குறவன் குறத்தி ஆட்டம்

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

ஆடற்கலை என்பது தமிழக மக்களின் உணர்வுடன் கலந்த கலைத்துவத்தின் வெளிப்பாடு. ஆடற்கலையில் வல்லவன் சிவன். படித்தவர் முதல் பாமரர் வரை பொழுதுபோக்காகவும், உழைத்த களைப்பு தெரியாமல் புத்துணர்வு பெறவும் ஆடற்கலையை அனைவரும் விரும்பிப் போற்றினார்கள்.

குறவஞ்சி என்னும் சொல்லுக்குக் குறப்பெண் என்பது பொருளாகும். மலைவாணர் குறவர் எனப்பட்டனர். கடவுள் அல்லது தலைவன் உலாவர அவரைக் கண்ட ஏழு வகை பெண்கள் காதல் கொள்ளுதல், பேரிளம்பெண், தெரிவை, அரிவை, மடந்தை, மங்கை, பெதும்பை, பேதை, காதலால் உந்தப்பட்டு வருந்தும் நிலையில் அப்பெண்ணின் கையைப் பார்த்து குறி கூறுவதாக அமைந்த பகுதியே சிறந்ததாகும்.

நாட்டு மக்களின் பண்பாடு, பழக்கவழக்கம், குணச் சிறப்பு, உள்ளக்கருத்து, கலை, வாழ்க்கை முறை முதலியவற்றை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

குறவஞ்சி நாடகத்தில் மலைவாழ் குறவர்கள் குறி சொல்லுதல், பச்சைக் குத்துதல் போன்ற கலைகளை அறிந்திருந்தார்கள்.

“இறப்பு நிகழ்வெதி ரென்னும் முக்காலமும்

திறப்பட வுறைப்பது குறத்திப் பாட்டே”

எனப் பன்னிரு பாட்டியல் விளக்குகிறது.

குறம், குறத்திப்பாட்டு போன்றவை குறவஞ்சி நாடகத்தின் முன்னோடி ஆகும். குறமக்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பறை, குரவை, அம்மானை, பந்து, கழங்காடல் போன்றவற்றைக் காணலாம். குறி சொல்லும் பெண்களை “கட்டுவிச்சி” என்றும் “அகவன் மகள்” என்றும் கூறுவர். ஆண்களை “வேலன்” என்றும் கூறுவர்.

குறவஞ்சி இலக்கியங்களிலே மிகச் சிறந்தது. குற்றாலகுறவஞ்சி ஆகும். நாட்டுப்புற பாடல் வகையில் அமைந்ததாகும். குறத்தி மலைவளம் பற்றிக் கூறுவதைக் காண்போம்.

“ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்

ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்

வாடக் காண்பது மின்னார் மருங்கல்

வருந்தக் காண்பது சூல் உடை சங்கு

போடக் காண்பது பூமியில் வித்து

புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து

தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி

திருக்குற்றாலர் தென் ஆரிய நாடே”

குறவன் குறத்தி ஆடை அணிகலன்களில் வேறுபட்டு காணப்படுகிறார்கள். பாசிமணி, பவளமணி, வெள்ளி மணி, கருகமணி ஆகிய அணிகலன்களை அணிந்திருப்பார்கள். அனைவரையும் கவரும் வகையில் பேச்சாற்றலைப் பெற்றிருப்பார்கள். பேசிக் கொண்டே ஆடவும் செய்வார்கள். கையில் பழைய தகர டப்பாவினை வைத்துக் கொண்டு பாடலுக்கேற்ப ஓசையை எழுப்புவார்கள். குறவன் குறத்தியின் வாழ்க்கை முறையைப் பற்றி குறிப்பிடப்படுகிறது.

“கொழுகொடியின் விழுந்த வள்ளிக்கிழங்கு கல்லியெடுப்போம்

குறிஞ்சிமலர் தெரிந்து முல்லைக் கொடியில் வைத்துத் தொடுப்போம்

பழம் பிழிந்த கொழுஞ்சாறும் தேறலும் வாய் மடுப்போம்

பசுந்தழையும் மரவுரியும் இசைத்திடவே உடுப்போம்

செழுந்தினையும் நறுந்தேனும் விருந்தருந்தக் கொடுப்போம்

சினவேங்கைப் புலித்தோலின் பாயலிற்கண் படுப்போம்

எழுந்து கயற் கணிகாலில் விழுந்து வினை கெடுப்போம்

எங்கள் குறக்குடிக் கடுத்த இயல்பிது காண் அம்மே!”

என்ற பாடல் மூலம் அவர்களின் வாழ்க்கை நிலையினை அறியமுடிகிறது.

