சிந்துவெளிக் குறியீடுகள்

முனைவர் மா. பவானி்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்


உலகில் மிகச் சிறந்த நான்கு நாகரிகங்களான எகிப்திய நாகரிகம், மெசபடோமிய நாகரிகம், சீன நாகரிகம் போன்று சிறந்த நாகரிகத்தைப் பெற்ற இந்தியாவின் தொன்மை எழுத்துக்களான சிந்து வெளி எழுத்துக்கள் இன்றும் படிக்கப்பெறவில்லை. 1872 - 73ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் கன்னிங்காம் முதல் முத்திரையை அரப்பா நகரத்திலிருந்து வெளிக்கொணர்ந்தார். அது முதற்கொண்டு ஐராவதம் மகாதேவன் போன்ற இந்திய அறிஞர்களும் அஸ்கோபார்போலா போன்ற அயல் நாட்டு அறிஞர்களும் இம்முத்திரைகளில் அதிக அளவில் கவனம் செலுத்தி படிக்க முயற்சித்துள்ளனர். இவற்றின் வாயிலாக 3700க்கும் மேற்பட்ட பொறிப்புகள் இருப்பதையும் அவற்றில் பெரும்பாலானவை சுடுமண்ணினாலான முத்திரைகள் (seals) மற்றும் முத்திரைப் பதிவுகளாகவும் (sealings) இருப்பது அறியப்பட்டுள்ளது.

இம்முத்திரைகள் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அதிகபட்சமாக 27 வரி வடிங்களைத் தாங்கி நிற்கின்றன. ஒருவரி முதற்கொண்டு ஏழு வரிகள் வரையுள்ள முத்திரைகளும் கிடைத்துள்ளன. இம்முத்திரைகள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டவையாகும். முத்திரைகளில் பெரும்பாலும் முன்னோட்டு காணப்பெறுவதில்லை. பின்னொட்டே காணப்பெறுகின்றன என ஐராவதம் மகாதேவன், அஸ்கோபார்பலோ போன்ற அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவற்றின் உருவ ஒற்றுமையைக் கொண்டு இவை திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததெனவும் கூறுகின்றனர். சுமார் 400 குறியீடுகளைக் (signs) சிந்து எழுத்து முறை பெரும்பாலும் சித்திர வடிவு பெற்றுள்ளது 2500க்கும் 2000க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்நாகரிகம் செழித்தோங்கி கி.மு. 1800 வரை தொடர்ந்தது எனத் தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.