புலிவேடம்

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

புலி போன்று வேடமணிந்தவரும், வேட்டைக்காரர் போன்று வேடமணிந்து வரும் சேர்ந்து ஆடும் ஆட்டம் புலி ஆட்டமாகும். புலியைப் போன்று வேடம் புனைந்து கருவி இசைக்கேற்ப ஆடும் ஆட்டம் புலி ஆட்டம் என்று சுட்டப்படுகின்றது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புலிவேட நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. வேலூர் பகுதியில் புலிவேடமிட்டு குச்சி சுழற்றி விளையாடுவதைத் ‘தாளம்’ என்ற சொல்லால் சுட்டுகின்றனர். குமரி மாவட்டத்தில் பேச்சு வழக்கில் புலியைக் ‘கடுவா’ என்றும் புலியாட்டத்தின் ‘கடுவா ஆட்டம்’ என்றும் அழைக்கின்றனர். திண்டுக்கல், மதுரை, சேலம், வேலூர் போன்ற ஊர்களிலும் குறிப்பாக தஞ்சை பகுதியில் புலிவேடக் கலைஞர்கள் மிகுதியாக உள்ளனர்.

பொதுவாக இரண்டு பேர் புலிவேடம் ஆடுவர். ஒருவர் ஒப்பனையுடன் ஆடும்போது மற்றவர் ஒப்பனை ஏதுமின்றி ஆடுவதும் உண்டு. இருவரும் ஒப்பனையுடன் ஆடுவதும் உண்டு. ஒரே நேரத்தில் பலர் புலிவேடமிட்டாலும் ஆடும்போது இரண்டிரண்டு பேராக ஆடுவர். ஒருவர் ‘புலி’ என்றும், மற்றவர் ‘எதிர்ப்புலி’ என்றும் சுட்டப்படுகின்றனர். சில நேரங்களில் இரசிகர்களின் வேண்டுகோளுக்காகத் தனித்திறமையைக் காட்டத் தனித்து ஆடுவதும் உண்டு. ஆடுவோருக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.

முகம் முழுவதும் மஞ்சள் வண்ணத்தைப் பூசிக்கொள்கின்றனர். மூக்கின் கீழ்ப்பகுதியிலிருந்து தாடை வரை சிவப்பு வண்ணத்தைப் பூசிக்கொள்கின்றனர். அதனையொட்டி கருப்பு வண்ணத்தால் வெளிப்பகுதியில் கோடு போட்டுக் கொள்கின்றனர்.

தலையில் புலியின் வண்ணம் போல வரைந்த தோல் அல்லது தடித்த துணியால் செய்யப்பட்ட தொப்பியை அணிகின்றனர். இடுப்பில் துணியால் செய்யப்பட்ட வால் போன்ற அமைப்பின் மேல் புலி வண்ணம் பூசி கட்டிக் கொள்கின்றனர்.

இடுப்பில் ஜட்டி அணிந்து அதன்மேல் லங்கோடு கட்டி, அதில் வால் கட்டப்படும். தலைத் தொப்பியில் காதுகள் வைக்கப்பட்டிருக்கும். இது சாதாரணமாகப் புலி வேடமிடும் முறையாகும். மேலும், இராசாங்கப்புலி வேடமிட்டு ஆடுதல் இம்முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டு காணப்படும்.

புலிவேட ஒப்பனை செய்வதில் உள்ள சிரமங்களை மனதில் கொண்டு புலிபோல் வரையப்பட்ட துணிகளை அணிந்துக் கொண்டு ஆடுவதும் உண்டு. புலிவேடமிட்டு ஆடும் போது பாடல் பாடப்படும் பழக்கம் ஏதும் இல்லை.

தஞ்சைப் பகுதிகளில் புலியாட்டத்திற்கு இரு தாசா சட்டிகளும் ஒரு டோலும் முதன்மையான இசைக் கருவிகளாகும். மண்ணால் சட்டி போல் ஆடு அல்லது எருமைக் கன்றின் தோலால் மூடி இறுகக் கட்டப்பட்ட சிறுபறை ‘தாசா சட்ட’ எனப்படுகிறது. இது இரண்டு பிரம்புக் குச்சிகளால் தட்டி இசைக்கப்படுகிறது. இக்கருவி ‘கனார்’ என்ற இசை எழுப்புவதாக இருக்கும்.

ஒன்றை முழு நீள அகலம் கொண்ட வட்டமான குழாய் போன்று மரத்தில் குடைந்து உருவாக்கப்படும் ‘டோல்’ கருவியின் இருபுறங்களிலும் ஆட்டுத் தோல் அல்லது கன்றுக் குட்டித் தோல் கட்டப்பட்டு இருக்கும். ‘கும்’ என்ற இசை எழுப்புவதாக இருக்கும்.

புலியின் இயக்கங்களைப் பார்வையாளர்களின் கண் முன்னே கொண்டு வருவது தான் ஆட்டக்காரரின் திறமையாகும். புலிகளுக்கு இடையே சண்டையிடல், சேட்டை பண்ணுதல், ஆட்டைக் கண்டால் பதுங்குதல், பாய்ந்து செல்லுதல், தாக்குதல், உறுமுதல் போன்ற செயல்களை நடித்துக் காட்டுவர். மேலும், சிலம்பாட்டம் ஆடல், பந்தங்கள் சுழற்றி ஆடுதல் போன்றவை புலியாட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் ஆகும்.

சாமி ஊர்வல நிகழ்ச்சிகளில் புலிவேடக்காரர்கள் ஒருமுறை ஆடத் தொடங்கினால் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் ஆடுவர். இடத்தைப் பொறுத்து ஐந்து மணி நேரம் நிகழ்ச்சி நடைபெறும். கோயில் நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை இசுலாமிர்களே அழைப்பதாகப் கூறப்பட்டது. புலிவேடம் குறித்து ஆடப்படும் புலியாட்டத்தின் வரலாறு குறித்துப் பழைய சான்றுகள் கிடைக்கவில்லை.

முதலில் முசுலீம் மக்களால் அதுவும் முகரம் பண்டிகையின்போது மட்டும் ஆடப்பட்டு வந்த இக்கலை இன்று தமிழகம் முழுவதும் பல கிராமங்களிலுள்ள தெய்வங்களுக்காகப் பண்டிகைக் காலங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது.