கோலாட்டம்

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

கோல்களைக் கையில் பிடித்து ஆண்களும் பெண்களும் தனித்தனியாகவோ ஒருங்கிணைந்தோ அடித்து ஆடும் ஆட்டம் கோலாட்டம் எனப்படும். கோலாட்டம் அலங்கரிக்கப்பட்ட கோல்களைக் கொண்டு கோலாகலமாக ஆடப்படும் ஆட்டமாகும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக இது குறிப்பிடப்படுவது குமரி மாவட்ட பகுதிகளில் களியல், களியலாட்டம் எனவும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் கிட்டியடித்தல் அல்லது கிட்டியாட்டம் எனவும், ஆண்கள் ஆடும் ஆட்டம் வைந்தானை ஆட்டம் என திருச்சி மாவட்டப் பகுதிகளிலும் ஈழத்தில் வசந்தன் கூத்து என்றும் பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகின்றது. எனினும் கோலாட்டம் என்னும் சொல்லே பரவலாக அறியப்படுகிறது.

கோலாட்டம் உருவானது தொடர்பான பல புராண கதைகள் உள்ளன. பொதுவாக பெண்களுக்கான ஆட்டமாக இருக்கும் கோலாட்டம் தற்பொழுது ஆண் பெண் இருபாலரும் இணைந்து ஆடும் ஆட்டமாக உள்ளது. கோலாட்டத்துக்கென்று பாடல்கள் உள்ளன. தொடக்கத்தில் பொதுவாகத் தொடங்கும் இசையும் ஆட்டமும் பாடலின் முடிவில் துரிதகதியுடன் முடிவுறும். கண்ணன் பிறந்த நாளில் (கிருஷ்ண ஜெயந்தி) அன்று கோலாட்டம் ஆடுவது சடங்கியல் வழக்கமாகப் பல இடங்களில் நிகழ்கின்றது.

கோலாட்டம் பின்னல் கோலாட்டம், கோலாட்டக் கும்மி என மூன்று வகையான கோலாட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. கோலாட்டத்தில் ஆடுவோரின் எண்ணிக்கை வரையறை எதுவுமில்லை ஆயினும் எட்டு முதல் பன்னிரண்டு பேர் ஆடுவது சிறப்பாக இருக்கும். ஆடுவோரைத் தவிர, பாடுபவர், இசைக்கலைஞர்கள் என எண்ணிக்கை நிகழ்வு இடத்தைப் பொறுத்து மாறுபடும்.

ஒத்த வயது மற்றும் உயரம் உள்ளவர்கள் ஒருங்கிணைந்து ஆடுதல் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தின் காரணமாகத் தொழிற்முறைக் குழுக்கள் தங்களுக்குள் மேற்சொன்னவாறு குழுவாகப் பிரிகின்றனர்.

கோலாட்டத்தில் ஈடுபடுவோர் பெரிய அளவில் ஒப்பனை எதுவும் செய்து கொள்வதில்லை. ஆண்கள் வேட்டி, சட்டை அணிந்தும், தலையில் ரிப்பன் கட்டியும் ஆடுகின்றனர். பெண்களும் வழக்கமான உடையுடன் கோலாட்டம் ஆடுகின்றனர். ஆனால், தொழிற்முறைக் கலைஞர்கள் குழு ஆட்டம் ஆடும் போது ஒரே நிறத்தில் உடையைத் தேர்வு செய்து அணிந்து கோலாட்டம் நிகழ்த்துகின்றனர்.

கோலாட்டம் நிகழ்த்துவதற்கான கோல் அளவாலும், உருவாக்கப்படும் முறையாலும் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது. தச்சு வேலைப்பாடு உடைய வண்ணம் தீட்டப்பட்ட பித்தளை பூண் மாட்டி மணிகள் கோர்த்து அலங்கரிக்கப்பட்ட கம்புகளுடன் ஆடிய கோலாட்டம் இன்று கிடைக்கும் கம்புகளைக் கொண்டு ஆடப்படுகிறது. சில இடங்களில் இரு கோல்களுக்கும் பதிலாக ஒரு கையில் மட்டும் கோலைக் கொண்டு ஆடும் ஆட்டமும் நிகழ்கின்றது.

கோலாட்டத்தில் இசைக்கருவிகளின் பயன்பாடு அதிகம். ஆனால் இசைக்கருவிகள் கோலாட்டம் நிகழும் இடத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. ஆர்மோனியம், மத்தளம், ஜால்ரா, பேண்டு வாத்தியம், குந்தளம், தவில் போன்ற இசைக்கருவிகள் பயன்படுகின்றன.

கோலாட்டத்தில் பாடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிலும் கண்ணன் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் இலக்கியப் பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், கதைப்பாடல்கள், தெம்மாங்கு, பள்ளு, காவடிச்சிந்து, கும்மி, மாரடிப்பாடல், திரையிசைப் பாடல்கள் எனப் பல்வேறு வகைப்பட்ட பாடல்கள் கோலாட்டத்தில் பயன்படுகின்றன.

ஆட்ட அடவுகளில் பல சிக்கலான அடிவைப்பு முறைகள் காணப்பட்டாலும் மின்னல் வேகத்தில் அவர்கள் மாறி மாறித் தடுமாற்றமின்றி ஆடுவது சிறப்பு. பின்னல் கோலாட்டம் என்ற நுட்பமான ஆட்ட வகையும் தமிழகத்தில் உண்டு. இந்த ஆட்டத்தில் உயரத்தில் கட்டப்பட்ட வண்ணத் துணிப் பட்டைகளின் ஒரு நுனி கோலாட்டம் ஆடுபவர் கையில் இருக்கும். ஆட்டக்காரர்கள் ஆடிக் கொண்டே பின்னலைப் போடுவதும் பின்னர் அவர்களே ஆடியவாறு அதனைச் சிக்கல் இல்லாமல் பிரித்து விடுவிப்பதும் இதன் சிறப்பாகும். இதில் சிறு பிழை ஏற்பட்டாலும் பின்னலில் சிக்கல் விழுந்துவிடும் என்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறு ஆடும் பின்னல் ஆட்டத்தில் இருப்பத்தியொரு பின்னல் கோலாட்ட முறைகள் உள்ளன.

கோலாட்டம் தற்கால நிலையில் அரசு விழாக்கள், பள்ளி, கல்லூரி விழாக்கள் திருவிழாக்கள் எனப் பல்வேறுபட்ட இடங்களில் பலதரப்பு மக்களாலும் விரும்பி ஆடப்படும் ஆட்டமாக அமைந்துள்ளது.