செலாக்குத்து ஆட்டம்

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

உடம்பின் விலாப் பகுதியில் கம்பியைக் குத்திக் கொண்டு, ஒப்பனையுடன், இசைக் கருவிகளின் தாளத்திற்கேற்ப ஆடும் ஆட்டம் செலாக்குத்தாட்டம் என்பர். இவை விலாவில் கம்பியைக் குத்துவதால் இவைகளை லாக்குத்து மற்றும் செலாக்குத்து என்றும் கூறலாம். இந்த ஆட்டத்திற்கு ‘சிலாக்குத்தாட்டம்’, ‘தோல்குத்தாட்டம்’, ‘லாக்குத்தாட்டம்’ என்றும் கூறுவர்.

இக்கலையைப் புதுக்கோட்டை மாவட்டங்களில் மாரியம்மன் கோவில் விழாச் சடங்கு சார்ந்த கலையாகவும், மற்ற இடங்களில் சமூகப் பொழுதுபோக்குக் கலையாகவும் நிகழ்கிறது. இந்தக் கலைகள் ஊரின் எல்லாப் பகுதிகளுமே இதன் ஆடுகளம்தான். இக்கலை கோவில் விழாக்களில் பெரும்பாலும் காலை நேரங்களில் நிகழும்.

இக்கலையை ஆண்கள் மட்டுமே நிகழ்த்துகின்றனர். இக்கலையை நிகழ்த்தும் கலைஞர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் தக்கிப்பட்டி, கோவில்பட்டி, ஆண்டிப் பட்டி, திருவெட்பூர், வடசேரிப்பட்டி, பெருமாநாடு, பெருஞ்சுனை, அன்னவாசல், பசுமலைப்பட்டி, துடையூர், தொண்டைமான் நல்லூர், புத்தாம்பூர், பூங்குடி உச்சாணி ஆகிய ஊர்களில் வாழ்கின்றனர்.

இக்கலையைப் பெரும்பாலும் தலித் மக்களே நிகழ்த்துகின்றனர். முந்தைய காலங்களில் இந்த ஆட்டம் இசைக் கருவிகள் வைத்தே ஆடக்கூடியவை. இந்த நிலை மாறிவிட்டது. இந்த ஆட்டத்தின் இசைக் கருவி மகுடி, இது தவிர இரண்டு மேளம், இரண்டு தாசா, ஒரு தப்பு, ஒரு சத்தம் ஆகிய இசைக் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆட்டம் வழக்கில் இருப்பதற்கும் முக்கிய காரணமாக விளங்குவது இசைக்கருவிகளே என்று கூறலாம்.

இந்த ஆட்டத்திற்கென்று தனி ஒப்பனைகள் எதுவுமில்லை. இவை கலைஞர்களின் நிதி நிலைமையைப் பொறுத்து அமைகின்றன. இக்கலையை நடத்துபவர்கள் அடர்த்தியான நிறமுள்ள அரைக்கால் சட்டையும், பனியனும் அணிந்து கொள்கின்றனர். கழுத்தில் காகிதப்பூமாலை, காலில் சலங்கை, கையில் கைக்குட்டை எனக் காட்சி அளிப்பர். குழுத்தலைவராக இருப்பவர் வெள்ளை ஆடையை அணிகிறார். இவர் கழுத்தில் மலர் மாலையைச் சூடிக்கொள்வார்.

செலாக்குத்தாட்டம் கோவில் விழாவைச் சார்ந்த கலை. இக்கலை ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாக மாரியம்மனாக ஒரு கல்லை வைத்து, அதன் முன்னிலையில் ஒப்பனைப் பொருட்களை வைத்து சூடம் காட்டி வழிபடுகின்றனர். அப்போது பார்வையாளர்களும் மாரியம்மனை வழிபடுவர்.

ஆட்டத்தொடக்கம்

குழுவின் தலைவரான வாத்தியார் இனிப்பு கலந்த பச்சரிசியை அனைவருக்கும் வழங்குவார். வாத்தியார் வணங்கி சலங்கைகளை எடுத்து ஆட்டக்காரர்களின் கையில் கொடுப்பார். அப்போது பெண்கள் குரவையிடுவர். இதன் பிறகுதான் ஆட்டம் தொடங்கும்.

