களரி்

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

பழமையான வீரவிளையாட்டுகளுள் களரி விளையாட்டும் ஒன்று. இதனை அடி முறை என்றும் கூறுவர். ஆயுதம் இல்லாமல் உடம்பின் குறிப்பிட்ட பகுதியைத் தட்டிச் செயலிழக்கச் செய்வதோடு வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு, கண்ட கோடாலி மழு போன்ற ஆயுதங்களையும் இக்கலையில் பயன்படுத்துவது உண்டு.

இக்கலையானது கன்னியாகுமரி மாவட்டத்திலும் பழங்காலம் முதல் இருந்து வருகிறது.கமரி மாவட்டத்திலும் கேரளப் பகுதியிலும் வழக்கில் உள்ளது. வட களரி, தெக்கன் களரி எனக் களரி இரு வகைப்படும். ‘வடகளரி’யைப் பரசுராமரும், ‘தெக்கன் களரி’யை அகத்தியரும் உருவாக்கியுள்ளார்கள் என்ற மரபுவழிச் செய்தி உள்ளது. சிறந்த வீரர்களைத் தேர்வு செய்யும் இடங்களாக்க் களரி பயிற்சி நிலையங்கள் விளங்குகின்றன.

களரிப் பயிற்சியில் மல்யுத்தம், வாள் பயிற்சி, சிலம்பம் போன்ற கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மிருகங்களுடன் போரிடக் கற்றுத் தரும் கலையும் களரியாகும். இதற்குச் சிறப்பான முன் கர்ணம், பின் கர்ணம், வலங்கர்ணம், கர்ண கர்ணம் ஆகிய பயிற்சிகள் தரப்படுகின்றன. பண்டைய சேர நாடாகிய கேரளத்தின் பாறைச் சாலை, நெய்யாற்றங்கரை, நாலு கட்டு, பூவாறு, ஐராணி முட்டம், வெள்ளாயினி முதலிய ஊர்களில் சேர மன்னர்களின் களரிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. களரிப் பயிற்சி கூடம் சதுரம், வட்டம், கோள வடிவங்களில் இருக்கும்.

42 அடி நீளமும், 21 அடி அகலமும் நான்கு புறமும் சுவரும், சமதரையில் கீழ் இடுப்பளவு ஆழத்திலும் அமைந்துள்ளது.

சதுர களரி

மாலை வெயில் உட்புகாதபடி அமைந்திருக்கும். தென்மேற்கு மூலையில் முறையே சிவசங்கற்ப ஏழு படிகளும், நாகம், அனுமன், பிள்ளையார் ஆகிய கடவுள் சிலைகளும் இருக்கும். களரி பத்ரகாளி சிலையும், குரு கிழக்கு முகமாகவும், மாணவர் மேற்கு முகமாகவும் பயிற்சி செய்வார்கள்.

களரிப் பயிற்சியின் போது உடம்பில் எண்ணெய் தேய்த்துக் கொள்வார்கள். இடுப்பு உடை அணிந்தும் கச்சை கட்டும் முறையானது 27 அடி நீளத் துணியை இடுப்பில் அணிந்து பல முறைகளில் சுற்றிப் பயிற்சி செய்வார்கள்.

களரி வீரர்கள் பயிற்சியின் போது தெய்வம் மற்றும் ஆயுதத்தை வணங்குவார்கள். இவர்கள் உடலை வளைத்தும், நெளித்தும், பயந்தும், வணங்கும் முறை கடினமானதாகவும் நெகிழ்வூட்டுவதாகவும் அமைந்திருக்கும்.

களரியின் தொடக்கம் உடற்பயிற்சி செய்வதாகும். கடல் நீர், கடும் குளிர், கடும் வெயில், முட்புதர், மரங்களின் மேல் ஆகிய இடங்களிலும் பயிற்சி நிகழும். மேலும் கடும் பட்டினியோடும் நன்றாக உணவருந்திய நிலையிலும் பயிற்சி நடத்தப்படும்.

களரிப் பயிற்சியில் வந்தனம், மெய்ப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி, முச்சாண், கதாயுதம், ஒற்றைக் கடாரி, வாள் கேடயம், குந்தம், நெடுவடி, உறுமி, வெறுங்கை முறை, ஆள் மாறாட்டம், வியூகங்கள் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

களரியில் மழு, ஈட்டி, கத்தி, இடி கட்டை, அருவாள், தீப்பந்தம் போன்ற ஆயுதங்களை முறைப்படி உபயோகிக்கவும் அவற்றை ஆயுதங்களாகவோ, வெறும் கையாகவோ தடுக்கவும் வீழ்த்தவும் பயிற்சி அளிக்கப்படுகின்றது.

களரியில் வைத்தியம் என்பதும் ஒரு பயிற்சியாக அமையும் களரிப் பயிற்சியில் உடம்பில் ஏற்படும் வெட்டு, குத்து, எலும்புச் சதை முறிவு, வர்ம வீழ்ச்சி ஆகியவற்றிற்கான மூலிகைச் சிகிச்சை, தடவு முறைகளுக்கு இணையான வைத்தியம் இல்லை. போர் முறையினைக் கற்று வைத்தியம் கற்காத ஒருவரை ஆசான் அல்லது குருவாக ஏற்றுக் கொள்வதில்லை.

மேலும் களரிக்கும் கராத்தே, மல்யுத்தம் சண்டைக்கும் தொடர்புண்டு. ஐப்பானிய மல்யுத்தத்தின் சுவடுகள் களரியில் இருக்கின்றன என்ற கருத்தும் உள்ளது.

சேர மன்னன் மார்த்தாண்ட வர்மாவின் நண்பனாகத் திகழ்ந்தவன் அணருதன். அவன் பறக் கோட்டூர் களரியில் படித்தவன். பின்பு, அவன் திறமையினால் இக்களரி இயக்கம் தோன்றியது என்பது சுவடி வழி அறியமுடிகிறது.

இதனை,

“கண்ணனூர் தேசத்திலே

பறக் கோட்டூர் களரியிலே

படித்தவனப்பா அனந்தன்

நாட்டுக்கோர் நண்பனப்பா

நூற்றியெட்டுக் களரிகளும் அவன் திறமையினாலே

நிற்குதப்பா

நூற்றியெட்டு களரிகட்டும் அழைப்போ? எத்தவே

பெரியோர்க்கும் மதியோர்க்கும்

ஓலை எத்தவே”

என்று சுவடிப்பதிவு செய்கிறது.