வண்ணான் வண்ணாத்திக் கூத்து்

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

இக்கூத்தானது வண்ணான் சாதியின் தொழில் நுணுக்கங்களைப் பற்றி வெளிப்படுத்தும் என்பதால் இது வண்ணான் வண்ணாத்திக் கூத்து. இது கரகாட்டத்தின் இடை நிகழ்த்தப்படுகிற நாடகத் தன்மையுடையது.

மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பெரும்பாலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. இக்கலையில் மூன்று முறைகள் உள்ளன.

1. பாட்டு

2. உரையாடல்

3. நடிப்பு

இக்கதைக்குப் பின்னணியாக நையாண்டி மேள இசைக் கருவி இசைக்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியின் கதாபாத்திரங்கள்.

1. வண்ணான்

2. வண்ணாத்தி

இவர்கள் இருவரும் கரகாட்டத் துணைக் கலைஞர்கள். வண்ணாத்தியாக ஆணே வேடம் புனைவதுமுண்டு. இருவரும் தலையில் வெள்ளைத் துணியால் முண்டாசு போலக் கட்டி இருப்பர். வண்ணான் அழுக்குத் துணி மூட்டையுடன் நிற்கும்போது வண்ணாத்தி கஞ்சி கலையத்துடன் வருவார். வண்னான் மனைவியிடம் ‘ஏன் தாமதமாக வருகிறாய்’ என்று கேட்பார். மனைவி அதற்குப் பதில் கூறுவார். இப்படியே இவர்களின் உரையாடல் தொடரும். இப்படியே உரையாடிக் கொண்டு இருக்கையில் அவர்களுக்குள் தகராறு ஏற்படும். நையாண்டி மேளக் கலைஞர்கள் இவர்களைச் சமாதானம் செய்வார்கள். பின் இவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டு கொஞ்ச ஆரம்பித்து விடுவார்கள்.

இந்நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஒரு மணி நேரம் நிகழும். இக்கலை நிகழ்ச்சியில் சலவைத் தொழிலாளர்களின் பிரச்சனை, வறுமை, இல்லாமை துயரம் போன்றவை இடம்பெறுகின்றன.

வண்ணான் நீர்நிலையில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது வண்ணாத்தியை எதிர்பார்த்துக் காத்திருப்பான். கஞ்சி கலையத்துடன் வஞ்சி வரும்போது நடக்கின்ற உரையாடலில் ஒரு பகுதி.

வண்ணாத்தி: அடேய் எம்புருஷா வெள்ளரித் தோட்டத்திலே நம்ப கழுதை மேயுது. ஒங்கண்ணுக்குத் தெரியிலையா? என்னய்யா வேலை பாக்குறவே வெள்ளரித் தோட்டத்திலே கண்ணையா கழுதை மேயுதய்யா யோவ்.

வண்ணான்: வெள்ளரித் தோட்டத்திலே கழுத மேயட்டுண்டி. அடியேய் கழுத மேஞ்சா மயிறு போச்சு. கஞ்சியக் கொண்டாடி.

இவ்வாறாக, அவர்கள் பாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கையில் அவர்களின் தொழில் நுணுக்கம், வாழ்க்கை நிலை போன்றவையும் இடையில் வரும். தற்போது இக்கலை வழக்கில் இல்லை.