சேவை ஆட்டம்

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

ஆட்டக் கலைகள் என்பவை மக்களின் வாழ்க்கை நடத்தை முறைகளையும் தமிழ் மரபையும், மண்ணின் பண்பாட்டு வேர்களையும் வெளிப்படுத்தும் வாயில்களாக விளங்குகின்றன. மேலும் இவற்றினுடன் அவர்களின் சடங்கு, வழிபாட்டு நிலைகளைப் பின்னணியாகக் கொண்டு நிகழ்த்தப்படுகின்றன. ஆட்டம் ஆடப்படும் பண்பாட்டின் பல கூறுகளுள் ஒன்று. தனக்கென ஒரு தனித்தன்மையைக் கொண்டு உள்ளது. ஒரு குறிப்பிட்ட இனத்தவரால் மட்டுமே ஆடப்பெற்று வரும் ஆட்டக் கலையாகச் சேவையாட்டம் நிகழ்த்தப்படுகிறது.

சேவையாட்டம் பெயர்க்காரணம்

சேவையாட்டம், சேவாட்டலு, சேவையாட்டம், உறுமி, கோமாளியாட்டம், தாதராட்டம் என்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப் பெறுகின்றது. சேவை + ஆட்டம் = சேவையாட்டம். சேவை, சேவித்தல், தொண்டு செய்தல், வணங்குதல் என்ற பொருள்களைக் கொண்டதாகும். இறைவனைச் சேவிப்பதற்காக, வணங்குவதற்காக ஆடப்பெறும் ஆட்டம் என்ற பொருளில் இவ்வாட்டம் இப்பெயர் பெற்றுள்ளது.

சேவையாட்டத் தொன்மக் கதை

சிவபெருமான், கோபத்தில் பிரம்மனின் தலையைக் கிள்ளிவிட, பிரம்ம கபாலம் சிவனின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. இதன் காரணமாகச் சிவனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கின்றது. இதை அறிந்த மகாவிஷ்ணு தொப்பைக் கூத்தாடியாக (கோமாளி) வேடமிட்டு பாதி ஆணும், பாதி பெண்ணுமாக ஒப்பனை செய்த சிலரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பிரம்ம கபாலத்தின் முன்பு வேடிக்கை ஆட்டங்கள் ஆட சிரிப்புத் தாளாமல் பிரம்ம கபாலம் சிவனின் கையை விட்டு கீழே விழுகின்றது. சிவனுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்குகின்றது. இவ்வாறு சிவபெருமானுக்குச் சேவை செய்வதற்காக விஷ்ணுவால் ஆடப்பட்ட வேடிக்கை ஆட்டமே சேவையாட்டம் என்று கூறப்படுகின்றது.

கோமாளி ஒப்பனை

தலையில் நீண்டு, நுனியில் வளைந்த கூம்பு வடிவில் குல்லாய். தலையில் கொண்டை போட்டுப் பூ வைத்து, நெற்றியில் நாமம் போட்டுக் கண்ணைச் சுற்றிக் காவி மற்றும் வெள்ளை வண்ணக் கோடுகளும், கற்றாழை நாரினால் செய்யப்பட்ட நரைத்த மீசையும் தாடியும் வைத்துச் சோழிகள் கோர்க்கப்பட்ட பல் வரியையும் குஞ்சங்கள் வைத்துத் தைக்கப்பட்ட கறுப்பு நிற அல்லது நீல நிற தொளதொள சட்டையையும் நீளமான கால் சட்டையையும் தொப்பை வயிறையும் கொண்டிருப்பார்.

சேவையாட்டப் பாடல்கள்

பாடலை அடிப்படையாகக் கொண்டு ஆடப்படும் ஆட்டமாகச் சேவையாட்டம் திகழ்கின்றது. ‘சேவைப்பாட்டு’ என்றே இப்பாடல் அழைக்கப்படுகின்றது. பெருமாள் வழிபாட்டில் முக்கிய நிகழ்வாக இவ்வாட்டம் அமைவதால் பெருமாள் அவதாரப் பாடல்களும் இராமாயணக் கதைப்பாடல்களும் சிறப்பிடம் பெறுகின்றன. சேவையாட்டத் தொடக்கத்திலும் முடிவிலும் இந்தப் பாடல் தான் இடம்பெற வேண்டும் என்ற ஒழுங்குமுறை காணப்படுகின்றது. தமிழ், தெலுங்கு மொழியில் பாடப்படுகின்றன. மிகுதியான பாடல்கள் தெலுங்கு மொழியிலேயே பாடப்படுகின்றன.

சேவையாட்ட இசைக்கருவிகள்

தேவதுந்துபி, சேமப் பலகை, சேமக்கலம், சலங்கை, ஜால்ரா போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

சேவையாட்ட அமைப்பு

இசைக்கருவிகளின் செயல்பாடுகள் கொண்டு ஆட்ட அமைப்பு உருவாக்கப்படுகின்றது. இவ்வாட்டம் ஒரு கதை வாயிலாக இணைக்கப்படுகின்றது. அது இராமாயணக் கதை ஆகும். கோமாளிப் பாடல், பாடலுக்கேற்ற தாளம் இவற்றுடன் கூடிய ஆட்டமுமாக இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகின்றது.

சேவையாட்டம் தொடங்கும் முன் அனைத்துக் கலைஞர்களும் வரிசையாக நிற்கின்றனர். தொடக்க நிலையில் ஒருவர் கலப்பட நீர் தெளித்துச் சாம்பிராணி புகை காட்டி ஆட்டக்காரர்களின் காலில் விழுகின்றார். இவர் பெரும்பாலும் ஊர் நாட்டாண்மையாக இருக்கிறார் எனலாம்.

சேவையாட்டக்காரர்களை மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்த்தச் செய்யப்படும் சடங்காக இது கருதப்படுகிறது.

தொடக்க வழிபாடு முடிந்தவுடன் ஆட்டக்காரர்கள் இசைக் கருவிகளைக் கோவிலின் முன்பு இசைத்துக் கொண்டே ஆடுகளத்திற்கு வருகின்றனர். கோமாளி ஆட்டத்தைத் தொடங்க ஏனைய அனைவரும் அவரைப் பின்பற்றி ஆடுகின்றனர். தொடக்க நிலையில் தேவத்துந்துபி இசைப்பு முறைக்கேற்பச் சில ஆட்டங்கள் ஆடப்படுகின்றன. சேவையாட்டம் நேர் வரிசையில் ஆடப்படுவதில்லை. இதன் அடவுகள் வட்டத்திலேயே ஆடப்படுகின்றன. தெய்வ வழிபாட்டின் போது மட்டுமே நேர் வரிசையில் ஆடப்படும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சேவையாட்டம், திருமாலுக்குச் செய்யும் சேவையாட்டமாக ஆடப்பட்டு வருகின்றது. இன்றைய நிலையில் விழாக்களில் பயிற்சிகளின்றி ஆடல், பாடல் முறைகள் குறைந்து ஆடப்பட்டு வருகின்றன. வைணவக் கோயில்களில் பிரிக்க முடியாத ஒன்றாக ஆடப்பட்டு வருகின்றது.