குறி கூறுவதற்கு முன்னர் இறைவனை வணங்குவர். அப்போது இறைவனுக்கு இஷ்டமான பொருட்களைப் படைத்து வழிபாடு செய்வர்.தரையில் மெழுகு கோலம் போட்டு குறியை முறையாகப் பெறுவதற்கு மஞ்சளில் பிள்ளையார் உருவத்தைப் பிடித்து வைத்து நிறைகுடம் எடுத்துவைத்து வாழை, மா, பலாப்பழங்களைப் பரப்பி வைக்கவும், தேங்காயும் உடைத்து வைப்பாயாக! அறுகம்புல்லும் தண்ணீரும் விளக்கும் கொண்டு வந்து வைப்பாயாக. பாக்கு, வெற்றிலை, வடை, அப்பம், அவல், கடலை, சர்க்கரை, எள்ளுருண்டை, பொரி இவற்றையும் வைப்பாயாக. கடவுளையும் கை குவித்து வணங்கவாயாக. அம்மா, இதன் குறியின் தன்மையை அறிந்து கொள்வாயாக. குலத்தெய்வத்தையும் வேண்டிக் கொள்வாயாக என்று கூறி, குறி சொல்லுதல் பலிக்கும் வகையில் இவையெல்லாம் முதற்கடமையாக்க் கொள்ள வேண்டும் என்று விளக்குவார்கள்.

குறவன் குறத்தியைக் காணாமல் தேடிச் செல்லுதல் ,

“கிங்கிணியைக் காணேனே!

என் வங்கணச் சிங்கியைக் காணேனே!”

என்று பாடிக் கொண்டு செல்கிறான். பலவகை அணிகலன்களை அணிந்து எதிரே வரும் குறத்தியை அவனால் அடையாளம் காணமுடியவில்லை. அவள் நான் தான் குறத்தி என்று கூற, அவள் உயர் வகை அணிகலனை எப்படி அணிந்தாள் என்று அவளை அடிக்க முயலும் போது, தான் பாடி பரிசு பெற்ற செய்தியைக் குறத்தி கூறியவுடன் குறவன் மகிழ்கிறான்.

கற்பு நிலையில் குறத்தி சிறப்பிடம் பெறுகிறாள் குறவன் முதலில் ஐயம் கொள்ளுதல், சினம் கொண்டு பேசுதல், பின்னர் தெளிவு பெறுதல், இன்பமாக்க் கூடி வாழ்தல் ஆகியவை அவர்களின் வாழ்வு நிலையில் சிறப்பிடம் பெறுகின்றன.

இக்காலத்தில் ஊசி, பாசி, மணி போன்றவற்றை விற்றுக் கொண்டு நாடோடியாய் திரிபவர்களைக் குறவன் குறத்தி என்கிறோம். அவர்களின் அனைத்துச் செயல்களும் நம்மவர்களைக் கவர்ந்திருக்கின்றன. அவர்களின் உடை அணிந்து கல்லூரி திருவிழாக்கள் போன்றவற்றில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இன்று குறவன் குறத்தி நடனம் இல்லாத கல்லூரி விழாவே இல்லை. ஒருவன் குறவனாகவும், மற்றொருவன் குறத்தியாகவும் வேடமிட்டு நடனமாடுதல் உண்டு. இவர்கள் உடலை நெளித்து நெளித்து ஆடுவது பார்ப்போருக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. பாடலைப் பாடிக் கொண்டே ஆடுவார்கள்.

நையாண்டி மேளம், உருமி மேளம் போன்ற இசைக்கருவிகள் மேலும் நடனத்தை அழகுறச் செய்கின்றன.

இக்காலத்தில் பரதம் கற்ற கலைஞர்களும், குறவன் குறத்தி வேடமிட்டுப் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் செய்கிறார்கள். திரைப்பட பாடலான,

“நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க”

அவர்களின் தனித்துவத்தினை அனைவரும் கண்டு மகிழும் வண்ணம் அழகாகக் காணப்படுகிறது.

நாட்டுப்புற விழாக்களிலும், அரசியல் கலாச்சார ஊர்வலங்களிலும் கரகாட்டம் மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளுடன் குறவன் குறத்தி வேடமிட்டு ஆடப்பட்டு வருகின்றது. குறவன், குறத்திப் பாடலும், பேசும் உரையாடல்களும், குறத்தி உடனிசைக்கும் இசைக்கலைஞர்களுடனும் பேசும் உரையாடல்களும் பாலியல் சார்ந்தவைகளாக இருக்கும். பார்வையாளர்கள் கேட்டு மகிழ்ந்து பரிசும் அளிப்பர்.

முழு நேரக் கலையாக இல்லாமல் இடைவெளி விட்டு நிகழ்த்தக்கூடிய கலையாக மக்கள் விரும்பக்கூடியதாக நிகழ்ந்து வருகின்றது.