| குறியீடுகள் படித்துணர முடியாத அல்லது பொருள் கண்டறிய முடியாத ஒரு வகை வரிவடிவமே குறியீடுகள் ஆகும். இவை சிந்துசமவெளி எழுத்துக்களுக்கும் (தோராயமாக பொ.ஆ.மு 1800) பிராமி எழுத்துக்களுக்கும் (தோராயமாக பொ.ஆ.மு. 300) இடைப்பட்ட சுமார் 1200 ஆண்டுகள் இந்தியாவில் வழக்கிலிருந்துள்ளன. இவ்வகைக் குறியீடுகள் இந்தியாவில் மோதிரங்கள், பானையோடுகள், கல்வெட்டுக்கள், நாணயங்கள் என பலவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை அக்கால மக்களின் கருத்தினைத் தாங்கி நிற்கின்ற வரிவடிங்களாகவே இருக்க வேண்டும். இருப்பினும் தொல்லியலாளர்கள் இவற்றைக் குறியீடுகள் என்றே குறிப்பிடுகின்றனர்.
குறியீடுகள் பற்றிய ஆய்வினை 1881 ஆம் ஆண்டில் முதன் முதலாக பிரான்பில் என்பவர் தொடங்கி வைத்தார். இருப்பினும் இக்குறியீடுகள் கருத்துப் பரிமாற்றத்திற்கு உரிய வரிவடிவங்களாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்து ஆய்வாளர்கள் மத்தியில் நிலவியதால் இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஆனால் தற்போது இக்குறியீடுகள் அதிக எண்ணிக்கையில் கிடைப்பதால் அண்மைக்காலம் முதல் இதன் மீதான ஆய்வுகள் முக்கியத்துவம் பெற்றுவருகின்றன. குறியீடுகள் பற்றிய ஆய்வில் முன்னோடிகளான இ.எச். ஹண்ட், ஜி.யஸ்தானி, பி.கே. தாபர், பி.பி.லால், எஸ். குருமூர்த்தி, ராஜன் ஆகியோர் இவற்றின் தோற்றம், வளர்ச்சி, தொடர்பு ஆகியவற்றைப் பண்பாடு மற்றும் காலநிலை அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டு முக்கிய முடிவுகளை வெளியிட்டுள்ளனர். குறியீடுகள் கிடைக்கும் இடங்கள் கர்நாடக மாநிலம் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள டி.நரசிப்பூர், குஜராத் ஆகிய பிற மாநிலங்களிலும் தமிழகத்தில் திருக்காம்புடலியூர், உறையூர், கரூர், கொடுமணல், அழகன்குளம், மாங்குடி, தேரிருவேலி, பேரூர், வல்லம், சானூர், ஆதிச்சநல்லூர், கொற்கை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளிலும் ஏராளமான குறியீடுகள் கிடைத்துள்ளன. குறியீடுகளும் தமிழ் பிராமி எழுத்துக்களும் தமிழகத்தில் மேற்சுட்டிய பகுதிகளில் நிகழ்த்திய அகழாய்வுகளின் மூலம் கிடைத்த குறியீடுகள் ஒன்றையொன்று ஒத்துக் காணப்படுகின்றன. இக்கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக வல்லம் அகழாய்வில் அகழப்பட்ட குழிகளில் குறியீடுகள் பொறித்த பானை ஓடுகள் கீழ் அடுக்குகளிலும், தமிழ் பிராமி எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் அதற்கு மேற்பட்ட அடுக்குகளிலும் கிடைத்தன. எழுத்துப் பொறித்த பானை ஒடுகள் கிடைக்கத் தொடங்கியவுடன் குறியீடுகள் பொறித்த பானை ஓடுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கின என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. தமிழ்பிராமி எழுத்துக்கள் தமிழகத்தில் தோன்றுவதற்கு முன் அக்கால மக்களின் எண்ணங்களை ஒலி மற்றும் கருத்து வடிவமாக வெளிப்படுத்தக்கூடிய கருவியாக இக்குறியீடுகள் விளங்கியிருக்கக்கூடும் எனவும் இவை தமிழ்பிராமி எழுத்துக்கள் போன்றே இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளதாலும் தமிழ்பிராமி எழுத்துக்களின் வருகைக்குப் பின்னர் இவற்றின் பயன்பாடு குறைந்து காணப்படுவதன் மூலமும் தமிழ்பிராமி எழுத்துக்கள் இக்குறியீடுகளிலிருந்தே தோன்றியிருக்கக்ககூடும் எனவும் ராஜன் குறிப்பிடுகின்றார். |