கையுறைப் பாவைக் கூத்து்

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

பொம்மைக் கூட்டில் கையை நுழைத்து பொம்மையை ஆட்டி நிகழ்த்தப்படும் கலை ‘கையுறைப் பாவைக் கூத்து’ ஆகும். பொம்மைக் கூட்டில் வலது கையை நுழைத்து, பொம்மையின் இரு கைகளிலும் பெருவிரலையும், நடுவிரலையும் நுழைத்தும், பொம்மையின் தலையில் ஆட்காட்டி விரலை நுழைத்தும் பொம்மையை இயக்குவது இதன் செய்முறை.

இரு நிலைகளில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. ஒரே நேரத்தில் ஒருவர் தன் இரு கைகளாலும் பொம்மயை அசைப்பதும், இருவர் அல்லது மூன்று பேர் கைகளில் பொம்மையை வைத்து இயக்குவதுமாக இக்கலை நிகழ்த்தப்படுகிறது. பொம்மலாட்டக் கலையைப் போன்றே திரைச் சீலையின் மேல் பகுதியிலேயே பொம்மைகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பொம்மைகள் கைகளும், தலையும் அசையும்படி அமைக்கப்பட்டிருக்கும், இயக்குபவரின் கைகள் வெளியே தெரியாமல் துணிப்பாவாடை பொம்மையுடன் இணைக்கப்பட்டிக்கும் இதன் பின்னணி இசைக்கருவிகள் மிருதங்கம், ஜால்ரா போன்றவையாகும்.

இது புரட்டாசி, சித்திரை, வைகாசி மாதங்களில் சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது. பொம்மையை இயக்குபவரே கதையின் பகுதிகளைப் பேசுகிறார். சிறுவர்களின் ரசனை மற்றும் விருப்பத்திற்கேற்ற கதைகளே இக்கூத்தின் பாடுப்பொருளாக உள்ளன. இக்கலையை நிகழ்த்துவதற்கென்று தனி குழுக்கள் ஏதுமில்லை. இக்கலை குறித்த சரியான வரலாறு கிடைக்கவில்லை. மேலும் இக்கலையானது மூன்று தலைமுறைகளுக்கு முற்பட்டது என்றும் கூறுவர்.

இக்கலையானது நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறைக்கு வடக்கே உள்ள பகுதிகளில் நிகழ்கிறது. அருவாப்பாடி என்ற ஊரில் இது மூன்று தலைமுறையாக நிகழ்த்தப்படுகிறது.