குப்தர் காசியல் வழக்காறுகள்

முனைவர் மா.பவானி
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

குப்தர்கள்

பொ.ஆ. 4காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிழக்கு உத்திரப் பிரதேசம் அல்லது பீஹாரின் ஒரு பகுதியிலிருந்த சிறிய நாட்டில் குப்தர்கள் தோன்றினர். இந்தியாவில் மௌரிய வம்சத்திற்குப் பிறகு மிகச்சிறப்பாக ஆட்சி செய்து இந்து மதத்தைப் போற்றி வளர்த்த அரசர்களாவர். இவர்களது அரசு பொ.ஆ.3ஆம் நூற்றாண்டிலிருந்து 6ஆம் நூற்றாண்டு வரை வட இந்தியாவில் நிலை பெற்றுள்ளது.இவ்வம்சத்தினைத் தோற்றுவித்தவர் ஸ்ரீகுப்தர் ஆவார். இவ்வம்சத்தில் முதலாம் சந்திரகுப்தர், சமுத்திர குப்தர், ஸ்கந்த குப்தர் ஆகியோர் மிகக் குறிப்பிடத்தக்கவர்களும் சிறந்த அரசு புரிந்தவர்களும் ஆவர். இவ்வரசர்கள் காசுகளை வெளியிட்டுள்ளனர்.

குப்தர்கள் காசுகளின் சின்னங்கள்

குப்தர்கள் தங்களுக்கு முன்பாக ஆட்சி நடத்திய குஷாண காசுகளைப் பின்பற்றி தங்களது காசுகளை வெளியிட்டுள்ளனர். ஆனால், குஷாண காசுகளை விட தரமானவையாகவுள்ளன. குப்தர்களின் காசுகளை முந்தைய குப்தர் காசுகள், பிந்தைய குப்தர் காசுகள் என இரண்டாகப் பிரிக்கலாம். முந்தைய குப்தர் காசுகளின் முன்புறம் கம்பீரமாக நிற்கும் அரசரின் உருவம் கால்சட்டை அணிந்து, தொப்பி இல்லாது பொறிக்கப்பெற்றுள்ளன. ஆனால், பிந்தைய குப்தர் காசுகளில் கால்சட்டைக்குப் பதிலாக இந்திய முறையில் வேஷ்டி அணியப்பெற்ற அரசன் பொறிக்கப்பெற்றுள்ளான். மன்னரின் கையில் ஈட்டி, விருதுக்கொடி, போர்க்கொடி, வில் அல்லது வாள் இவற்றுள் ஏதோ ஒன்று காணப்படுகிறது. அவர்களது பரம்பரைச் சின்னமான கருடன் உருவக்கொடியும் (கருடத்வஜம்) இடம்பெறும். அரசர்கள் மட்டுமின்றி அரசியும் அரசரும் சேர்ந்து இருப்பதுபோல் உள்ள காசுகளையும் வெளியிட்டுள்ளனர். மன்னர்களது பெயர்களை எழுதியுள்ளனர்.

பின்புறம் துவக்கத்தில் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்த அர்டோக்ஷா என்ற குஷான தெய்வத்தின் உருவம் இடம்பெறும். நாளடைவில் அர்டோக்ஷாவிற்குப் பதிலாக அவர்களுக்கு இணையான லட்சுமியின் உருவத்தைப் பொறித்தனர். முதலில் கையில் தாமரைப்பூவுடனும் பின்னர் தாமரைப்பூவில் நிற்பதும் போலவும் சின்னங்களைப் பொறித்துள்ளனர்.

காசுகளில் இடம்பெற்ற வாசகங்கள்

குஷாணர்களைப் போல் குப்தர்களும் சீன முறையைப் பின்பற்றி மேலிருந்து கீழாகவே பெயர்களைப் பொறித்துள்ளனர். அரசனின் உருவத்திற்கு மேல் நாணயத்தின் ஓரமாக, வட்டமாக, பிராமி எழுத்தில், சமஸ்கிருத மொழியில் வாசகங்களைப் பொறித்துள்ளனர். குப்த நாணயங்களில் உருவத்தைச் சுற்றி கவிதை நடையில் வாசகங்கள் இடம்பெறுகின்றன. பெரும்பாலும் மன்னர்களின் மகத்துவத்தைப் பற்றியும் அவரது நற்பண்புகளால் மறு உலகில் கிடைக்கப்பெறும் பேரின்பம் பற்றிய வாழ்வு பற்றிய வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. சமுத்திர குப்தரின் காசுகளில் 6 வகையான வாசங்களும், இரண்டாம் சந்திர குப்தரின் காசுகளில் 10 விதமான வாசகங்களும் முதலாம் குமார குப்தரின் காசுகளில் 24 வகையான வாசகங்களும் இடம்பெறுகின்றன. இரண்டாம் சந்திரகுப்தர் போன்ற பிந்தைய குப்த மன்னர்கள் காசுகளில் பின்புறம் குப்த ஆண்டு பொறிக்கப்பெற்றிருக்கும்.

உலோகம்

குப்தர்கள் பெரும்பாலும் தங்கத்தாலான காசுகளையே வெளியிட்டுள்ளனர். இரண்டாம் சந்திரகுப்தரே முதன் முதலாக வெள்ளிக் காசுகளை வெளியிட்ட மன்னனாவார். மேற்கிந்திய ஷத்ரபர்களுடன் இவருக்குள்ள தொடர்பால் குப்த ஆண்டு 90 இல் (பொ.ஆ.409இல்) வெள்ளிக் காசுகளை வெளியிட்டுள்ளார். ஸ்கந்த குப்தரும் வெள்ளி காசுகளை வெளியிட்டுள்ளார். இரண்டாம் சந்திரகுப்தரும் முதலாம் குமாரகுப்தரும் செம்புக் காசுகளையும் வெளியிட்டுள்ளனர். பொதுவாக, குப்தர்கள் தங்கம், வெள்ளி, செம்பு, கலப்பு உலோகம் இவற்றாலான காசுகளை வெளியிட்டுள்ளனர்.