ஆட்டத் தொடக்கத்தில் இசைக் கருவிகளை ஒருசேர வாசிப்பார்கள். கலைஞர்கள் உடனே விலாவைக் குத்திக் கம்பியைப் பிணைக்கும் செயல் ஆரம்பமாகும். விலாவைக் குத்துக் கம்பி போட மண்டா என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துவார். இந்த ஆயுதம் ஈட்டி போன்று இருக்கும். இந்த ஆயுதத்தால் குத்துக் கம்பி போடும்போது பார்வையாளர்களும் ஒலி எழுப்புவர். கம்பி போட்ட பிறகு அந்த இடத்தில் விளக்கெண்ணெயைத் தடவுவர். பின் ஆடும்போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை விளக்கெண்ணெய் தடவுகின்றனர். இசைக் கருவிகளின் தாளத்திற்கேற்ப காலை எடுத்து முன்வைத்தும், சாய்ந்தும், உட்கார்ந்தும், நின்றும் ஆடுவர். இவ்வாறு விலாப் பகுதியில் உள்ள கம்பியுடன் 16 மணி நேரம் வரை ஆடுவார்கள்.

ஆட்ட அடவுகள்

செலாக்குத்து ஆட்டம் பதினோரு அடவு முறைகள் கொண்டது. இந்த அடவுகள் ஒன்றாம்படி, இரண்டாம்படி, மூன்றாம்படி, கிரக்கிப் போடுதல், ரோட்டாட்டம், கல்யாணச் சொல்லு, பெரலியாட்டம், தப்பாட்டம், பாரியாட்டம் மூணுகுத்தாட்டம், நடையாட்டம் எனப் பெயர் பெறுகின்றன. இந்த ஆட்டங்களில் உட்கார்ந்து ஆடுவது, நின்று ஆடுவது, ஓடி ஆடுவது, சுற்றி ஆடுவது முதலிய ஆட்ட வகைகள் முக்கியமானவை.

ஆட்டம் முடிவு நிலையில் கலைஞர்கள் மாரியம்மன் கோவிலுக்கு வருகின்றனர். அம்மனை வணங்குகின்றனர். இந்த நேரத்தில் வாத்தியார் கலைஞர்களின் விழாவிலுள்ள கம்பிகளைச் சுழற்றுவார். கம்பி செருகப்பட்ட இடத்தில் வெற்றிலையை வைத்து வெள்ளைத் துணியால் கட்டி விடுவர். பின் அம்மனுக்குப் பூசை நடக்கும்.

இக்கலையைப் பயில விரும்பும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வாத்தியார்களைத் தீர்மானிக்கின்றனர். இவரைச் செலாட்ட வாத்தியார் என அழைக்கின்றனர். இக்கலையை 25 வயத்ற்குள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நியதி உள்ளது. இக்கலையைப் பொதுவாக ஒரு மாத காலத்திற்குள் கற்றுக்கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இக்கலையை நிகழ்த்துவதற்கு முன்பு ஒருமுறை ஒத்திகை பார்க்க வேண்டும். ஒத்திகையின்போது கலைஞர்கள் விழாவில் கம்பி போடாமல் காலில் சலங்கை மட்டும் அணிந்து கொண்டு எல்லா அடவுகளையும் ஆடிப் பார்த்துக் கொள்கின்றனர்.

இன்றைய நிலையில் இக்கலை கோவில்களில் மட்டுமின்றி வேறு சமூகப் பொது விழாக்களிலும் அரசியல் கூட்டங்களிலும், ஊர்வலங்களிலும் வயதானவர்களின் இறப்பு சடங்கிலும் நிகழ்கிறது. இந்த இடங்களில் ஆடும்போது சடங்குக் கூறான விலாவில் கம்பி குத்தும் நிகழ்ச்சி இடம் பெறாது.