓலைகளுடன் வளரக்கூடியது. பனை ஒரு பால் தன்மையுடையது, ஆண் பனைகளும், பெண் பனைகளும் தனித்தனியானவை.

பயன்கள் :

ஓலையைக் கொண்டு காகிதமும், அச்சிடும் முறையும் உருவாவதற்கு முன் ஓலைகளின் தான் எழுத்தாணி கொண்டு எழுத்துக்களைப் பொறித்து வந்தனர்.

முற்றிய ஓலைகளைக் கொண்டு கூரை வேயப்படுகிறது. குருத்தோலை ஈர்க்குகளைக் கொண்டு முறம், தட்டு செய்யப்படும்.

மட்டையின் குவிந்த கடினப் பகுதியிலிருந்தும், மேலாக உரித்து, புறனி நார் பெறுவர். நார் எடுத்த பின் எஞ்சிய பகுதியைக் காகிதம் செய்யப் பயன்படுத்தலாம்.

இம்மரத்திலிருந்து எடுக்கப்படும் பதநீர் மெலிந்தோருக்குச் சிறந்த மருந்தாகும். பத நீரிலிருந்து வெல்லம் எடுக்கலாம். பனைவெல்லம் மருத்துவக் குணம் கொண்டது. பனங்கற்கண்டு சித்த மருத்துவத்தில் அதிக அளவு பயன்படுகிறது.

நோக்கீட்டு நூல் :

‘வளம் தரும் மரங்கள்’ பி.எஸ்.மணி மற்றும் கமலா நாகராஜன், நியு செஙசுரி புக் ஹவுஸ், சென்னை (1992).