இராசா ராணி ஆட்டம்

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

ராஜாவும், ராணியுமாக கலைஞர்கள் நடிப்பதால் இது ராசா ராணி ஆட்டமாகும். தற்பொழுது இக்கலை வழக்கிழந்து வருகிறது.

மேலும் இக்கலை தஞ்சை மாவட்டப் பகுதியில் மட்டுமே நிகழ்த்தப்பெற்றது. கரகாட்டத்தில் துணை ஆட்டமாக இவ்வாட்டம் உள்ளது. ஆதலால் இதில் கரகாட்டப் பெண்கள், நையாண்டி மேளக் கலைஞர்கள் பங்கு கொள்கின்றனர்.

இவ்வாட்டத்தில் மூன்று கதைப் பாத்திரங்கள் உள்ளன.

1. இராஜா

2. இராணி

3. சேவகன்

இவர்கள் மூவரும் பேசி, பாடி மகிழ்ந்து நிகழ்த்துவதே இக்கலை இந்நிகழ்ச்சியில் உள்ள உரையாடல் பாலியல் தன்மை கொண்டதாக இருக்கும்.

ராணி பூப்பறிக்கச் செல்லும்போது ராஜா தோட்டத்திற்குச் சென்று ராணியுடன் பேசக் காத்திருப்பதும், ராணி தோழிகளுடன் பாடி ஆடும்பொழுது ராணியைச் சந்தித்து அவளுடன் வாதாடுவது போன்ற உரையாடல்கள் உள்ளன.

அதன் பின் திருமணம் செய்யும் நிகழ்ச்சிகள் அனைத்துமே பாடலும், உரையாடலுமாகவே இக்கலை நிகழ்த்தப்படுகின்றது.